பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்: வைகோ

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, கருணாநிதி முன்கூட்டியே இரங்கல் கவிதை எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது கனவு பலிக்காது. பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார் என்று தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்த மூன்று பேருக்கு மட்டுமே கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். தற்போது, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாளர் என்பது போல கபடநாடகம் ஆடுகிறார். வரும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பெறப் போவதில்லை.

தமிழகம், புதுவையில் அவர்களுக்கு ஒரு இடம் கூட கிடைக்க போவதில்லை. தி.மு.க.,விற்கும் ஒரு இடம் கூட கிடைக்காது. தற்போது, தனித்தமிழ் ஈழம் அமைய அ.தி.மு.க., பாடுபடும் என்று அ.தி.மு.க., அறிவித்திருப்பது மிக முக்கியமான விஷயம். முடிவெடுத்தால் அந்த முடிவில் உறுதியாக இருக்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும்.

பிரபாகரன் பிடிபட்டால் போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். ஆனால், தற்போது தனியார் 'டிவி' ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'பிரபாகரன் எனது நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்,' என்று கூறியிருக்கிறார். பிரபாகரன் எப்போது சாவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி

ஈழத்தமிழர் பிரச்னைக்காகவே மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டவர் அவர். முன்கூட்டியே பிரபாகரனுக்கு இரங்கல் கவிதையை கருணாநிதி எழுதி வைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும். அவர் எண்ணம் பலிக்காது; பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்.எனக்கு மரண தண்டனை விதித்தாலும், பிரபாகரனுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன்.

ராஜபக்சேவை வன்னியில் உள்ள புதைகுழியில் புதைக்க வேண்டும். என்றார்.

Comments