இந்தியாவின் ஆலோசனையுடன் மக்களை வெளியேற்றும் படை நடவடிக்கை

ஐநா பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து மக்களை முற்றாக வெளியேற்ற ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் இந்த நடவடிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

அரசாங்க தகவல்களின் பிரகாரம் வன்னியில் சுமார் 50,000 வரையான பொதுமக்களே தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் வன்னியில் சுமார் 300,000 பேர் வரை வாழ்ந்து வருவதாக அனைத்துலக மனிதாபிமான அமைப்புகள் மற்றும் அரசாங்க அதிபர்களின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கம் வன்னியில் இருந்து 50,000 பொதுமக்கள் மீட்பதற்கும், அதன் பின்னர் எஞ்சிய மக்களை கொத்தணி குண்டுகள் மற்றும் துடைத்தழிப்பு குண்டு வீச்சின் மூலம் படுகொலை செய்து வன்னிப் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கு ஏற்கனவே இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்ற மக்களை மனிதக் கேடயங்களாப் பயன்படுத்தி ஆரம்பித்துள்ள இந்த விசேட படை நடவடிக்கையின் மூலம் இன்று காலை வரை சுமார் 30,000 பேரை மீட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று மாலைக்குள் அரசாங்கத்தின் இந்த எண்ணிக்கை 50,000 எட்டிவிடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வன்னியில் இருந்து பொதுமக்களை முற்றாக வெளியேற்றியுள்ளதாகவும் அங்கு தொடர்ந்து தங்கியிருப்பவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளே என்றும் அவித்த பின்னர் அந்த பிரதேசத்தை முற்றில் அழித்து நாசாமாக்கும் வகையில் தொடர் குண்டு தாக்குதல்களுக்கு அரசாங்கம் தயாராகியுள்ளது.

இதேவேளை மக்களை முற்றாக வெளியேற்றிவிட்டதாக அரசாங்கம் அறிவித்தால் எந்த ஒரு நாடும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது போகும் அதேவேளை ஐநாவின் பாதுகாப்பு சபையிலும் விவாதம் நடத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

அரசாங்கம் தரைக்கு சமாந்தரமாக பொதுமக்களின் வாழ்விடங்களை நோக்கிய நடத்தும் தாக்குதல்கள் மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களில் பல நூற்றுக் கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், தாக்குதல்கள் முடிவின்றி தொடர்வதால் உண்மையான இழப்புகளை கணிப்பிடமுடியாதுள்ளதாகவும் வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வெளிப்படையாக கோரிவருகின்ற போதிலும் மறைமுகமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கையை அங்கீகாரம் வழங்கி வந்துள்மையை அடுத்தே இந்த பாரிய மனித அவலத்தை ஏற்படுத்தும் தாக்குதலை ஸ்ரீலங்கா அரசாங்கம் துணிச்சலுடன் ஆரம்பித்துள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை இந்திய அரசாங்கம் தம்மாலான சகல இராணுவ உதவிகளையும் வழங்கி, ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அவர் மீது வழக்கு தொடர்ந்து உரிய தண்டனை வழங்குவதற்கு வசதியாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை முழுமையாக அழித்து, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடித்து தங்களிடம் கையளிக்கவேண்டும் என, ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தலில் ஆட்சிப் பீடம் ஏறவுள்ள கட்சியினை தீர்மானிக்கும் திறன் மிக்க தமிழக தேர்தலில் இலங்கை விவகாரம் தாக்கம் செலுத்தாமல் தடுக்கும் நோக்கில் தமிழக வாக்கு பதிவிற்கு முன்பாக வன்னியில் இருந்து மக்களை வெளியேற்ற இந்தியா அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments