தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பும் உணவுப் பொருட்கள் யாருக்குச் சென்று சேர்கிறது?: தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் கேள்வி

தமிழக அரசு இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஏற்கனவே நிதி திரட்டி உணவுப் பொருட்களை அனுப்பியது. அவை தமிழர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அறிவித்தது. எனினும் அவை உரியவர்களுக்குத்தான் சென்று சேர்கிறதா? என தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து தமீழ் மக்கள் பண்பாட்டு கழகம் தெரிவித்துள்ளதாவது:-

தமிழக அரசு இலங்கையில் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு ஏற்கனவே நிதி திரட்டி உணவுப் பொருட்களை அனுப்பியது. அவை தமிழர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக அறிவித்தது. தற்போதும், அதே போல உணவு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அவை உரியவர்களுக்குத்தான் சென்று சேர்கிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

ஏற்கனவே அனுப்பப்பட்ட பொருட்களில் பாதியளவுகூட பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சென்று சேரவில்லையென்றும், அவை நாள்தோறும் தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்களவர்களுக்கே சென்று சேர்வதாகவும் தகவல்கள் வருகின்றன. அவை தவறான தகவல்களாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம்.

இந்த சந்தேகம் எழுவதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. தினமும் குண்டுவீசப்படும் அப்பகுதிகளில் ஐ.நா. பார்வையாளர்களோ, செஞ்சிலுவைச் சங்கங்களோ, தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளோ யாரும் இல்லை. அவர்கள் இனைவரையும் சிங்கள அரசு வெளியேற்றிவிட்டது.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உதவிப் பொருட்களை அனுப்பும் அதே நேரத்தில், அனுப்பப்படும் பொருட்கள் உரியவர்களுக்குச் சென்று சேர்ப்பதில் தமிழக அரசு அக்கறையோடு இருக்க வேண்டும் என விரும்புகின்றோம். சிங்கள அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ என்ற பெயரில் உலக நாடுகளிடம் கையேந்தி வருவதையும், அந்த உதவிகள் அனைத்தையும் தனது தமிழின அழிப்புப் படுகொலைக்குமே பயன்படுத்தி வருவதையும் பார்க்கின்றோம்.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியிலிருந்தும் பார்வையாளர்கள், சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், நம் நாட்டில் இயங்கும் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் பொருட்கள் விநியோகம் செய்வதைக் கண்காணிக்கும் வகையில் உணவுப் பொருட்களை அனுப்புவதை மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் வாழம் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பொருட்களைத் திரட்டி வருகின்றனர். இன்று புறப்படவுள்ள அக்கப்பல், தனது என்லையில் நுழைந்தால் தாக்குவோம் என சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது. எனவே, தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத்தான் சென்று சேர்கிறது என்பதை உறுதிப்படுத்துவதற்காக, ஏற்கனவே உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்ட விதம், அதற்காகப் பெறப்பட்ட அனுமதி, தற்போது அனுப்பப்படவுள்ள விதம், ஆகியவற்றைக் குறித்துத் சரியான தகவல்களைப் பெற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசிற்கு மனு செய்யப்பட்டுள்ளது.

நாள்: 27-3-2009. கேட்கப்பட்டுள்ள கேள்விகள்

1. இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை தமிழக அரசு ஏற்கனவே அனுப்பி வைத்தது. அவை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்று சேர்ந்தது என்பதை யார் உறுதிப்படுத்தியது?

2.முல்லைத் தீவில் சிங்கள அரசு குண்டுவீசும் பகுதிகளில் ஐ.நா. தொண்டு அமைப்புகளோ, செஞ்சிலுவைச் சங்கமோ செயல்படாத பட்சத்தில், யாரைக்கொண்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன? அப்பாவி மக்கள் மீது குண்டுவீசும் சிங்கள அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் உணவுகளை வழங்குகிறது என்று கூறுவதை எப்படி நம்புவது? அப்படியானால் உணவுப் பொருட்களை அனுப்புவது யாருக்கு?

3. ஒரு அன்னிய நாட்டில் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்ப உள்நாட்டில் என்னென்ன அனுமதிகளைப் பெறவேண்டும்? அதுபோல் பெறப்பட்டதா?

4.புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பொருட்களைத் திரட்டி வருகின்றனர். இன்று புறப்படவுள்ள அக்கப்பல், தனது என்லையில் நுழைந்தால் தாக்குவோம் என சிங்கள இனவெறிஅரசு அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தமிழக அரசு அனுப்பும் பொருட்கள் பாதிக்கப்படும் மக்களுக்குச் சென்று சேர்வதை உறுதிப்படுத்த தமிழகத்திலிருந்து நடுநிலைப் பார்வையாளர்கள் யாராவது அனுப்பப்படுகின்றார்களா? அப்படி அனுப்ப தமிழக அரசிடம் ஏதாவது திட்டமுள்ளதா?

5. தமிழக முதல்வர் அண்மையில், தோணிகளைத் தயார்செய்து அதில் படைகளை ஏற்றிச்சென்று ராஜபக்சவை கைதுசெய்து கொண்டுவரட்டும். யார் தடுக்கிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டதாக செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது. அப்படி அன்னிய நாட்டு மக்களைக் கைதுசெய்ய மக்கள் போகலாமா? குறைந்தது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதற்காவது தமிழக அரசு அனுமதிக்குமா?

6. அனுமதி வழங்கப்படுவதாக இருந்தால் அது எழுத்துமூலமாகத் தரப்படுமா?

என கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

Comments