இந்திய ஆட்சிக்கு உட்பட்ட மகாராஜா போன்றே மகிந்த செயற்படுகின்றார்: விக்கிரமபாகு குற்றச்சாட்டு

இந்திய ஆட்சிக்கு உட்பட்ட ஒரு மகாராஜா போன்றுதான் மகிந்த ராஜபக்ச இன்று செயற்பட்டு வருகின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ள இடதுசாரி ஐக்கிய முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, சிறிலங்கா அரசுக்கான இராணுவ தளபாட உதவிகளை மட்டுமன்றி ஆலோசனைகளையும் இந்தியாவே வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தாவது:

"ஈழத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டுள்ள மனிதப் பேரவலங்களுக்கு இந்தியாவே முழுப் பொறுப்பாகும். இந்தியாவானது இராணுவ மற்றும் ஆயுதங்கள் உட்பட போர் தொடர்பான ஆலோசனைகளையும் மகிந்த அரசுக்கு வழங்கி வருகின்றது.

மகிந்த ராஜபக்ச இந்திய ஆட்சிக்கு உட்பட்ட ஒரு மகாராஜா போன்றுதான் செயற்பட்டு வந்திருக்கின்றார்.

இன்று வெற்றி மயக்கத்தில் இருக்கும் இந்திய மற்றும் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு சோதனைக்காலம் நெருங்கிவிட்டது.

நெப்போலியனின் வீழ்ச்சி சேர்பியா என்ற சிறிய தீவின் வீழ்ச்சியுடன் தொடங்கியது. அதுபோல தமிழ் மக்களுடைய எழுச்சி சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு மாத்திரமல்ல; இந்திய ஆட்சிக்கும் வீழ்ச்சியைக் கொடுக்கும் படலம் தொடங்கிவிட்டது.

தென்னிந்திய தமிழர்களின் எழுச்சி நிச்சயமாக இந்திய ஆட்சியாளர்களை மண் கவ்வச் செய்யும். இந்திய, சிறிலங்கா ஆட்சியாளர்களின் வீழ்ச்சி தமிழர்களின் எழுச்சியுடன்தான் தொடங்க போகின்றது.

தமிழர்களுக்கு எதிராக வஞ்சகம் செய்தவர்கள், சூழ்ச்சி செய்தவர்களின் வீ்ழ்ச்சி எம் கண்முன்னே தெரியப் போகின்றது."

இவ்வாறு விக்கிரமபாகு கருணாரட்ண தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Comments