கருணாநிதியின் சுயரூபம் வெளிப்பட்டது - வை.கோ

தொகுதிப் பங்கீட்டில் சமரசம் எட்டாததால் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவார் என்ற அனுமானத்தைப் பொய்யாக்கிவிட்டாலும், `தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது ஒரு துரும்பு பட்டாலும் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும்!' என்ற பேச்சுக்கு எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்கிற சூழ்நிலையில் விருதுநகரில் களம் காண தயாராகிக் கொண்டிருக்கிறார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ. அவரைச் சந்தித்துப் பேசினோம்.

`தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும்' என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி விட்டீர்களே?

``நான் வன்முறையாளன் அல்ல; ம.தி.மு.க., வன்முறை இயக்கமும் அல்ல. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் நான் பலமுறை கைது செய்யப்பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு சிறு கல் வீச்சுக் கூட நடந்ததில்லை. 1986ம் ஆண்டு என்று நினைக்கிறேன். `தமிழ்நாடு தனியாக இருந்திருந்தால் இலங்கையில் இவ்வளவு அக்கிரமத்தை நடக்க விட்டிருப்போமா?' என்று கருணாநிதி பேசினார். `பச்சை ரத்தம் பரிமாறுவோம்' என்று எத்தனையோ முறை கலைஞர் பேசியிருக்கிறார். தமிழினத்துக்குத் துரோகம் செய்தால், எதிர்காலத் தமிழ் இளைஞர்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று நாடாளுமன்றத்திலும் பலமுறை எச்சரிக்கை செய்திருக்கிறேன்.''

வன்னியில் தமிழர்கள் எத்தகைய இக்கட்டில் தற்சமயம் சிக்கியிருக்கிறார்கள்?

``கடந்த நான்கு நாட்களாக வரும் தகவல்களால் ரத்தம் கொதிக்கிறது. கொல்லப்பட்ட குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் சடலங்கள் அடக்கம் செய்ய வழியில்லாமல் அழுகிய நிலையில் கிடக்கின்றனவாம். `போரில் புலிகளை ஜெயிக்க முடிந்ததற்கு இந்திய அரசின் உதவிதான் முழுக்கக் காரணம்; சிங்கள மக்கள் என்றைக்கும் இந்திய அரசிற்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்' என்று இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் டி சில்வா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.

உலகில் எந்த இனமும் இப்படிப்பட்ட அவலத்துக்கு ஆளாகவில்லை. முல்லைத்தீவில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்களை மொத்தமாகக் கொன்று ஒழித்துவிட ராஜபக்ஷே முடிவு செய்துவிட்டான். கடந்த வாரம் தீபன், கடாஃபி, விதுஷா, பெண்புலி வீராங்கனை துர்க்கா ஆகியோர் சிங்கள ராணுவத்தின் படையணிகளுக்குள் ஊடறுத்துச் சென்று ஐநூறுக்கும் மேற்பட்ட ராணுவத்தினரை வீழ்த்தி, ஆயுதங்களைக் கைப்பற்றித் திரும்பும் போதுதான், உலகம் இதுவரை பயன்படுத்த அனுமதிக்காத நாசகார நச்சுக்குண்டுகளை விமானம் மூலம் வீசியதன் விளைவாக, அந்த மாவீரர்கள் தன் சகாக்களுடன் உடல் கருகி, எலும்புகள் உருகி மடிந்தார்கள். அமிதாப் என்கிற புலிப்படைத் தளபதியும் புலிகளுடன் இதே போல் கொல்லப்பட்டார். ஜெனீவா ஒப்பந்தப்படி தடை செய்யப்பட்ட இந்தக்குண்டுகளை வீசிய விமானம் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமானது எனத் தகவல்கள் வந்துள்ளன.

புலம்பெயர்ந்த தமிழர்கள் மாடாக உழைத்த பணத்தில் புலிகளுக்காக வாங்கிய ஆயுதங்களைக் கொண்டு சென்ற பதினான்கு கப்பல்களை இந்திய அரசு கொடுத்த தகவல்களால் சிங்கள ராணுவம் கடலில் மூழ்கடித்துவிட்டது. இதை சட்டபூர்வமாக்கவே இந்தியஇலங்கை கடற்படை தகவல் பரிமாற்றம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதே இதைக் கடுமையாக எதிர்த்தேன். ஆனால், கருணாநிதி கண்டுகொள்ள வில்லை. அந்தத் துரோகத்தின் விளைவுதான் இது.''

`பிரபாகரனைப் பிடித்தால் மரியாதையுடன் நடத்த வேண்டும்' என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறார். அப்படியென்றால், இக்கட்டில் இருக்கிறாரா பிரபாகரன்?

``கருணாநிதியின் உள்மனதில் பிரபாகரன் பிடிபட வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதால்தான் இப்படிப் பேசியிருக்கிறார். அதுவும் அற்பப் பதர்ராஜபக்ஷேவை உலகப்பெரு வீரன் அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதன் மூலம் கருணாநிதி தீராக் களங்கத்தைத் தேடிக் கொண்டார். அவரது உண்மை சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது.''

பெரியார் சொன்னது போல் நாம் எல்லாரும் அடிமைகள்; சோனியா காந்தியையும், மன்மோகன் சிங்கையும் தரக்குறைவாகப் பேசிவரும் சிலர் கைதாகாமல் இருக்கவே ஆட்சியில் தொடர்கிறேன் என்கிறாரே கலைஞர்?

``இதைவிட முட்டாள்தனமாக எவனும் (!) பேசமுடியாது. பெரியாரைப் பற்றிச் சொல்ல, அந்தப் பெயரை உச்சரிக்க கருணாநிதிக்கு யோக்கியதை கிடையாது. மஞ்சள் துண்டு போட்டிருப்பது மட்டுமல்ல. இன்றைக்கு எல்லாக் கோயில்களிலும் அவருக்குப் பூஜை நடக்கிறது. அவருக்காக யாகங்கள் நடக்கின்றன. டெல்லியில் யாகம் நடக்கிறது. திருக்கடையூர் கோயிலில் பூஜை நடக்கிறது. சாயிபாபாவை வீட்டிற்குள் அழைத்து வந்து அருளைப் பெறுகிறார்; மோதிரம் வரவழைத்துப் பெறுகிறார்கள்.

பெரியார் எந்த அதிகாரப் பதவியையும் நாடியவர் அல்ல. இருக்கிற பதவிகளை எல்லாம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் வாங்கி வைத்திருக்கிற கருணாநிதிக்கு பெரியார் என்கிற சொல்லை உச்சரிக்கவே யோக்கியதை கிடையாது. தமிழர்களைக் கொல்கின்ற படுகொலையை உடனிருந்து வேடிக்கை பார்த்துவிட்டு, இன்று எங்களைப் பாதுகாக்கப் போகிறாரா? இவர் தயவு யாருக்கும் தேவையில்லை. பத்தாண்டு பாதாள சிறை என்றாலும் அது பற்றிப் பயப்படுபவன் யாரும் இங்கில்லை.''

இரண்டாம் உலகப் போரில் நேர்ந்த மனித இனப்படுகொலையை விட மிகப்பெரிய இனப்படுகொலை வன்னியிலும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இதைத் தடுக்க உலக நாடுகள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யத் தவறியது?

``உலக நாடுகள் இந்தப் போரை நிறுத்த முயற்சிகள் எடுத்தன. அதற்கு முட்டுக்கட்டை போட்டுத் தடுத்தது இந்திய அரசுதான். ஐ.நா. மன்றத்தின் பந்தோபஸ்து கவுன்சிலில் போர் நிறுத்தத் தீர்மானம் வர இருந்தது. இந்திய அரசின் தலையீட்டில்தான் ரஷ்யா இந்தத் தீர்மானத்தை எடுக்கவிடவில்லை. ஐ.நா. பொதுச் சபையிலும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தும், சுவிட்சர்லாந்தும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தன. அதையும் இந்தியாவும் இலங்கையும் தடுத்துவிட்டன. அனைத்து நாடுகளும் போரை நிறுத்த முயற்சி எடுக்கும் போதெல்லாம், `ஆறரைக் கோடி தமிழ் மக்கள் கொண்ட இந்தியா போரை நிறுத்தச் சொல்லவில்லையே. அப்படியென்றால் ராஜபக்ஷே சொல்வது உண்மையாக இருக்குமோ?' என்று நினைக்கின்றார்கள். பெரிய கேடே இந்திய அரசுதான். போரை நிறுத்த முடியுமா? முடியாதா?' என்று உண்மையாகவே இந்தியா கேட்டிருந்தால் போர் நிறுத்தப்பட்டிருக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக ஒருவேளை பத்து நாளைக்கோ, பதினைந்து நாளைக்கோ போரை நிறுத்தலாம். (வைகோ பதினொன்றாம் தேதி இப்படிக் கூறுகிறார்; 12ம் தேதி 48 மணி நேரப் போர் நிறுத்தத்தை ராஜபக்ஷே அறிவிக்கிறார்) அதனால்தான், தாற்காலிகமாக போரை நிறுத்த வேண்டும் என்று கருணாநிதிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதுகிறார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவா? கருணாநிதியா? ஒருவேளை கொழும்பிற்குச் செல்ல வேண்டிய கடிதம்; கோபாலபுரத்திற்குச் சென்றுவிட்டதா? தமிழ் நாட்டு மக்களை முட்டாள்கள் என்று சோனியா காந்தி நினைக்கிறாரா?''

நாற்பது தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வென்றால் இலங்கைப் பிரச்னை தீருமா? இலங்கைப் பிரச்னை தீர மத்தியில் எத்தகைய மாற்றம் வேண்டும்?

``மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஓர் ஆட்சி வரக் கூடாது. இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தால் இதுதான் கதி என்று நினைக்க வேண்டும். காங்கிரஸ் தவிர, யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழத் தமிழர்களுக்கு இந்தக் கேடு வராது.''

இலங்கைத் தமிழர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நெடுமாறனுக்கோ அவருடைய கும்பலுக்கோ எந்தவிதமான அக்கறையும் கிடையாது என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை விடுக்கிறாரே?

``இப்படிச் சொல்கிறவர் நாக்கு அழுகிப்போகும். துறவி போல் வாழும் நெடுமாறன், நேர்மையின் பொக்கிஷம். அவரைப் பற்றி, `பணம் பறிக்கும் துரோகி' என்று கவிதை எழுதிய கருணாநிதிக்கு மன்னிப்பே கிடையாது. புலிகள் பிரச்னையை மாசாக்கி, மண்ணாக்கி, காசாக்கிப் பிழைப்பு நடத்துகிறேன் என்று என்னையும் பழித்தார், கருணா நிதி. திருடன்கூட புலிகளிடம் காசு வாங்க மாட்டான். இதுபோன்ற ஈனபுத்தி கருணாநிதிக்குத்தான் உண்டு! இந்த அறிக்கையின் வசனகர்த்தா கலைஞர் கருணாநிதி! அதை வெளியிடுபவர், வீராசாமி.''

நீங்கள் போட்டியிடும் விருதுநகர் தொகுதியை காங்கிரஸிடம் இருந்து திரும்பப் பெற்று அந்தத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை நிறுத்தி, உங்களை நேருக்கு நேர் சந்திக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகிறதே?

``களத்துக்குச் செல்ல கட்சி எனக்கு கட்டளையிட்டு விட்டது. காங்கிரஸ் கூடாது என்று தி.மு.க.வைத்தான் அங்கு நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால், காமராஜரை தந்த விருதுநகர் தொகுதியில் காங்கிரஸுக்கு எந்த சக்தியும் இல்லை என்று அர்த்தமாகிறது. இதன்மூலம் காங்கிரஸை தி.மு.க. அவமதிக்கிறது.''

காங்கிரஸை வீழ்த்த அ.தி.மு.க.வுடன் கூட்டணியைத் தொடருங்கள் என்று புலிகள் இட்ட கட்டளையை ஏற்று, அ.தி.மு.க. கூட்டணியுடன் தொகுதிப் பங்கீட்டில் சமரசம் செய்து கொண்டீர்களா?

``சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரும் எங்களுக்குக் கட்டளையிட வேண்டியதுமில்லை. காங்கிரஸ்தி.மு.க. அணியை வீழ்த்த வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்தோம். அ.தி.மு.க.வுடன் நல்ல தோழமையை வளர்த்து வந்திருக்கிறோம். உடன்பாடு என்பதில் சில வேளைகளில் எண்ணிக்கை முன்பின் இருக்கலாம். அதில் எந்த மனவருத்தமும் கிடையாது. நாங்கள் கேட்ட தொகுதிகளைத் தந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம்.''

சீனியர்கள் ம.தி.மு.க.வில் இருந்து விலகி எதிரணிக்குச் சென்றதில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் வருத்தம் நிலவுகிறதே?

``யாருக்கும் வருத்தம் இல்லை. (நான் சொல்வதை அப்படியே எழுதுங்கள்.) இப்படி வருத்தம் இருப்பதாக, உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களிடம் தி.மு.க.வின் தரப்பில் இருந்து விஷத்தைத் திணிக்கிறார்கள். கட்சியின் இதயமான பொதுக்குழு கூட்டத்திற்கு வந்து நீங்கள் பார்த்திருக்க வேண்டும். கட்சி உதயமான 93ல் கூட காணாத உணர்ச்சிப் பிரவாகத்தைப் பார்க்க முடிந்தது. ம.தி.மு.க.வில் முழுக்க முழுக்க உறுதியும், உற்சாகமும் இருக்கிறது. ஒரு சதவிகிதம் கூட வருத்தம் கிடையாது. இயக்கத்தில் பதவிகளால் பயன்பட்டவர்கள் சுயநலத்திற்காக விலகியதால், களை பறிக்கப்பட்ட கழனியாகக் கட்சி இருக்கிறது.''

இலங்கைப் பிரச்னை தேர்தலில் எதிரொலிக் குமா?

``கொதித்துப் போயிருக்கும் இளைஞர்கள், மாணவர்கள் எல்லோரும் காங்கிரஸைத் தோற்கடிக்கக் காத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மழுங்கடித்துவிட்டு ஒரு வாக்குக்கு ஆயிரம் முதல் ஐயாயிரம் ரூபாய் வரை கொடுக்க தி.மு.க. தயாராக இருக்கிறது. பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கின்ற பலப்பரீட்சை இது. எது வெல்லும்? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.''

படங்கள் : சுரேஷ்

வே.வெற்றிவேல்

Comments