தமிழ் மக்கள் மீதான படுகொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – தென்னாபிரிக்க கூட்டிணைந்த அமைப்பு

வன்னியின் மேற்குப் பகுதியில் சிறீலங்காப் படையினர் அண்மைக் காலமாக மேற்கொண்டுவரும் தமிழினப் படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாக, “இலங்கையின் அமைதிக்கும், சமாதானத்திற்குமான தென்னாபிரிக்க ஒருங்கிணைந்த அமைப்பு” தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்க ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ், தென்னாபிரிக்க வர்த்தக சங்க கொங்கிரஸ், தென்னாபிரிக்க சமவுடமைக் கட்சி, தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தென்னாபிரிக்க தமிழர் சம்மேளனம், அனைத்துலக சைவ சபையின் தென்னாபிரிக்கக் கிளை ஆகியவற்றை உள்ளடக்கி “இலங்கையின் அமைதிக்கும், சமாதானத்திற்குமான தென்னாபிரிக்க ஒருங்கிணைந்த அமைப்பு” இயங்கி வருகின்றது.

வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு உணவுப் பொருள்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகளை இந்த அமைப்பு மேற்கொண்டுவந்த நிலையில், வன்னியில் நேற்று (திங்கட்கிழமை) சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

“இலங்கையின் அமைதிக்கும், சமாதானத்திற்குமான தென்னாபிரிக்க ஒருங்கிணைந்த அமைப்பு” வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரங்கள் கீழே:-

வன்னியில் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அனைத்துலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் (cluster bombs), இரசாயன ஆயுதங்கள் (chemical weapon) என்பவற்றைப் பயன்படுத்தி சிறீலங்கா அரசு தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலை தொடர்பாக அனைத்துலக சமூகம் மெளனமாக இருப்பதையிட்டு “இலங்கையின் அமைதிக்கும், சமாதானத்திற்குமான தென்னாபிரிக்க ஒருங்கிணைந்த அமைப்பு” தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றது. றுவண்டாவிலும், புறுண்டியிலும் இடம்பெற்ற படுகொலைகளை சமாதான விரும்பிகள் ஒவ்வொருவரும் நினைவில் கொள்வது நல்லது.

18 சதுர கிலோமீற்றர் பகுதிக்குள் தமிழ் பொதுமக்கள் தங்கியுள்ள நிலையில், அவர்கள் மீது சிறீலங்கா படையினரது துரிதப்படுத்தப்பட்டுள்ள தாக்குதல்கள் மிகுந்த கவனத்தை ஏற்படுத்துவதுடன், ஐக்கிய நாடுகள் சபை, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் என்பன இரண்டு இலட்சம் மக்கள் அங்கு இருப்பதாகக் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகள், அரச சார்பற்ற மனிதநேய அமைப்புக்கள், ஊடகங்கள் வன்னிக்குச் செல்ல தடை விதித்திருப்பதன் மூலம் சிறீலங்கா அரசு அனைத்துலக மனிதநேய சட்டங்களை மீறி வருகின்றது.

அனைத்துலக சமூகமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் அழைப்பு விடுத்துவரும் நிரந்தர போர் நிறுத்தம் செய்வதற்கு சிறீலங்கா அரசு முன்வர வேண்டும் என, “இலங்கையின் அமைதிக்கும், சமாதானத்திற்குமான தென்னாபிரிக்க ஒருங்கிணைந்த அமைப்பு” அழைப்பு விடுக்கின்றது.

படைத்துறைத் தீர்வை சிறீலங்கா அரசு திணிக்க முயல்வது பாரிய மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் அதேவேளை, நிரந்தரமான ஆக்கபூர்வமான அரசியல் தீர்வுக்கும் அது தடையாக அமையும். சிறீலங்கா அரசு அரசியல் தீர்வை விடுத்து படைத்துறைத் தீர்வை ஏற்படுத்த முனைவது பற்றி “இலங்கையின் அமைதிக்கும், சமாதானத்திற்குமான தென்னாபிரிக்க ஒருங்கிணைந்த அமைப்பு” விழிப்புடன் இருப்பதுடன், ஏற்கனவே பல தடவைகள் இது பற்றி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசு தொடர்ந்தும் தமிழினப் படுகொலையை மேற்கொண்டு வருமானால் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை “இலங்கையின் அமைதிக்கும், சமாதானத்திற்குமான தென்னாபிரிக்க ஒருங்கிணைந்த அமைப்பு” மேற்கொள்ளும்.

Comments