புலிகளே மக்கள் மக்களே புலிகள்!

ஒரு சிறிய நிலப்பரப்புக்கு உள்ளே விடுதலைப் புலிகளை முடக்கி வைத்துள்ளோம் என சிங்கள தேசம் மார்தட்டி வந்த நிலையில் மார்ச் மாத ஆரம்பம் முதல் கள முனையில் நடைபெற்று வரும் சம்பவங்கள், களமுனை விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக மாறி வருவது போன்ற உணர்வைத் தோற்றுவித்துள்ளது.

முதலாம் திகதி முதல் முல்லைத் தீவு மாவட்டத்தில் முன்னரங்கக் களமுனைகளில் நடைபெற்றுவரும் மோதல்களுக்கு அப்பால் இராணுவத்தினர் எதிர்பார்த்திராத இடங்களில் பல ஊடுருவல் தாக்குதல்களும் கரும்புலித் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் மகுடம் வைத்தாற் போன்று 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேராவில் பகுதியில் நடைபெற்ற ஊடறுப்புச் சமரில் ஆறு ஆட்டிலறித் தளங்கள் அழிக்கப் பட்டுள்ளன. இந்தத் தளங்கள் அழிக்கப்பட முன்னதாக அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அந்த ஆட்டிலெறிகளைக் கொண்டே இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியிருப்பதும் 3 கரும்புலிகள் தவிர ஏனையோர் தப்பிச் சென்றிருப்பதாகவும் படைத் தரப்பிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் தேராவில் தற்போது கடும் மோதல் நடப்பதாக இராணுவத்தினரால் வர்ணிக்கப்படும் புதுக்குடியிருப்பு நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

தாம் கைப்பற்றிய பகுதிகள் என இராணுவம் நினைத்துக் கொண்டிருக்கும் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருக்கும் செய்தியே இராணுவத்தினர் மத்தியில் பீதியைக் கிளப்பப் போதுமானது. இது தவிர அவர்கள் இராணுவத்தினர் மத்தியில் பீதியைக் கிளப்பப் போதுமானது. இது தவிர அவர்கள் இராணுவ உயரதிகாரிகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடாத்தி விட்டுத் தப்பிச் செல்வதும் இராணுவத்தினரின் மனவுறுதியை நிச்சயம் குலைத்தே விட்டிருக்கும். வருடக் கணக்கு, மாதம் கணக்கு, வாரக் கணக்கு, நாட் கணக்கு, மணிக் கணக்கு எனக் காலக்கெடு விதித்த வாய்கள் தற்போது மௌனித்துப் போய் உள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது.

போதாதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்தப் பிரதேசமான றுகுணுப் பிரதேசத்திலே காலி அக்குரஸ்ஸவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பிரதேச மட்ட அரசியல்வாதிகள் சிலர் கொல்லப் பட்டிருக்கின்றனர். அமைச்சர் மஹிந்த விஜேசேகர கடும் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். நீண்ட காலத்துக்குப் பின்னர் நடைபெற்ற இத்தகைய தாக்குதல் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்து விட்டது எனக் கூறிப் பெருமைப் பட்டோருக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்ப காலம் முதலாக இராணுவ விற்பன்னர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்து வருகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் அவ்வாறு தான் இருக்கப் போகின்றார்கள் என்பதையே அண்மைக்காலச் சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.

விடுதலைப் புலிகளைப் பற்றிய மதிப்பீடுகள் எவருக்காவது தவறிப் போகலாம். ஆனால் அவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் வைத்துள்ள மதிப்பீடு என்றுமே மாறப் போவதில்லை. ஏனெனில், மக்களே புலிகள் புலிகளே மக்கள்.

Comments