புலரும் ஓர் நாள் நம் தேசம்

LTTE ஆழக்கிணறும்
ஆடுகால் பூவரசும்
பச்சைக் கம்பளமாய்
நீண்டுகிடக்கின்ற நெல்வயலும்
வளங்கொளிக்கும் வனங்களும்-இன்று
இரத்தக்கறை படிந்து
உறைந்து கிடக்கிறது

பசியோடு வந்தவர்க்கு
பரிமாறி மகிழ்ந்தவர்கள்
பட்டினியோடங்கே
பதுங்குகுழிகளில் பரிதவிக்கின்றார்

வீசியடித்த போர்ப்புயலால்
நாதியற்றுச் செத்துமடிகிறான் தமிழன்
ஆறஅமரக்கூடத் துளிநிலமின்றி
சொந்தமண்ணிலேயே
ஏதிலியாய் அலைகின்றான்

செழித்துப் பூத்துச்
சிரித்துமகிழ
மண்ணுலகு வந்துதித்த
சின்னஞ்சிறு அரும்புகள்
சதைத்துண்டங்களாய்
சிதறிமண்ணில் வீழ்கிறது

நெடுநாள் தவமிருந்து
பெற்றெடுத்த செல்வம் அங்கே
சத்தமின்றிச் சவமாய்கிடக்கையிலே
குண்டுப்புகைவழியே
குழந்தையைத்தேடும் தாயுள்ளம் ஓர்புறம்
உயிர்பிரிந்துவீழ்ந்த தாயிடம்
பசியாறத்துடிக்கும் பிஞ்சுமறுபுறம்
பூப்பெய்திய இளமகளும்
பிரசவித்த தாய்மாரும்
பச்சையுடல் தேறுமுன்னே
பாசிசக்காமுகரால்
கதறக்கதறக் காவுகொள்ளப்படுகின்றார்

இடைத்தங்கல் முகாமென்று
இருள்வலயத்துள்
இழுத்தழைத்து
விசாரணை எனும் பெயரில்
விடலைகள் எல்லாம்
வதைமுகாம்களில்
இரகசியமாய் புதைக்கப்படுகின்றார்

வானத்தை துளையிட்டு
வல்லூறுப் பறவையினம்
வட்டமிட்டு எம்மினத்தைத்
திட்டமிட்டு அழிக்கிறதே
தமிழினக் கழனியிலே
கதிர்குலுங்கும் பயிர்நடுவே
களையும் விளைந்ததனால்
வந்ததிந்தப் பேரவலம்

தமிழன் வரலாறு-ஓர்
முதிர்ந்த பண்பாட்டின் முகவரி
படைகொண்டுகளமாடி எதிரிக்கும்
வலியறியச்செய்தவர்கள் வரலாறு

வேண்டும் விடுதலை எமக்கு
தமிழன்படும் வேதனை
வெங்கொடுமை நீங்க
அடங்கமறுத்து
எரிமலையாய் வெடித்தது
பனிகூடப்பற்றி எரிந்தது

கவிந்த இருள்
கலையும் விரைவில்
அந்த இனிய
விடுதலை விடியலில்
ஈழத்தமிழன் இன்னல்தீரும்
வையமும் நிமிர்ந்து வாய்பிளக்கும்
தமிழன் பேச்செல்லாம்
கோயில் பெருமணியாய் ஒலிக்கும்

இளமைச்சுகங்களை
இடறிஎறிந்துவிட்டு
தாய்மண்ணைக் காதலிக்கும்
தளிர்கள் இருக்குமட்டும்
தாகம் தீராது
ஈழமண்ணில் ஓடும் குருதியாறு
சரித்திரத்தையே
சலவைசெய்யும்-ஓர்நாள்

- மானியூர் மைந்தன் (navaas06@yahoo.de)

Comments