கனடிய வீதிகளில் தமிழர்கள்; அவுஸ்திரேலியாவில் இன்று அவசர கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

சிறிலங்கா இனவெறி அரசாங்கம் தனது ஆக்கிரமிப்பு படைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத்தின் எதிர்ப்புக்களை எல்லாம் புறம் தள்ளியவாறு ஒரு பாரிய தமிழின அழிப்பை தொடங்கியுள்ள நிலையில் ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்பாக பல்லாயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள் வீதிகளில் இறங்கி முற்றுகை போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அதேவேளையில் அவுஸ்திரேலியாவிலும் அவசர கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

கனடாவில்...

ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை (23.04.09) பிற்பகல் 12:00 மணி தொடக்கம் நாள்தோறும் இரவு - பகலாக தமிழ் இளையோர்களால் தொடங்கிய மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு கனடிய தமிழ் மக்களின் பெரு வருகையால் நேற்றிரவு 8:00 மணியளவில் வீதி மறிப்புப் போராட்டமாக மாறியிருக்கின்றது.

ரொறன்ரோவில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக ரொறன்ரோ நகரை ஊடறுத்துச் செல்லும் பெரு வீதியான யூனிவசிற்றி அவெனியூ (University Avenue) பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பதால் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளையில் அமெரிக்கத் தூதரகத்தை மையப்படுத்தி மொன்றியல், ஒட்டாவா, கல்கறி போன்ற கனடாவின் பெருநகரங்களிலும் தமிழ் மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட முனைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது.

எமது உறவுகளின் படுகொலைகள் அனைத்துலகத்தால் முழுமையாக நிறுத்தப்படும் வரை தமது போராட்டம் உறுதியுடனும் உத்வேகத்துடனும் முன்னெடுக்கப்படும் என கனடிய தமிழ் இளையோர், கனடிய தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து உறுதி பூண்டிருக்கின்றனர் எனது அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

அவுஸ்திரேலியாவில்...

அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரின் மத்தியில் உள்ள மில்சன்ட் பொய்ன்ட் தொடருந்து நிலையத்துக்கு முன்பாக சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணிக்கு நடைபெறவுள்ள அவசர ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அவசர ஒன்றுகூடலை சிட்னி தமிழ் இளையோர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதில் அனைத்து சிட்னி வாழ் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

Comments