தமிழகத்தில் இருந்து நாங்கள்...

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அமைந்திருக்கும் அண்ணா சமாதிக்கு நேற்று திங்கட்கிழமை அதிகாலை 4:40 நிமிடத்துக்கு - திடீரென சென்ற திரு. மு. கருணாநிதி, குடும்பத்தினரிடம் கூடச் சொல்லாமல் அதிரடியாக ஒர் உண்ணாநிலையைத் தொடங்கினார். இந்தப் பின்னணியில் இருந்து தமிழக அரசியல் சூழலில் ஈழப் பிரச்சினையை அலசுகின்றார் தமிழகத்தில் இருந்து அ.பொன்னிலா.

எதிர்பாராமல் தமிழகம் நேற்று திங்கட்கிழமை மூத்த தலைவர் ஒருவரின் போராட்டம் ஒன்றைச் சந்தித்தது.

அதிகாலை 4:40 நிமிடத்துக்கு தனது கோபாலபுரம் இல்லத்தில் இருந்து வழமையாக யோகா பயிற்சிகளை மேற்கொள்ளக் கிளம்பும் திரு.மு.கருணாநிதி தனது வழக்கமான பாதையை மாற்றி மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்குச் சென்றார்.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி குடும்பத்தினரிடம் கூடச் சொல்லாமல் அதிரடியாக காலவரையற்ற உண்ணாநிலையைத் தொடங்கினார்.


[படம்: புதினம்]

மத்திய அரசு அதிர்ந்தது. தமிழகம் பரபரத்தது. அதன் விளைவுகள் தமிழகம் முழுக்க பரவுவதற்குள் மிகச் சரியாக மதியம் 12:30 நிமிடம் வாக்கில் "சிறிலங்கா அரசு போர் நிறுத்தம் அறிவித்துவிட்டது. எனது உண்ணாநிலைப் போராட்டம் வெற்றி" என்று அறிவித்து விட்டு வீட்டுக்குப் போனார் திரு.மு.கருணாநிதி.

ஆனால் அப்படி போர் நிறுத்த அறிவிப்பு எதனையும் சிறிலங்கா இரணுவமோ, அரசோ அறிவித்ததாக எந்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.

உண்ணாநிலை முடிந்த சில மணிநேரங்கள் கழித்து மிக மோசமான வானூர்தி தாக்குதல்கள் பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நடந்து கொண்டிருப்பதாக போர்ப் பகுதியின் செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில், என் எண்ண ஓட்டங்களில் இப்போது நிழலாடுவது தேர்தல்தான்.

அதாவது, எல்லா அரசியல் தலைவர்களுமே மேடைகளில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள். இந்த நாடகங்களில் எதிர்க்கட்சியினர் எப்போதும் எதிர்த்து ஆடுவர். ஆளும் கட்சியினரோ தடுத்தாடுவர். ஆனால் தடுத்தாட வேண்டிய நிலையில் இருந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி இப்படி தன்பக்கமே கோல் போடுவார் (same side goal) என்பதை நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

ஆறு மணிநேர ஆட்டம் தோல்வியில் முடிந்ததாக நான் எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கூட கொடுக்க முடியாத அளவுக்கு கடும் ஒடுக்குமுறை தமிழகத்தில் நிலவுகிறது.

இதோ கருணாநிதியின் உண்ணாநிலையால் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்கிற பொய்ப் பிரச்சாரம் தமிழகம் முழுக்க கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இனி யாரும் ஈழத்தில் போரால் செத்து மடியும் குழந்தைகள் குறித்தோ, பெண்கள் குறித்தோ பேசினால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்.

போர் குறித்தே பேசக்கூடாது ஏனென்றால் அங்கே போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று கூட தமிழக காவல்துறை சொல்லும் சூழல் உருவாகியிருக்கிறது.

தமிழ், தமிழர், கவிதை, வசன நடை எழுத்து என ஆட்சிக்கு வந்தவரின் ஆட்சியில் இன்று கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, என உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறது.

ஆனால் நாம் பேசாமல் போனால் இனி எப்போதுமே மௌனிகளாக வாழ நேரிடும் என்பதால் சொல்ல வந்த விடயத்தைச் சொல்லி விடுகிறேன்.

முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு ஈழப் படுகொலைகள் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சினையாகியிருக்கிறன.

எப்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றியதோ அது போல இந்தத் தேர்தலில் 40 தொகுதிகளையும் அது இழந்து விடும் என்று பலராலும் கணிக்கப்படுகின்றது.


[படம்: புதினம்]

வெற்றியை தீர்க்கமாக்கி 40 இலும் அறுவடை செய்ய ஜெயலலிதா நெருப்பாக தமிழகம் முழுவதும் சுற்ற, கருணாநிதி நான்கு நாள் பிரச்சாரத்திற்கு திட்டமிடுகிறார்.

ஆக, இந்தத் தேர்தலில் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கப் போவது தமிழீழம்.

தமிழ்நாட்டு மக்களின் ஏனைய பிரச்சினைகள் எல்லாம் அடுத்ததுதான்.

இந்தத் தேர்தலில் சில புதிய விடயங்களையும் பார்க்க முடிகிறது.

இந்திய தேர்தல் அமைப்பையே நிராகரிக்கக்கூடிய தீவிர திராவிட தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புக்களும், இடதுசாரி அமைப்புகளும் இம்முறை தேர்தல் புறக்கணிப்பு என்கிற கோரிக்கையை தற்காலிகமாகக் கைவிட்டு தொகுதிகள் தோறும் போய் காங்கிரஸ் வேட்பாளர்களின் தோல்விக்கு பல முனைகளிலும் பணியாற்றுகின்றனர்.

பல பொதுப் பிரச்சினைகள் காரணமாக ஏற்கெனவே காங்கிரஸ் எல்லாவகையிலும் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பைச் சந்திக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வீசும் அலை திமுகவையும் அடித்துச் சென்றுவிடுமோ என்ற அச்சம் அறிவாலயத்திலும் காணப்படுகிறது.

இதுதான் இன்றைய தமிழகத் தேர்தல் நிலை.

இந்த நிலையில்தான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர்களும், வெளியுறவுத்துறை கொள்கை வகுப்பாளர்களுமான எம்.கே.நாராயணனும் சிவசங்கரமேனனும் போர் நிறுத்தம் கோர இலங்கைக்கு செல்வதாகச் சொல்லப்பட்டது.

ஏற்கனவே இந்த இரு அதிகாரிகள் மீதும் கடும் விமர்சனம் தமிழ்நாட்டில் உண்டு. வெளியுறவுக் கொள்கை, பிராந்திய நலன் என்பதை எல்லாம் தாண்டி இருவருமே தமிழ்மக்கள் பால் கரிசனம் அற்றவர்கள் என்ற மாதிரியான குற்றச்சாட்டுகள் உண்டு.

இம்மாதிரி குற்றச்சாட்டுகளை ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் கருவியாகவோ, அம்மாதிரி தனிநபர் விருப்பு வெறுப்பு சார்ந்ததோ அல்ல என்று எடுத்துக் கொண்டாலும், இவர்கள் வெளிநாடு வாழ் மலையாளிகள் விடயத்தில் மிக வேகமாக அவர்களின் உரிமைகளுக்காக பதறி அடித்துச் செயற்பட்டதை எல்லாம் மறுத்துவிட முடியாது.

இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் ஜார்ஜ், ஏ,கே, அந்தோனி, ரவிநாயர், என ஒரே மாநிலத்தைச் சேர்ந்தோர்க்கு இத்தனை வலுவான பதவிகள் கொடுத்து, அதிகாரம் பெற்ற தீர்மானிக்கும் சக்திகளாக, இவர்கள் இருப்பது ஈழத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் நலன்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற விடயமும் பரவலாக விவாதிக்கப்படுகிறது.

ஈழத்தில் போர் நிறுத்தம் என்பது ஒட்டு மொத்த தமிழக மக்களின் விருப்பம்.

அதற்காகத்தான் 14 பேர் இதுவரை தீக்குளித்து இறந்திருக்கிறார்கள்.

தமிழகம் எங்கிலும் பெரும் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் இன்றுவரை நடந்து வருகின்றன.

ஒரு துண்டறிக்கையைக்கூட வெளியிட முடியாத அளவுக்கு மாநில காவல்துறை ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிற சூழலிலும், அனைத்து ஊடகங்களுமே ஆளும் திமுகவின் செய்திகளை மட்டுமே பிரதானமாக வெளியிடும் சூழலிலும் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு நிகழ்கிறது என்றால், தமிழ்நாட்டு மக்கள் ஈழ மக்களுக்கு எதிரான பெரும்பாலான தமிழக ஊடகங்களைத் தோற்கடித்து ஈழத்துக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அதனால் தான் மாநில காவல்துறையும் துண்டுப் பிரசுரத்தைக்கூட தடை செய்கிறது.

சரி, இனி போர் நிறுத்தம் குறித்த தமிழ்நாட்டு விருப்பம் குறித்து நாம் பார்ப்போம்.

ஏ.கே.நாராயணனும், சிவசங்கர்மேனனும் கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்துப் பேசினார்கள். ஆனால் என்ன பேசினார்கள் என்றோ, போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டதா? என்றோ எந்தத் தகவலையும் சென்று வந்தவர்களும் சொல்லவில்லை. பொறுப்பானவர்களும் சொல்லவில்லை.

ஆனால் மத்திய அமைச்சரும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் இந்தியா போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியிருப்பதாகச் சொன்னார்.


[படம்: புதினம்]

மேனனோ, நாராயணனோ இது குறித்து ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.

ஆனாலும் இந்தச் சந்திப்பை சிறிலங்கா வட்டாரங்கள் "இதயபூர்வமானது" என்று வர்ணித்திருக்கிறார்கள். அதையே சிதம்பரமும் இதயபூர்வமானது என்றார்.

இதயபூர்வமான சந்திப்பில் இவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று புது டில்லியில் இருந்தும் கொழும்பில் இருந்தும் செய்திகள் கசிகின்றன.

1. போருக்குப் பிந்தைய புனரமைப்பு குறித்தும், மீள் கட்டுமானம், முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்காள் குறித்துப் பேசியதாகவும்,

2. இந்திய தேர்தலை மனதில் கொண்டு இராஜதந்திர வட்டாரங்களில் யுத்தம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்துப் பேசியதாகவும்,

3. இராணுவத்தால் கைது செய்யப்பட்டிருக்கும் தயா மாஸ்டர், ஜார்ஜ் இருவரையும் ஒரு இரகசிய விசாரணைக்காக இந்தியா கொண்டு வருவது குறித்து, பேசியதாகவும் செய்திகள் கசிந்திருக்கிறன.

உண்மையில் இதுவரை இந்தியா, இலங்கையிடம் போர் நிறுத்தம் கோராத சூழலில், தேர்தல் நெருங்கி வருகையில் மட்டும் போர் நிறுத்தம் கோருவது என்றால், இலங்கை மீதான இந்தியாவின் கொள்கை என்பது தேர்தல் கொள்கையா என்கிற கேள்வி எழும்.

இந்தச் சந்திப்புகள் வழமை போல, இலங்கையின் போர் பிராந்தியத்தில் இந்தியாவின் முதலீடு தொடர்பாகவும் இருந்திருக்கலாம்.

ஏனென்றால் இந்தியத் தூதர்கள் கொழும்பு செல்வதற்கு முந்தைய நாள் இரவு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் ஈழப் பிரச்சனையில் தமிழர் விரோதப் போக்கைக் கொண்டவருமான திரு. ப்ரணாப் முகர்ஜியை இலங்கை அதிபரின் தம்பியான பசில் ராஜபக்சே டில்லியில் இரகசியமாக சந்தித்திருக்கிறார்.

அதில் மேலதிக உதவிகளை இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு வழங்க ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

''சார்க் விதிகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை மட்டுமே இந்தியா செய்கிறது" என்று வெளிப்படையாகவே சொன்ன காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜனும். "புலிகளை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்" என்று சொன்ன ப.சிதம்பரமும் இன்று வெளிப்படையாக போரை ஆதரிக்காமல் எதிர்ப்பது போல் அறிக்கைகள் விடுகிறார்கள்.

ஆனால் இரகசியமாக காய்கள் டில்லியில் நகர்த்தப்படுகின்றன. ஒரு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை டில்லிக்கு அழைத்துப் பேசியது உட்பட ஈழம் தொடர்பாக டில்லி ஆட்சியாளார்கள் செய்கிற எல்லாமே அரசியல் நாடகத்தின் ஒரு அங்கம்தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டில்லி அழைக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது 12.04.2009 அன்று சென்னைக்கு இரகசியமாக வந்து சென்றவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா).

இந்திய உளவு நிறுவனங்களின் இரகசிய அழைப்பின் பேரின் தமிழகம் வந்த முரளிதரனுடன் கூட்டமைப்பினருடனான தமது சந்திப்பு குறித்து டில்லி அதிகாரிகள் முதலிலேயே பேசி சில முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

ஆனாலும் உள்ளூர்த் தேர்தலில் பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக ஈழம் தொடர்பாக - ஒரு புறத்தில் நாடகங்களும், மறு புறத்தில், உண்மையான கொள்கையாக போருக்கு முட்டுக்கொடுப்பதாகவுமே இந்தியாவின் அணுகுமுறை இருக்கிறது.

புகழ்பெற்ற ஊடகவியலாளர் கரன் தாப்பர் சொன்னது போல "இது பெரிய நாடகம் தான்"

இதோ இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை அதிபரின் செயலர் வீரதுங்க "போர் நிறுத்தம் மேற்கொள்ளுமாறு இந்தியா கோரவே இல்லை" என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில்தான் ஐ.நா. அவையின் படுகொலை ஆவணம் வெளியாகியிருக்கிறது. வன்னி மீதான் போரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி 15 ஆயிரம் பேர் காயமடைந்து இந்தியா தன் தென்னாசிய ஸ்திரத்தின்மைக்காக கொடுத்த விலை அதிகம்.

இந்தியா பலியெடுத்துள்ள இந்த மனிதப்பேரழிவு இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஈழத்திலும், தமிழகத்திலும் அரசியல் ரீதியாக பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆனால் இந்தியாவின் இந்த மௌனமும் யுத்தத்திற்கான பங்களிப்பும் இந்தியாவிலும் கடும் விமர்சனங்களை தற்சமயம் உருவாக்கி வருகிறது.

சர்வதேச சமூகங்கள் உருவாக்கும் நெருக்கடியில் இருந்து வேண்டுமானால் இந்தியா தற்காலிக போர் நிறுத்தம் கோரலாம்.

மற்றபடி, ஒரு செய்தியாளர் சந்திப்பில் கருணாநிதியிடம் ஒரு செய்தியாளர் "மத்திய அரசிடம் எதுவரை போர் நிறுத்தம் வலியுறுத்துவீர்கள்?" என்று கேட்டதற்கு."போர் நிறுத்தம் ஏற்படும் வரை வலியுறுத்துவோம்" என்றார்.

மிக ஏளனமான தொனியில் வழங்கப்பட்ட இது போன்றதொரு பதிலைத் தான் கடந்த 24 ஆண்டுகளாக சீக்கியர் படுகொலைகள் தொடர்பாக காங்கிரஸ் கட்சி சொல்லி வந்தது.

பெரும் மக்கள் கூட்டம் தொடர்பாக இவ்வளவு அசிரத்தையாகவும் ஆணவமாகவும் நடந்து கொள்கிற போக்கு தான் தேர்தலில் இவர்களுக்கு எதிராக செயற்படும்.

இத்தோடு மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று உண்டு.

தமிழகத்தில் வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்புக்கள் மாறும் போது மத்தியில் அமையும் புதிய ஆட்சிக்கு ஆதரவு அளிக்கப் போகின்றவர்கள் தமிழ்நாட்டுக்கான குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த நிபந்தனைகளின் பேரிலேயே மத்திய அரசை ஆதரிக்க முன்வர வேண்டும்.

- புலிகள் மீதான தடையை நீடித்துக் கொண்டே இலங்கையில் சமாதானம் பேசுவது என்பது பொய்யானதும் ஒரு தலைப்பட்சமானதுமாகும். ஆகவே புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும்.

- அதுபோல பிரதமர் அலுவலத்தில் தமிழ்நாட்டையும் சேர்ந்த, மனித உரிமைகளில் பெரும் அக்கறையுள்ளவர்களை ஈழம் தொடர்பான இந்திய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.

- வலுக்கட்டாயமாக இராணுவ முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் மீண்டும் தமது பாரம்பரிய பிரதசங்களில் உடனடியாக குடியமர்த்தவும் பட வேண்டும்.

- அம்மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்வாகத்திடம் அம்மக்களின் நிர்வாக அலகை ஒப்படைத்து சிங்கள இராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

இப்படியான ஈழம் குறித்த செயல் திட்டங்களோடு மட்டுமே தமிழகம் எதையும் சாதிக்க முடியும்.

அப்படி இல்லாமல் கிடைத்த வரை லாபம். அதன் பின்னர் அரசியல் விளையாட்டு என்று நடந்து கொண்டால் இன்று கருணாநிதி காங்கிரஸ் கூட்டணிக்கு நேருவது நாளை இதனால் ஆதாயம் அடைபவர்களுக்கும் நேரலாம்.

-தமிழ்நாட்டிலிருந்து அ.பொன்னிலா-

உங்கள் கருத்துக்களை இந்த முகவரிக்கு அனுப்பலாம்: aponnila@gmail.com

Comments