வன்னி மக்களது உண்மை நிலையை கண்டறிய சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்: நடேசன்

வன்னி மக்களது உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டுமாயின் சுயாதீன சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு பின்னரான வடக்கு என சில கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இந்த கருத்து மெய்ப்பிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் ஒருபோதும்
இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பிச் சென்றுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வேலுப்பிள்ளை பிரபாகரன் சுதந்திரப் போராட்டத்தை தலைமையேற்று மேற்கொண்டு வருவதாகவும், வன்னி மக்கள் மத்தியில் பிரபாகரன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் புதல்வர் சார்ள்ஸ் அன்டனி காயமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உயர்மட்ட இராணுவ ஒத்துழைப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இனச் சுத்திகரிப்பை தவிர்க்கும் நோக்கிலேயே யுத்த நிறுத்தம் குறித்து புலிகள் அதிக முனைப்பு காட்டி வருவதாகவும், தோல்விக்கு அஞ்சி போர் நிறுத்த கோரிக்கை
விடுக்கப்படவில்லை எனவும் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழர் இன ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்த போர் நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments