யுத்த நிறுத்த காலப்பகுதியில் எதிர்பார்த்த அளவு பொதுமக்கள் வெளியேறவில்லை: ஜோன் ஹோல்ம்ஸ்

மோதல் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த காலம் மிகவும் குறுகியது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். ஒரு நீண்டகால் போர்நிறுத்தம் ஒன்றினை அரசாங்கம் அறிவித்தாலன்றி வடக்கின் கரையோர இரத்த களரியை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 வருட யுத்தத்தை நிறைவு செய்யும் நோக்குடன் விடுதலைப் புலிகளை பாதுகாப்பு வலயத்தில் வைத்து அழித்தொழிக்க இராணுவம் முனைந்து வருகிறது. இதனால் அதிக அளவில் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றமை உறுதியானது என அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில் ஏற்கனவே பொது மக்களை விடுவிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு தாம் கேட்டதாகவும், அங்கிருந்து பொது மக்கள் வெளியேற அவர்கள் விருப்பம் கொள்ளவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததாகவும் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

தற்காலிக யுத்த நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட அகோர தாக்குதல்கள் குறித்தும் அவர் இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.

'பொது மக்கள் விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது உண்மையாக இருக்கலாம். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எனினும் அரசாங்கம் பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சிக்கியுள்ள பாதுகாப்பு வலயம் மீது கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருவது. இதன் மூலம் அரசாங்கம் சர்வதேச போர் நியமங்களையும், தமது உறுதிமொழியையும் மீறியுள்ளதாக ஜோன் ஹோல்ம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments