தென்னாசியாவின் அதியுயர் கல்விமான்கள் தமிழினப் படுகொலை தொடர்பில் உலகத் தலைவர்களுக்கு கடிதம்

இலங்கையில் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபையும் உலக சமுதாயமும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தெற்காசிய நாடுகளின் அரசு தலைவர்களுக்கு - தெற்கு ஆசிய நாடுகளின் முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், சமயத் தலைவர்கள் ஆகியோர் கூட்டறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

தென்னாசியாவின் அதியுர் கல்விமான்களான

கே.ஜி.கண்ணபிரான் (தேசியத் தலைவர், மக்கள் உரிமைக் கழகம், பியுசிஎல்)

ஐதரபாத். நீதிபதி இராஜிந்தர் சச்சார் (முன்னாள் தலைமை நீதிபதி, புதுடில்லி உயர்நீதிமன்றம்)

எழுத்தாளர் அருந்ததி ராய் (புதுடில்லி)

புஷ்கர் ராஜ் (பொதுச் செயலாளர், பியுசிஎல்)

பமீலா பிலிப்போஸ் (வுமன்ஸ் பீச்சர் சர்வீஸ்)

சுவாமி அக்னிவேஷ் (புதுடில்லி)

பேராசிரியர் அமித் பாதுரி (மதிப்புறு பேராசிரியர், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்)

புதுடில்லி அருட்திரு பி.ஜே.லோறன்ஸ் (பேராயர், தென் இந்திய திருச்சபை, நாந்தியால் மறை மாவட்டம்)

பிரபுல் பித்வாய் (கட்டுரையாளர், புதுடில்லி)

சுமித் சக்ரவர்த்தி (ஆசிரியர், மெயின்ஸ்ட்ரீம் ஆங்கில வார ஏடு, புதுடில்லி)

தபன் போஸ் (புதுடில்லி)

றீட்டா மன்சந்தா (மனித உரிமைகளுக்கான தெற்கு ஆசிய அரங்கம் - நேபாளம்)

பேராசிரியர் கமல் மித்ர செசனாய் (அனைத்துலக ஆய்வுகள் பள்ளி, தலைவர் ஆசிரியர்கள் சங்கம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடில்லி)

எர்னஸ்ட் தீன தயாளன் (பெங்களூர்)

பிரதீப் பிரபு (சேத்காரி சங்கதனா, தகானு/ மும்பாய்)

பிரசாந்த் பூஷன் (வழக்குரைஞர், உச்ச நீதிமன்றம், புதுடில்லி)

எம்.ஜி.தேவசகாயம் (ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, சென்னை)

குமார் முரளீதரன் (பத்திரிகையாளர், புதுடில்லி)

அருட்திரு தயானந்த் கார் (மதுரை)

ஹென்றி திபேன் (மக்கள் கண்காணிப்பகம், மதுரை)

எம்எஸ்எஸ் பாண்டியன் (சென்னை)

சுசில் பியாகுரெல் (முன்னாள் ஆணையர், நேபாள மனித உரிமை ஆணையம், காத்மாண்டு)

முபாஷிர் ஹசன் (லாகூர், பாகிஸ்தான்)

ஆகியோர் உட்பட மற்றும் பலர் கையெழுத்திட்டுள்ள அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் 'அணுகுண்டுக்கு நிகரான அனல் குண்டுகள்' (Thermobaric bomb) பயன்படுத்தப்படுவது உண்மை எனில், சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் இந்த குண்டுகளை எந்த நாடு வழங்குகிறதோ அந்த நாட்டின் அரசுக்கு எதிராகவும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான ஆணையத்தின் மூலம் அனைத்துலக சமுதாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையின் வடபகுதியில் மிகச் சிறிய வன்னிப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படுவது குறித்து வெளியாகி வரும் செய்திகளைக் கண்டு நாங்கள் அஞ்சுகின்றோம்.

கடந்த இரு நாட்களில் மட்டும் 700-க்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும் செய்திகள் வெளியாகி உள்ளன. இவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே விடுதலைப் புலிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதிலிருந்து, கொல்லப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் அந்தப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் என்பது தெரிகிறது. இந்த மக்கள் படுகொலையில், 'அணுகுண்டுக்கு நிகரான அனல் குண்டுகள்' (Thermobaric bomb) பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கடுமையான ஐயங்கள் எழுந்துள்ளன.

இந்தப் படுகொலைகள் நிகழும் ஆபத்து குறித்து, கடந்த சில வாரங்களாகவே நாங்கள் கவலைகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றோம். ஏறக்குறைய 1,50,000 அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படலாம் என்பது வாய்ப்பல்ல உண்மை நிலை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

இது தங்களால் அறிவிக்கப்பட்டுள்ள, 'பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்' பயனாக ஏற்பட்டுள்ள 'இறுதி வெற்றி' என்று சிறிலங்கா அரசு சித்திரிக்க முயல்வதையும் நாங்கள் சுட்டிக் காட்டியிருக்கிறோம். எதிர்வரும் 14 ஆம் நாள் வரவிருக்கும் சிங்களப் புத்தாண்டுக்கு முன்பாகவே 'இறுதித் தீர்வு' காண்பதற்கு சிறிலங்கா அரசு உந்தித் தள்ளி வருகின்றது.

எங்களின் பேரச்சம் உண்மையாக மாறி வருகிறது. பெருமளவிலான பீரங்கிக் குண்டுகள், வெடிகுண்டுகளின் தாக்குதலும், ஏராளமான தமிழர்களின் இறப்பும், வன்னிப் பகுதியானது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் சுடுகாடாக மாறி வருகிறது என்பதையே காட்டுகிறது. ஈவு இரக்கமற்ற சிறிலங்கா படையினரால் இப்போது 'அணுக்குண்டுக்கு நிகரான அனல் குண்டுகள்' (Thermobaric bomb) பயன்படுத்தப்படுவதன் மூலம், நிலைமையை சிறிலங்கா அரசு வரம்பு மீறி கொண்டு சென்றுவிட்டது. தமிழர்கள் "முழுமையாக அழித்தொழிக்கப்படுவார்கள்'' என்று சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சேவே அச்சுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பு என்று பழி சுமத்தி வந்தபோதிலும், சிறிலங்கா அரசே இப்போது ஒரு பயங்கரவாத அரசாக மாறியிருக்கிறது. மனித உரிமைகளுக்கு சிறிலங்கா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரி வரும் எவரையும் அல்லது எந்த அமைப்பையும், வெளிப்படையாக இழிவுபடுத்தும் முறையில் சிறிலங்கா அரசு அதிகாரிகள் தாக்கி வருகின்றனர்.

சிறிலங்கா அரசு அதிகாரிகள் தங்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவது குறித்த சிக்கலை, பிரித்தானியா மக்களவை விவாதத்தில் எழுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரே ஆளானார்கள் என்பதில் இருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும்!

முன்னாள் ஐ.நா. மனித உரிமை ஆணையர் லூய்ஸ் ஆர்பர், நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு, தன் விருப்பப்படி நடத்தப்படும் கொலைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டான் ஆகியோரும் கூட சிறிலங்கா அதிகாரிகளின் தாக்குதலுக்குத் தப்பவில்லை.

இலங்கையில் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும், நிறுவனங்களையும் படிப்படியாக அழிப்பதற்கு, 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்பதை சிறிலங்கா அரசு ஒரு மூடுதிரையாகப் பயன்படுத்தி வருகிறது என்பதுதான் உண்மை நிலை.

சிறிலங்கா அரசும் தன் துணை அமைப்புகளும், தமிழர்களை நசுக்குவதற்கு மட்டுமின்றி, அதனுடைய செயல்களை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களையும் நசுக்குவதற்கு, அரசாங்கத்தை ஒரு பயங்கரவாதக் கருவியாக மாற்றியுள்ளன.

இதன் விளவாக, தமிழர்கள் அல்லாத, சிங்களக் குடிமக்கள் பலரும் சிறிலங்காவின் பயங்கரவாத அரசுக்கு பலியாகி உள்ளனர். முதன்மையாகக் குறிவைக்கப்பட்டவர்கள் பத்திரிகையாளர்கள்தான்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ், சிங்களப் பத்திரிகையாளர்கள் 19 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 35-க்கும் அதிகமானவர்கள் நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர் அல்லது குரல் கொடுக்க முடியாதபடி ஒடுக்கப்பட்டுள்ளனர்.

பல பத்திரிகைகள் மூடப்பட்டுள்ளன. இலங்கையில் பெரிதும் மதிக்கப்படும் 'சண்டே லீடர்' வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கடந்த ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டது, ஆட்சியாளர்களை எதிர்ப்போருக்கு என்ன நேரும் என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.

ஜனநாயக அமைப்புக்கள், நீதிமன்றங்களின் சீர்குலைவு தொடர்பான பல்வேறு கூறுகள் குறித்து, மதிப்புக்குரிய நிபுணத்துவம் வாய்ந்த ஐ.நா. அமைப்புக்கள் விசாரணை செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

அண்மையில், பெப்ரவரி 9 ஆம் நாள், ஐ.நா.வின் 10 உயர் வல்லுநர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் வெகுவேகமாக மோசம் அடைந்து வருவது குறித்தும், ஏராளமான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவது, படுகாயம் அடைவது குறித்தும் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் ஆழ்ந்த கவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அந்த வல்லுநர்களின் அறிக்கை அமைந்திருந்தது.

மோதல் பகுதிகளுக்கு மனிதநேய உதவி அமைப்புக்கள் செல்ல முடியாதவாறு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மிகவும் அடிப்படையான பொருளாதார, சமூக உரிமைகள் மீறப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தியிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த இனவெறி, இனப்படுகொலைப் போரில் சிறிலங்கா அரசு, தடை செய்யப்பட்ட, சட்டத்துக்கு எதிரான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பரந்த பகுதியில் ஏராளமான மக்களைக் கொல்லும் 'அணுகுண்டுக்கு நிகரான அனல் குண்டுகள்' (Thermobaric bomb) உட்பட, பயன்படுத்தி வருவது குறித்து நாங்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளோம்.

சிறிலங்கா படையினர் நீண்டகாலமாக கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அப்பாவி மக்கள் தங்கியுள்ள பகுதிகளைக் குறிவைத்து வானூர்திகள் மூலம் குண்டுவீசித் தாக்குவதில் ஈடுபட்டு வருகின்றனர். இவையெல்லாம் ஜெனீவா ஒப்பந்தங்களின் கீழ் தடை செய்யப்பட்டவை ஆகும்.

கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்படுவதை சிறிலங்கா அரசு ஒருபோதும் மறுக்கவில்லை. பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி, எஞ்சி வாழும் அப்பாவித் தமிழ் மக்களைப் பெருமளவில் கொன்று குவிப்பதற்கான ஆபத்து நிலவுவது குறித்து உலகம் முழுவதும் மிகுந்த வேதனையும், கவலையும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, சிறிலங்கா அரசு தடை செய்யப்பட்ட குண்டுகளையும், வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்த ஐ.நா. உடனடியாகத் தலையிட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.

'அணுகுண்டுக்கு நிகரான அனல் குண்டுகள்' (Thermobaric bomb) உட்பட மக்களைப் பெருமளவில் கொன்று குவிக்கும் இந்தப் 'பேரழிவு ஆயுதங்கள்' நடைமுறையில் பயன்படுத்தப்படுவது குறித்த உண்மை, "தந்திரமாகச் சரிபார்க்கப்பட வேண்டும். இவை எங்கிருக்கிறது வழங்கப்படுகின்றன என்பது கண்டறியப்பட வேண்டும். இந்தப் பயங்கர ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது உண்மை எனில், சிறிலங்கா அரசின் உயர் பொறுப்பாளர்களுக்கு எதிராகவும், இந்த குண்டுகளை எந்த நாடு வழங்குகிறதோ அந்த நாட்டின் அரசுக்கு எதிராகவும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்கான ஆணையத்தின் மூலம் அனைத்துலக சமுதாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர் நடக்கும் பகுதியில் செயற்படுவதற்கு, ஐ.நா. அமைப்புக்கள், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், பிற சுதந்திர அமைப்புக்கள் ஆகியவற்றின் சார்பில் சுதந்திரமான பார்வையாளர்களுக்கு சிறிலங்கா அரசு தடை விதித்துள்ள காரணத்தால் மனிதப் பேரழிவு நெருக்கடி தீவிரம் அடைந்திருப்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே, நிலைமையைக் கண்காணிப்பதற்கும், மனிதநேய உதவிகள் அந்தப் பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதற்கும் சுதந்திரமான பார்வையாளர்கள் அங்கு அனுப்பப்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.

கடந்த பல வாரங்களாக, உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் வழங்கல் இல்லாமல் அப்பாவித் தமிழ் மக்கள் படுமோசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பட்டினியாலும், ஊட்டச் சத்துக் குறைவாலும், கடுமையான காயங்களாலும், நலிவுற்று இளைத்து மெலிந்து குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், எஞ்சியுள்ள ஆண்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

போரை நிறுத்த வேண்டும் என்று கோருவதன் மூலம், அப்பாவிக் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் அக்கறையுள்ள உலகச் சமுதாயத்தினரால் அந்த அப்பாவித் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

எனவே, இலங்கையில் கொடிய, அரக்கத்தனமான போர் உடனடியாக நிறுத்தப்படுவதையும், போரில் சிக்கி துன்பப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இடர் நீக்கும் மனிதநேய உதவிகள் உடனடியாகக் கிடைப்பதையும் உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா.வும் உலக சமுதாயமும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று தெற்கு ஆசியக் குடிமக்கள் என்ற முறையில் நாங்கள் கோருகின்றோம்.

இலங்கையில் மட்டுமின்றி, தெற்கு ஆசியா முழுவதிலும் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இனப் படுகொலைப் போரை நிறுத்த வலுவுடன் தலையிட வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் முதலிய தெற்கு ஆசிய நாடுகளின் அரசுகளை நாங்கள் அழைக்கின்றோம்.

Comments