ஐ.நா. மனிதாபிமானப் பணியாளர்களின் குழு ஒன்றறை உடனடியாக வன்னிக்கு அனுப்பிவைக்க ஐ.நா. செயலாளர் நாயகம் தீர்மானம்

வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக தன்னுடைய கவலையைத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன், போரில் சிக்கியுள்ள பொதுமக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு மனிதாபிமானப் பணியாளர்களின் குழு ஒன்றை அனுப்பிவைக்கப்போவதாக இன்று அறிவித்திருக்கின்றார்.

மனிதாபிமான நிலைமைகளையிட்டும், மக்களுடைய அவலங்களையிட்டும் கவனம் செலுத்துமாறும் ஐ.நா. பாதுகாப்புச் சபை நேற்று புதன்கிழமை விடுத்திருந்த கோரிக்கை தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

"இலங்கையில் வேகமாக மோசமடைந்துவரும் நிலைமைகளையிட்டு நான் மிகவும் கவலையடைகின்றேன்" என பிரஸ்ஸெல்ஸ் நகரில் இடம்பெற்ற அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது பான் கீ மூன் தெரிவித்தார்.

"பாதுகாப்பு வலயப் பகுதிக்கு ஐ.நா.வின் மனிதாபிமானக் குழு ஒன்றை உடனடியாக அனுப்பிவைப்பதற்கு நான் திட்டமிட்டுள்ளேன். அங்குள்ள நிலைமைகளை அவதானிப்பதும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், இந்தப் பகுதியிலுள்ள மக்களின் பாதுகாப்புக்காக எவ்வாறான உதவிகளை எம்மால் செய்ய முடியுமோ அவற்றைச் செய்வதும்தான் இவ்வாறு மனிதாபிமானக் குழுவை அனுப்பிவைப்பதன் பிரதான நோக்கமாகும்" என பான் கீ மூன் தனது நோக்கத்தை விளக்கியுள்ளார்.

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஐ.நா.வின் இந்த மனிதாபிமானக் குழு அங்கு அனுமதிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் இதற்கு ஆதரவையும் விரைந்த உதவியையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

"ஏற்கனவே பெருமளவு உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளன. இனி இழப்பதற்கு நேரம் இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா.வின் மனிதாபிமானக் குழு ஒன்று உடனடியாக வன்னிக்கு அனுப்பிவைக்கப்படும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் இன்று அறிவித்திருக்கின்ற போதிலும், அது தொடர்பில் இதுவரையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிகாரபூர்வ அறிவித்தல் எதுவும் கிடைக்கவில்லை என சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று இரவு தெரிவித்தார்.

இது தொடர்பாக எமக்கு அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னரே, இந்தக் குழுவின் வருகை தொடர்பாகவும், அவர்களுக்கு எவ்வாறான வசதிகளைச் செய்துகொடுப்பது என்பதையிட்டும் தம்மால் தெரிவிக்கக் கூடியதாக இருக்கும் என அனைத்துலக செய்தி நிறுவனமான ரொய்ட்டருக்கு அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

Comments