நெதா்லாந்து தமிழர்களின் போராட்டத்தின் எதிரொலி: சிறிலங்கா தூதுவருக்கு நெதர்லாந்து கடும் அழுத்தம்

தமிழினப் படுகொலைகளை நிறுத்துமாறும் உடனடியாக போரை நிறுத்தமாறும் வலியுறுத்தி இன்று 5 ஆவது நாளாக நெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் தமிழர்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டத்தினைத் தொடர்ந்து நெதர்லாந்து அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை காலையும் மாலையும் என இரு தடவைகள் சிறிலங்கா தூதுவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து போரை உடனடியாக நிறுத்துமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றது.

போராட்டத்தினை நடத்திக்கொண்டிருந்த மாணவர்களை அவதானித்த நெதா்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏன் பாடசாலைக்குச் செல்லவில்லை என அவர்களிடம் கேட்டிருக்கின்றனர்.

அதற்கு மாணவர்கள், வன்னியில் எமது மக்களை தடை செய்யப்பட்ட இராசாயன ஆயுதங்களை பாவித்து சிறிலங்கா அரசாங்கம் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்து வருகின்ற நிலையில் எம்மால் எவ்வாறு பாடசாலைக்குச் சென்று நிம்மதியாக கல்வி கற்க முடியும் என கண்ணீர் விட்டு கதறி அழுது கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மார்த்தைன பன் டாமும் சுமார் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுடன் கலந்துரையாடியிருக்கின்றார்.

மாணவர்கள் சக்தி மாபெரும் சக்தி என்பதை உணர்ந்து அனைத்து மாணவர்களையும் போராட்டக் களத்தில் குதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

தாயகத்தில் போரை நிறுத்தும் வரை தமது போராட்டம் ஓயாது என மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Comments