ராஜபக்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி செயல்படுகிறார்: பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கை அதிபர் ராஜபக்சவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்பேரில் தவறான அணுகுமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடிப்பதால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது என்று கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கை:

போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாட்களாக அதிகமான படைகளை ராஜபக்ச கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்துவருகிறார்.

ஆனால் கருணாநிதியும், ப.சிதம்பரமும் தங்களது முயற்சியால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த செய்த முயற்சி ஒரு நாடகமே என்பது நிரூபணமாகிவிட்டது.

அன்னையர் முன்னணி அமைப்பு தலைவர் சரசுவதி தலைமையில் நூறு பெண்கள் ஈழத் தமிழர்களுக்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டார்கள். அனுமதி கிடைக்கவில்லை. தனியார் இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்று அவர்கள் ஒவ்வொரு இடமாகத் துரத்தப்பட்டு வருகிறார்கள்.

ஈழத் தமிழர்களை ராஜபக்ச துரத்தித் துரத்தி அடிக்கிறார். கருணாநிதியோ தமிழக தமிழர்களை விரட்டிவிரட்டி அடிக்கிறார். ராஜபக்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி திகழ்வதைக் கண்டிக்கிறேன் என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments