ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்: நிபந்தனை ஜாமீனில் நேற்று விடுதலையாகிய இயக்குனர் சீமான்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகி பின்னர் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து சிறைவாசம் அனுபவித்த இயக்குனர் சீமான் நேற்று நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகலில் ஜெயிலைவிட்டு வெளியே வந்த இயக்குனர் சீமானை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். அவர் நேராக அரியாங்குப்பம் வந்தார். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டம் என்னை விடுதலை செய்துள்ளது. இது தனிப்பட்ட சீமானின் விடுதலை அல்ல. கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி. என் மீது போடப்பட்ட வழக்கு தேவையற்றது. தவறானது.

தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு எதிராக எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆதரித்து பேசக்கூடாது என்ற சர்வாதிகாரம் இருந்தது. அதை எனது வழக்கு உடைத்தெறிந்துள்ளது.

எங்களுக்கு கிடைக்க வேண்டியது விடுதலை. அது கிடைக்கும்வரை போராடுவோம். ஈழ விடுதலையை யார் அங்கீகரிக்கிறார்களோ, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க யார் பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். தமிழீழத்தை ஆதரிக்கும் இயக்கத்துக்கு ஆதரவு அளிப்போம்.

இதற்காக பலபேர் பல வடிவத்தில் போராடுகிறார்கள். 13 பேர் தீக்குளித்து இறந்துள்ளனர். இந்த சமூகத்தை அதிகம் நேசிப்பவர்களை சமூக விரோதிகள் என்கிறார்கள். இதற்கான போராட்டங்களை நடத்தினால் என் போன்றவர்கள் போராட வேண்டியிருக்காது.

காங்கிரசுதான் இனப்பேரழிவுக்கு காரணம். காங்கிரசை வீழ்த்தும்வரை போராடுவோம். அது யாருக்கு சாதகம், பாதகம் என்று பார்க்கமாட்டோம்.

இலங்கை தமிழர் பற்றி பலரும் பேசும்போது, சோனியாகாந்தி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? 1-ந் தேதிக்கு பின்னர் என்னை கைது செய்த இடத்திலிருந்து பிரசாரம் தொடங்குவேன்.

இவ்வாறு டைரக்டர் சீமான் கூறினார்.

Comments