ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவருக்கு வைகோ வேண்டுகோள்

ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு வைகோ அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு:

பெறுநர்:
மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்கள்,
அமெரிக்க குடியரசுத் தலைவர்,
வெள்ளை மாளிகை,
வாசிங்ரன்.

அமெரிக்க குடியரசுத் தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம்.

இந்தியாவிலும், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்து கோடி தமிழர்கள் சார்பிலும் இலங்கையின் சிங்கள இனவெறி அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்களை இனப்படுகொலை செய்து வருவதை இரத்தம் கசியும் இதயத்தோடு தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதுடன் இலங்கையில் வாழும் தமிழர்களைப் பாதுகாக்கக்கோரி இந்த விண்ணப்பத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

கடந்த 30 ஆண்டுகளில் ஒரு இலட்சம் தமிழர்கள் இலங்கைத் தீவில் சிறிலங்கா அரசின் இராணுவத் தாக்குதல்களினால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தொன்று தொட்டு வாழ்ந்து வந்த பத்து இலட்சம் தமிழர்கள் தங்களது தாயக மண்ணை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு உள்ளனர்.

இப்போது இலங்கையின் முல்லைத்தீவில் மூன்றரை இலட்சம் தமிழர்கள் உணவும் மருந்தும் இன்றி சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள்மீது சிறிலங்கா வான்படை சரமாரியாகக் குண்டுகளை வீசி கொத்து கொத்தாக படுகொலை செய்து வருகிறது.

சிறிலங்கா அரசின் இத்தகைய இனப்படுகொலைத் தாக்குதல்களை எதிர்த்துத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

உலகின் தொன்மையான பழங்குடி இனங்களுள் ஒன்றான தமிழர்களாகிய நாங்கள், அமெரிக்க அரசு மனிதாபிமான நோக்கோடு இலங்கைப் போரைத் தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விடுதலைப் புலிகள் இயக்கம் 2001 ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையை முன்னிட்டு தாங்களாகவே முன்வந்து போர்நிறுத்தத்தை அறிவித்தனர்.

உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தால் வேறு வழியின்றி சிறிலங்கா அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னர் அந்தப் போர் நிறுத்தத்தை சிறிலங்கா அரசுதான் முறித்துக்கொண்டு படுகொலை தாக்குதல்களை இன்றுவரை தொடர்கிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் போர் நிறுத்தத்தை அறிவித்த போதும் சிறிலங்கா அரசு அதை ஏற்கவில்லை. இப்போதும் தாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று விடுதலைப் புலிகள் இயக்கம் உடனடியாக நேற்று (26.4.2009) போர் நிறுத்தத்தை அறிவித்து உள்ளனர். ஆனால், சிறிலங்கா அரசு அதையும் ஏற்கவில்லை.

இலங்கைத் தமிழர்கள் படுகொலை குறித்து 1995 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அரச தலைவர் தலைவர் பில் கிளின்ரன் அவர்களுக்கு நான் கோரிக்கை விண்ணப்பம் அளித்து இருந்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டு எனக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தங்களுக்கும் இப்பிரச்சனை குறித்து நான் விண்ணப்பங்கள் கொடுத்து உள்ளேன். நெருக்கடியான இவ்வேளையில் தமிழர்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக தாங்கள் திகழ்கிறீர்கள்.

இலங்கையில் வாழும் தமிழ் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி அவர்களைப் பாதுகாக்கத் தாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நாங்களும் எங்கள் தலைமுறையினரும் நன்றியோடு இருப்போம்.

தங்கள் அன்புள்ள
வைகோ
பொதுச் செயலாளர்
(மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சி)
(மற்றும்: ஆசிரியர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "ஆம் நம்மால் முடியும்")

Comments