இலங்கைப் போருக்கு இந்தியா எப்படி உதவலாம் -வழக்கு

ழத் தமிழர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தால் இலங்கை அரசிற்கு ராணுவ உதவிகள் செய்துவரும் இந்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதிர வைத்திருக்கிறார் மூத்த வழக்கறிஞர் ஆர்.கருப்பன்.

அவரை நாம் சந்தித்தோம். ``புலிகள்தான் ராஜீவைக் கொன்றார்கள் என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் ஜெயின் கமிஷனின் இறுதி விசாரணை அறிக்கையிலோ, `சந்திராசாமியும் சுப்பிரமணியன்சுவாமியும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சிலரும் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள்' என்று, அது பற்றி விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு உத்தர விடப்பட்டிருக்கிறது.

ராஜீவ் கொலையின் பின்னணியில் போபர்ஸ் ஆயுதபேர ஊழல் உள்ளது. போபர்ஸ் பீரங்கி கம்பெனி இருப்பது சுவீடன் நாட்டில். போபர்ஸ் ஊழலை எதிர்த்த காரணத்தால்தான் சுவீடன் நாட்டின் தலைவர் ஒலேஃப் பாமே கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தியைத் தீர்த்துக் கட்ட வந்த சிவராசன், சுவீடன் மற்றும் அரபு நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். சிவராசன் சுவீடனுக்கு விஜயம் செய்துவிட்டு வந்து ராஜீவைக் கொலை செய்திருக்கும் நிலையில், இந்தக் கொலையில் புலிகளை எப்படித் தொடர்புபடுத்த முடியும்?

சுப்பிரமணியன்சுவாமி எழுதிய, `ராஜீவ்காந்தி கொலையில் விடை தெரியாத வினாக்களும், கேட்கப் படாத கேள்விகளும்' என்ற புத்தகத்தில், `ராஜீவ் கொலைக்கு உடந்தையாக இருந்த நபர்கள், ராஜீவ் காந்தியின் அரசியல் வாரிசுகளாகவும், அவரது சொத்துக்கு பாத்தியதை உள்ளவர்களாகவும் உலா வருகிறார்கள். சோனியாகாந்தி, அவரது தாயார், அர்ஜுன்சிங் மற்றும் மார்க்கரெட் ஆல்வா ஆகியோரின் பங்கை மத்திய புலனாய்வுத்துறை தீவிரமாக விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்' என்று எழுதியிருக்கிறார்.

சுப்பிரமணியன்சுவாமிக்கு மிக நெருக்கமாக இருந்த திருச்சி வேலுச்சாமியோ அவரது பேட்டிகளில், ராஜீவ் கொலையில் சுப்பிரமணியன்சுவாமியை முழுமுதற் குற்றவாளியாகக் காட்டுகிறார். புலிகள் ராஜீவைக் கொல்லத் திட்டமிட்டிருந்தால் அதை தமிழகத்தில் அரங்கேற்றியிருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்திய அரசு உண்மையான ராஜீவ் கொலைகாரர்களை விட்டுவிட்டு, வக்கிரமான பழிவாங்கும் உணர்ச்சியுடன் அப்பாவி ஈழத் தமிழர்களைக் கொல்கிறது என்பதையும் இந்த வழக்கில் தெளிவுப்படுத்தியிருக்கிறேன்'' என்றவரிடம், `இந்திய அரசு மீதான உங்களது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதா?'என்று கேட்டோம்.

``இந்திய அரசு, சிங்களப் படைகளுடன் சேர்ந்து தமிழர்களையும், அவர்களின் காவல் அரணான புலிகளையும் தாக்கிக் கொல்கிறது என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறன. இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பல கண்டனக் கடிதங்களை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியிருக்கிறார். பிரதமர் பதிலுக்கு எழுதிய கடிதத்தில் அதை `ஆமாம்' என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுவே நம் குற்றச்சாட்டுக்கான ஆதாரம். இந்தக் கடிதம் இந்திய அரசிற்கு மிகப் பெரிய சட்டச் சிக்கலைத் தரப் போகிறது.

`இந்திய ராணுவம் இங்கே நாடாளுமன்றத் தேர்தல் முடிவதற்குள் புலிகளையும், ஈழத்தமிழ் மக்களையும் கொன்று, போரை முடிவுக்குக் கொண்டு வரத் திட்டமிடுகின்றன' என்று பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதற்கும் இந்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை. பிரச்னை இப்படிக் கட்டுக்கடங்காமல் போகிறதே என்பதால்தான் பிரதமர் மன்மோகன் சிங்கையும், சோனியா காந்தியையும் குற்றவாளிகளாக்கி வழக்குப் போட முடிவு செய்தோம்.

இலங்கையில் தமிழர்கள் மீது விஷ, ரசாயனக் குண்டுகளை வீசியவர்கள் இந்தியப்படையினர்தான் என்ற செய்திகளும் இப்போது உலா வருகின்றன.முப்பதாயிரம் தமிழர்கள் இந்தக் குண்டுகளுக்குப் பலியாகி இருக்கிறார்கள். விஷவாயு குண்டு வெடித்ததும் மக்கள் மயங்கி விழுந்துவிடுகிறார்கள். உரிய முகமூடி அணிந்து கொண்டு அங்கு செல்லும் இந்திய ராணுவம், அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டு விடுதலைப் புலிகளின் சீருடைகளை அவர்கள் மீது போர்த்தி புலிகளைக் கொன்றுவிட்டதாகச் செய்தி பரப்புவதாகத் தகவல்கள் வருகின்றன.

இனி ஒருநாள் தாமதித்தாலும் மீண்டும் மூவாயிரம் முதல் முப்பதாயிரம் வரை அப்பாவித் தமிழர்களைக் கொன்று விடுவார்கள் என்றுணர்ந்து, இந்தப் பொதுநல வழக்கை நான் தாக்கல் செய்தேன். அப்போது, உலகமே வியக்கும் வண்ணம், தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் எடுத்த எடுப்பிலேயே வழக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். சென்னையில் உள்ள முதன்மை வழக்கறிஞர் கூடுதல் சாலிசிடர் ஜெனரலுக்கு (Additional solicitor General) இது குறித்து மறு விசாரணைக்கு முன்னர் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

`மன்மோகன் சிங், சோனியா, பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இந்திய கஜானாவில் உள்ள அரசு நிதியில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை எப்படித் தங்கள் குடும்பச் சொத்துபோல யாரையும் கேட்காமல் எடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தலாம் என்பதே எங்கள் வழக்கின் சாராம்சம். `இது மாபெரும் சட்ட விரோதச் செயல்' என்றும், `குடியரசுத் தலைவரிடம் உத்தரவு பெறாமல் தன்னுடைய பழிவாங்கும் உணர்ச்சிக்காக இந்திய ராணுவத்தை இவர்கள் அனுப்பியது உலக ஜனநாயகத்திலேயே நடந்திராத செயல்' என்றும் அதில் சுட்டிக் காட்டியிருந்தோம். பல்வேறு வகையான ராணுவத் தளவாடங்கள், நிபுணர்கள், விமானங்கள், குண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பல ராணுவ ஆயுதங்களை யாருக்கும் தெரியாமல் கொடுத்தது, சிங்கள ராணுவத்துக்கு உதவும் வேலையல்ல. மாறாக, சிங்கள ராணுவத்தின் போரை தாமே மேற்கொண்டு நடத்தும் அடாத செயல் இது.

`இலங்கையில் போர் நடத்தும் இந்திய ராணுவ வீரர்கள் எத்தனை பேர்? அதில் செத்தவர்கள் எவ்வளவு? காயமடைந்தவர்கள் எவ்வளவு? என்ற தகவல்களை வெளியிட வேண்டும், இறந்தவர்களின் சடலங்களை உடனுக்குடன் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும், இந்தியா அதன் படைகளைத் திரும்ப அழைத்து, ராடார் உள்பட தான் கொடுத்த இதர தளவாடங்களைத் திரும்பப் பெறவேண்டும், இந்தியா இலங்கைக்குக் கொடுத்து உதவிய இரண்டாயிரம் கோடி ரூபாய் கடனைத் திரும்ப வசூலிக்க வேண்டும், இந்தியாவால் அப்பாவித் தமிழர்களுக்கும், அவர்களது ஆதரவுப் புலிகளுக்கும் நேர்ந்த கொடுமைகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், ஈழத்துச் செய்திகளை நெருக்கடி நிலை போல இருட்டடிப்புச் செய்வதை தமிழக முதல்வர் கலைஞர் கைவிட வேண்டும்' என்ற இடைக்கால உத்தரவுகளைக் கோரி இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறோம்'' என்றவரிடம், `ராணுவத் தகவல்களை வெளியிடத் தடை இருக்கும்போது உங்களுடைய வழக்கில் நீங்கள் கோரிய தகவல்களை இந்திய ராணுவம் வெளியிடுமா?' என்றோம்.

``நம்நாட்டு ராணுவ ரகசியங்கள் வெளியே தெரிந் தால், அது நமக்கு பாதகம் விளைவிக்கும் என்றால் மூடிமறைக்கலாம். ஆனால், இந்தியக் குடியரசுத் தலைவர் மூலமாகத்தான் மற்றொரு நாட்டிற்கு போர்க் கருவிகளைக் கொடுக்க முடியும் என்ற நிலையில், அதில் என்ன ரகசியம் இருக்க முடியும்? இலங்கையில் நடக்கின்ற உள்நாட்டுப் போரில் குடியரசுத் தலைவருக்கும், இந்திய மக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல் இந்திய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலரும், ஆட்சியில் அங்கம் வகிக்கின்ற கருணாநிதியும் ராணுவ நடவடிக்கைகள் எடுத்துவிட்டு மூடி மறைத்தால் அது சட்டவிரோதம் அல்லவா?'' என்று முடித்துக் கொண்டார், வழக்கறிஞர் கருப்பன்.

வே. வெற்றிவேல்

Comments