தினை விதைத்தவனே, தினை அறுப்பான்

உலகின் பல நாடுகளிலும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள், வன்னியில் வாழும் தமது இரத்த உறவுகளின் பேரவல நிலை கண்டு, செத்துமடியும் செய்தி அறிந்து, மாறாத மனவேதனைகளுக்கு ஆளாகி யுள்ளனர். தமது தாயகத்தில் நடைபெற்றுவரும் நாளாந்த களநிலைமை மேன்மேலும் அழிவு நிலைக்குச் சென்று கொண்டிருப்பது கண்டு உருகுகிறார்கள். உணர்வுகள் பெருகித் தமக்கு இனி எது நேர்ந்தாலும் பரவாயில்லை அவர்களைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற தியாக உணர்வு உச்ச நிலையை எய்தியவர்களாகி விட்டார்கள் அங்குள்ளோர். அவர்களின் முன்னணி வகிக்கிறார்கள் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள்.

தாம் வாழ்கின்ற நாடுகளின் அரசுகளின் தலை வர்களை, ஏனைய அரசியல் தலைவர்களை, மக்களை அவர்களின் மனச்சாட்சியை தொடக்கூடிய போராட் டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி அந்தந்த நாடுகள் வன்னியில் நிகழும் மனிதப் பேரவலத்தை நிறுத்துவதில் கரிசனை காட்டத் தூண்ட வேண்டும் என்பதே புலம்பெயர் தமிழ் மக்களின் நோக்காகவும் இலக்காகவும் உள்ளதை எவரும் அவதானிக்க முடியும்.

தங்கள் தாயகத்தின் உறவுகளின் அவலத்தை, அவர்க ளுக்கு உண்டாகவுள்ள ஆபத்தை வெளிப்ப டுத்தி அவற்றைத் தடுப்பதில் தம்மில் ஒவ்வொருவரும் ஒருவர் தவறாது பங்களிக்க வேண்டும், ஒற்றுமை யுடன் செயற்பட வேண்டும் என்ற உணர்வுகளின் எழுச்சியைப் புலம்பெயர் மக்களிடம் காணமுடிகிறது.

தாங்கள் வாழும் நாட்டில் அந்நாட்டு மக்களிடம் அரசியல் தலைவர்களிடம் வன்னிப் பிரச்சினை குறித்த பிரக்ஞையை உண்டாக்கத் தாம் நிகழ்த்தும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் விசை முடுக்கிகளாக மாற வேண்டும் என்ற உணர்வும் ஓர்மமும் அவர்களிடம் பிரவாகித்து எழுந்துள்ளன.

பிரிட்டனில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள், இடைவெளியின்றித் தொடர்ச்சியாக வீதிமறியல் போராட்டம் செய்து வன்னித் தமிழ் உறவுகளின் அழிவுநிலையை வெளிப்படுத்திக் காட்டுகிறார்கள்.

அமெரிக்காவில், கனடாவில், பிரான்ஸில், ஜேர்ம னியில், நோர்வேயில், இத்தாலியில், டென்மார்க்கில், நெதர்லாந்தில், அவுஸ்திரேலியாவில் பூமிப்பந்தின் பல்வேறு திசைகளிலும் உள்ள அரசியல் தலைவர்க ளின், மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான அகிம்சைப் போராட்டங்களை நடத்துகிறார்கள். அவை வீணாகப் போவதில்லை.

பிரிட்டனில் புலம்பெயர்ந்த மாணவர்கள் இருவர் மேற்கொண்ட சாகும்வரை உண்ணாவிரதப் போராட் டம், அந்நாட்டு அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஈழத்தமிழர் விடயத்தில், வன்னித் தமிழர் பேரவ லத்தைத் தடுக்க ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும் என்ற மனிதாபிமானக் கண்ணோடு கூடிய உணர்வு அத்தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில், நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் நடை பெறும் சந்திப்புக்கு, உண்ணாவிரதமிருந்த இளைஞர் களில் ஒருவரை அழைத்துச் சென்று அவரூடாக வன்னி மக்களின், ஈழத்தமிழர்களின் உதவுவார் எவருமற்ற நிர்க்கதி நிலையை வெளிப்படுத்த பிரிட்டிஷ் எம். பிக்கள் இருவர் வாக்குறுதியளித்திருக்கின்றனர்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளைஞர்கள், தமது சொந்த நலன்களைத் தியாகம் செய்து அவற்றை மறந்து அதிக எண்ணிக்கையில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டனர். அது ஆக்கபூர்வமான பலன் விளைவிக்கவல்ல ஆரம்ப அறிகுறி.

ஏற்கனவே பிரிட்டன், கனடா, அவஸ்திரேலியா, டென்மார்க், தென்னாபிரிக்கா என்று ஈழத்தமிழ் இளை ஞர்கள் பல நாடுகளில் தமது அரிய உயிர்களை தமது உறவுகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு ஈகை செய்ய முன்வந்து உண்ணாதிருக்கும் அகிம்சைப் போரில் குதித்துள்ளார்கள். அது மேலும் வளர்ந்து செல்லும் அறிகுறி தென்படுகிறது.

புலம்பெயர் தமிழ் மக்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவர்கள் தம்மைத் தியாகம் செய்யத் துணிந் தவர்கள் என்பது தெளிவானது என்று லண்டனில் இருந்து வெளிவரும் "த இன்டி பென்டன்ற்" நாளிதழ் கருத்து வெளியிடும் அளவிற்கு புலம்பெயர் தமிழர்க ளின் தமிழ் இளைஞர்களின் உறவுகளைக் காக்கும் தியாக உணர்வு பிரவாகிக்கிறது.

இந்தத் தியாக உணர்வு புலம்பெயர் நாடுகளில் வாழும் இளைஞர்களிடம் பெருகிவரும் நிலையில் அந்த நாடுகள் வன்னி மனிதப் பேரழிவைத் தடுக்கத் தம்மால் இயன்றதைச் செய்வதற்கு முடிவு செய்யும் காலம் கனியும் என்று எதிர்பார்க்கலாம்.

ஈழத் தமிழ் மக்களை உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை அரசியல் சக்தியுள்ள அமெரிக்கா மற் றும் பலம் வாய்ந்த நாடுகள் கைவிட்டுள்ளன. எல்லாமே வெறும் பேச்சிலும், எழுத்திலும் காலத்தைப் போக்கு கின்றனவே அன்றி, அர்த்தபுஷ்டியான, கருமம் øகூடும் செயற்றிறனை ஆற்றுவதாக இல்லை. சுருங்கக்கூறின் இரட்டை வேடம் பூண்டு நாடகம் ஆடுகின்றன.

எனினும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களின் உணர்வூறிய மனிதத்தின் உயிர்ப்புப் பெற்ற செயற்பாடுகள், பெரியவர்கள் ஒன்றிணைந்து நடத்தும் அகிம்சைப் போராட்டங்கள் உலகத்தின் உலக நாடுகளின் தலைவர்களின் மனங்களை உலுக்கும்; மனச்சாட்சியைத் தொடும்; அவர்கள் நியாயத்தின் பக்கம் நின்று ஆக்கபூர்வ செயல்நாடி உழைக்கத் தூண்டும் என்று நம்புவோமாக.

தினை விதைத்தவன் தான் தினை அறுக்க முடியும்.

Comments