முப்படைகளும் இணைந்து நடத்திய கொடூரத் தாக்குதல்: இன்று மட்டும் 272 பேர் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து இன்று பல முனைகளில் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 3:45 நிமிடமளவில் புதுக்குடியிருப்பு கிழக்கில் உள்ள இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீது சிறிலங்காவின் இராணுவத்தினரும், கடற்படையினரும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு முன்நகர்வுக்கான முயற்சிகளை மேற்கொண்ட அதேவேளையில் வான்படையின் வானூர்திகள் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்களையும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்தின.

செறிவான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியவாறே முன்நகர்வு முயற்சியை படையினர் மேற்கொண்டனர்.

பொதுமக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா படையினரின் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 8:30 நிமிடம் வரையிலான காலப்பகுதியில் மட்டும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் எட்டுத் தடவை இப்பகுதிக்கு வந்து கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களை மக்கள் பெருமளவுக்கு செறிவாக வசிக்கும் பகுதிகளை நோக்கி நடத்திச் சென்றுள்ளன.

இதன் பின்னரும் வான்குண்டு வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுளன்ளன. இந்தத் தாக்குதல்களில் 272 பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் பெரும் தொகையானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள குடியிருப்புக்களை நோக்கி இன்று காலை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் சாளம்பன் என்ற இடத்தில் மட்டும் 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியை நோக்கி சிறிலங்கா கடற்படை கப்பல்களில் இருந்து நடத்தப்பட்ட செறிவான எறிகணைத் தாக்குதல்களில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வலைஞர்மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 172 பேர் காயமடைந்த நிலையில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெறித்தனமான தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்தின் மீது நடத்திவருகின்றனர்.

இதேவேளையில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களைத் தொடர்ந்து கனரக ஆயுதங்களையும் வான் தாக்குதல்களையும் நடத்தப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் இன்று பிற்பகல் அறிவித்த பின்னரும் அவ்வாறான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் குற்றம்சாட்டியிருக்கின்றார்.

வான் தாக்குதல்கள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று பிற்பகல் 12:50 நிமிடமளவிலும் பின்னர் 1:10 நிமிடமளவிலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

"அனைத்துலக சமூகத்தை குறிப்பாக தமிழ்நாட்டை ஏமாற்றும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் நடந்துகொள்கின்றது" எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

வலைஞர்மடம் பகுதியை நோக்கிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா படையினர் பொதுமக்களின் குடியிருப்புக்களை இலக்கு வைத்து தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments