ரத்த ஆறு ஓடும் என சொன்னது ஏன்?: வைகோ விளக்கம்

சென்னையில் ம.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி பொதுச் செயலர் வைகோ,

தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என நான் சொன்னது, மத்திய அரசை எச்சரிக்கை செய்யத்தான். இந்த வாசகத்தை முதல்வர் கருணாநிதி எத்தனையோ முறை கூறியிருக்கிறார். 1965ம் ஆண்டு ஏற்பட்ட நிலையை மறுபடியும் தமிழகத்தில் ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதற்காகத் தான் இந்திய அரசை எச்சரித்தேன். இப்படியே போனால், இந்திய அரசு மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய் விடும். சோவியத் யூனியன் சிதறுண்டு போகுமென, நான் 1990ம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க., கூட்டத்திலே சொன்னேன். சொன்னது போலவே, சோவியத் யூனியனின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி நாடாக சிதறுண்டு போனது.

ம.தி.மு.க., வன்முறை மேல் நம்பிக்கை இல்லாத இயக்கம். எங்கள் கட்சியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருந்தும், இதுவரை ஒரு சிறிய வன்முறையில் கூட ஈடுபட்டதில்லை. நான் பல முறை கைது செய்யப்பட்ட போதும், அவர்கள் ஒரு கல்லெறி சம்பவத்தில் கூட ஈடுபட்டதில்லை. இனியும் அவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். என்னை கைது செய்யப்போவதாகக் கூறப்படும் வதந்திக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தீர தனி ஈழம் தான் ஒரே தீர்வு என, நாங்கள் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதையே தான் இப்போதும் வலியுறுத்துகிறோம். விடுதலைப் புலிகளை தடை செய்த நாடுகள் கூட, "இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஏழு கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தின் சட்டசபையில் இயற்றப்பட்ட இலங்கை போர் நிறுத்த தீர்மானத்தை, மத்திய அரசு குப்பைக் கூடையில் வீசி விட்டது.

இலங்கையில் போர் நடத்துவதே இந்திய அரசு தான். இதை இலங்கையே ஒப்புக் கொண்டிருக்கிறது. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கு மத்திய அரசை வழி நடத்திச் செல்லும் சோனியாவும், கருணாநிதியும் தான் பொறுப்பு. நான் அவரிடம் கேட்பது, இதுவரை மத்திய அரசு இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியிருக்கிறதா... இதற்கு அவர் நேரிடையாக பதில் சொல்ல வேண்டும். இலங்கை பிரச்னையில் காங்கிரஸ், தி.மு.க., அரசு செய்த துரோகத்தை தெருத் தெருவாக சென்று சொல்வேன் என்றார்.

Comments