மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை:வைகோ

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,

’’ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் உரையாற்றினேன். ஆனால் என் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் செய்தி வெளியாகி உள்ளது.

முதல்- அமைச்சர் கருணாநிதி நேற்று தமிழக மக்களை ஏமாற்றுகிற நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். தாயே, அம்மா, இந்திரா காந்தியாக மாற சோனியாவுக்கு கோரிக்கை விடுத்தார்.

இலங்கை தமிழர்கள் மீது இப்படிப்பட்ட குண்டுகள் வீசப்பட்டதில்லை. முதல்-அமைச்சர் கருணாநிதி, ராஜபக்சேவை அலெக்சாண்டரோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

பிரபாகரனை போரஸ் மன்னன் போல் நடத்த சொல்கிறார், குழந்தைகளை கொன்று குவித்து தமிழ்ப் பெண்களை நாசப்படுத்தும் ராஜபக்சேவை அலெக்சாண்டருடன் ஒப்பிடுகிறார். சோனியாவுக்கு கருணை மனு போடுகிறார்.

போராட்டத்தில் எரிமலை வெடிக்கும் என்று நான் சொன்னேன், எரிமலை வெடிக்கும் என்று அரசியல் தலைவர்கள் பலர் பேசி இருக்கிறார்கள். முதல்- அமைச்சரும் பலமுறை பேசி இருக்கிறார். அது தேச பாதுகாப்புக்கு எதிரானது அல்ல.

என்னை கைது செய்வது பற்றி கவலை இல்லை. நாஞ்சில் சம்பத்தை கைது செய்தது கோழைத்தனம். எங்களுக்கு மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை. எங்கள் கடமை தொடரும் 40 தொகுதிகளிலும் தி.மு.க.- காங்கிரஸ் படுதோல்வி அடையும்.

நாளை மறுநாள் விருதுநகரில் நகரில் நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறேன்’’ என்று தெரிவித்தார்

Comments