டென்மார்க்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைச் சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுத்த முடிவால் ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிகளாகத்தான் சித்தரிக்கப்படுவார்கள் என டென்மார்க்கில் பாடசாலை ஆசிரியராக இருக்கும் மனோ என்னும் தமிழர் தெரிவித்துள்ளார்.

இக்கூற்றை கவனப்படுத்தும் வகையில் டென்மார்க் தொலைக்காட்சியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு தனது பகுதி காவல்துறை பணிமனைக்கு சென்று சரணடையப் போவதாக காவல்துறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்யவில்லை.

தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த மனோ, தனது இந்த முடிவானது டென்மார்க் அரசியல்வாதிகளை கவர்ந்து இழுக்கும் ஒரு முடிவு எனவும் மற்றும் டென்மார்க் பயங்கரவாத சட்டத்துடன் நேரடியாக முரண்பட தான் முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.

தொலைக்காட்சிக்கு இது தொடர்பாக பேட்டி வழங்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். ஆனால் எதிர்வரும் நாட்களில் தாம் இந்த விசித்திர சரணடைவு குறித்து விசாரிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.

டென்மார்க் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய காணொலி

இதேவேளையில் டென்மார்க் வாழ் ஈழத் தமிழ் மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டமானது நேற்று டென்மார்க்கின் தலைநகரான கொபன்காபனில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் கலந்துகொண்டதுடன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக முனைப்புடன் நடைபெற்றது.

டென்மார்க்கில் தமிழர்கள் தாங்கள் வாழும் பிரதேசங்களில் இருந்து, பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் தலைநகரத்திற்கு வந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





திரண்டிருந்த ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் தங்கள் வாய்களைக்கட்டி, டென்மார்க், ஐரோப்பியக் கொடிகளை ஏந்தியவண்ணம் சிறிலங்கா இராணுவத்தால் கோரமாகக் கொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின் படங்களை சிறிய பதாதைகளாகக் காட்சிப்படுத்திய வண்ணமும், தீப்பந்தங்களையும் பிடித்த வண்ணமும் நாடாளுமன்றத்திடலில் இருந்து 3 கிலோ மீற்றர் வரை நகர வீதிகளில் அமைதிப் பேரணியாகச் சென்று நகரசபையை அடைந்தனர்.

ஏதிர்வரும் வியாழக்கிழமை டென்மார்க் மந்திரிகள் சபை கூடுகின்றபோது நிரந்தரப் போர்நிறுத்தம் சம்பந்தமாக டென்மார்க் நாடாளுமன்றத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments