மக்களை பணயக் கைதிகளாக்கி முன்னேறிய சிங்களப் படை 'பாதுகாப்பு வலய'த்தில் கோரத் தாண்டவம்: 1,496 தமிழர்கள் படுகொலை; அவர்களில் 476 பேர் சிறுவர்கள்

வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியில் இருந்து வெளியேறிச் சென்று - நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனக் கொலைத் தாக்குதலில் இன்று 1,496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரவலம் அங்கு நிகழ்வதாக புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை - தம்மிடம் இருக்கும் அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் - பாரிய படை நடவடிக்கையினை தொடங்கினர்.

மாத்தளன் தொடக்கம் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதிகளில் - பொதுமக்களை நேரடியாகவே இலக்கு வைத்து - ஆட்லெறி பீரங்கிக் குண்டுகள், எறிகணை கொத்து எறிகணைக் குண்டுகள், பல்குழல் வெடிகணைகள், குறுந்தூர மற்றும் நெடுந்தூர பீரங்கி குண்டுகள், கனரக மற்றும் தொலைதூர துப்பாக்கிகள் மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் இன்று மூர்க்கத்தனமாக நடத்தினர்.





அதனைத் தொடர்ந்து - 'பாதுகாப்பு வலய' பகுதிகளில் இருந்து வெளியேறிச் சென்று நேற்றைய நாள் தம்மிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை பணயக் கைதிகளாக முன்னிறுத்தி, இன்று அதிகாலை அளவில், அம்பலவன்பொக்கணை பகுதி ஊடாக சிறிலங்கா படையினர் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

மக்களை பணயக் கைதிகளாக்கி சிங்களப் படையினர் முன்னேறியதால் - எதிர்த்தாக்குதல்களை நடத்த முடியாமல் விடுதலைப் புலிகளின் படையணிகள் அப்பகுதியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டதாக, விடுதலைப் புலிகளின் வன்னி கட்டளை மையத்தை மேற்கோள் காட்டி எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கின்றார்.

இருந்த போதும் - தமது இந்த பணயக் கைதிகள் முயற்சிக்கு ஒத்துழைக்காத மக்கள் மீது சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சிறிலங்கா படையினர், இதன் போது பெருமளவிலான மக்களைக் கொன்றனர்.





இந்த தாக்குதல்களும் படையெடுப்பும் - இன்று திங்கட்கிழமை அதிகாலை 2:00 மணி தொடக்கம் நடத்தப்பட்டன.

சிங்களப் படையினர் ஏவிய ஒருவகையான புகைக்குண்டுகளால் ஏராளமான தமிழர்கள் மூச்சுத் திணறி இறந்ததாகவும், ஒரு கட்டத்தில் தானும் அவ்வாறான தாக்குதலுக்கு உள்ளாகி மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதாகவும் 'புதினம்' வன்னிச் செய்தியாளர் இந்தப் பேரவலத்தின் நடுவில் இருந்து தெரிவித்தார்.

சிங்களப் படையினர் வீசிய ஒருவகையான குண்டுகள், வீழ்ந்து வெடித்த இடங்களில் தீப்பற்றி எரிந்ததால், பலர் உடல் கருகி கொல்லப்பட்டுள்ளர். மக்கள் வாழ்ந்த கூடாரங்கள், கொட்டில்கள் பலவும் எரிந்து நாசமாகியுள்ளன.

சிங்களப் படையினரின் அகோர இனக்கொலைத் தாக்குதல்கள் நடந்த இந்த பகுதிகளில் - ஏராளமான கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் சிதறிக்கிடக்கின்றன.

பாதுகாப்புக்காய் மக்கள் ஓடிப் பதுங்கிய காப்பகழிகளுக்குள்ளும் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாலும் பெருமளவிலான மக்கள் அவற்றுக்கு உள்ளேயே கொல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஏராளமானோர் இப்போது அதிகளவில் இறந்து கொண்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களின் உடல்கள் இப்போதும் முள்ளிவாய்கால், வலைஞர்மடம் பகுதிகளுக்கு கொண்டுவரப்படுகின்றன எனவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.



















Comments