இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்தை தொடர்ந்தும் வேடிக்கை பார்க்க முடியாது: பிறட் அடம்ஸ்

இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்தை தொடர்ந்தும் வேடிக்கை பார்க்க முடியாது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய கிளைத் தலைவர் பிறட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்க இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக நாள் தோறும் பொதுமக்களின் இழப்புக்கள் உயர்வடைந்து செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடகிழக்குப் பிரதேசம் உலகின் மிகப் பயங்கரமான இடங்களில் ஒன்றாகவே சித்தரிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனரக ஆயுத பாவனை மேற்கொள்ளப்படாது என்ற அரசாங்கத்தின் திடீர் அறிவிப்பு மூலம் அரசாங்கம் இதற்கு முன்னர் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி அழிவுகளை மேற்கொண்டுள்ளமையை உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கை அரசாங்கத்தினால் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச யுத்த குற்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமான மற்றும் யுத்த சட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யுத்த சூனிய வலயத்தில் இராணுவம் ஆட்டிலறி மற்றும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமையை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச சட்டங்களுக்கு புறம்பான வகையில் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், உடல் உள ரீதியான அழுத்தங்களை வழங்கி வருவதாகவும் பிறட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Comments