சொக்கத் தங்கம் சோனியாவும் கருப்புத் தங்கம் கருணாநிதியும்

எளிய மக்களின் சென்டிமென்டுகள், நம்பிக்கைகள், உணர்வுகளை மதிக்கத் தவறினால் என்னென்ன பின் விளைவுகள் எழுச்சியாக வெடிக்குமோ அப்படியான கொதிப்புகளை சமீபத்தில் காண முடிகிறது.

கிட்டத்தட்ட இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், இந்திரா சீக்கிய இளைஞர்களால் கொல்லப்பட்டபோது. காங்கிரஸ் ரௌடிகள் அதற்காக சீக்கியப் பெண்களையும், ஆண்களையும் டில்லி வீதிகளில் வெட்டி வீசினார்கள்.

அன்றைக்கு பாராளுமன்றத்தில் இது பற்றி கேள்வி எழுந்த போது ''விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும்'' என்று திமிராகப் பதில் சொன்னார் ராஜீவ்.

ஆமாம் கிட்டத் தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாக கொல்லப்பட்ட மூவாயிரத்துக்கும் மேலான சீக்கிய மக்களின் உயிரை பாசிச காங்கிரஸ் உதாசீனப்படுத்தியே வந்தது.

எவன் அந்தக் கொலைகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டானோ அவனையே தனது நாடாளுமன்ற வேட்பாளாராக களமிறக்கவும் தயாராக இருந்தது காங்கிரஸ் கட்சி.

கடைசியில் ஜெகதீஸ் டைட்லர் என்ற நேரு குடும்பம் ஈன்றெடுத்த அந்த இனவெறி கொலைகாரனை சி.பி.ஐ நிரபராதி என்று சர்ட்டிபிக்கேட் கொடுத்தது.

ஆக அவர்கள் பஞ்சாப் மக்களின் உணர்வை தொடர்ந்து இழிவு படுத்துகிறார்கள்.

அதன் ஒரு விளைவுதான் வேட்டி கட்டிய பா.சிதம்பரத்திற்கு விழுந்த செருப்படி. ஏன் அந்த தன்மானம் உள்ள பஞ்சாப் பத்திரிகையாளரை கைது செய்ய வேண்டியதுதானே!

காங்கிரஸ் காரனுக்கும் தெரியும், சிதம்பரத்திற்கும் தெரியும் பஞ்சாப் காரனை ஏமாற்ற முடியாது.

இத்தனை ஆண்டுகாலம் தங்களை உதாசீனப்படுத்தியவர்களை செருப்பால் அர்ச்சித்த அந்த பஞ்சாபின் வீரமகனை நாம் வாழ்த்துவோம்.

இந்த அவமானம் சீக்கியர்களுக்கு மட்டும்தானா? இந்த உதாசீனங்களும், ஏளனங்களும் ஏனைய இந்தியாவின் ஏனைய தேசீய இன மக்களுக்கு இல்லையா?

வடகிழக்கில்,காஷ்மீரில், தெலுங்கானாவில், இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறதோ அதைத்தான் இன்று ஈழத்திலும் செய்து கொண்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பு இராணுவமாக இலங்கைக்குப் போன இந்திய ராணுவம் அங்கே மூவாயிரம் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது. பாலியல் வன்முறை, கடத்தல், காணாமல் போதல் என எல்லா அக்கிரமங்களையும் செய்து முடித்த கொலைகார ராஜீவின் ராணுவம் அவமானப்பட்டு, புலிகளிடம் தோற்று அம்மணமாக இந்தியாவுக்கு திரும்பி வந்தது.

இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட சிவாரசனும், தணுவும், திருப்பெதும்புதூரில் வைத்து துன்பியல் நிகழ்வை நடத்தி முடித்தார்கள்.

அன்றைக்கு கொல்லப்பட்ட மூவாயிரம் உயிர்கள் குறித்து கேள்வி எழுப்பிய பொதெல்லாம் காங்கிரஸ்காரன் உதாசீனப்படுத்தினான்.

ராஜீவ்காந்தி திமிராக தமிழர்களை பார்த்தார். இன்று வரை கொல்லப்பட்ட ஈழ மக்களின் உயிர் குறித்து எளனமான பதில்களை மட்டுமே காங்கிரஸ் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தன் கொலைவெறியை மீண்டும் ஈழ மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிது கொலைகார இந்தியா. ஈழத் தமிழனை கொன்று குவிக்கும் பாசிச இலங்கைக்கு இந்தியா செய்கிற உதவிகளை உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பட்டியலிட்டுள்ளன.

இலங்கைக்கு நாங்கள் உதவ வில்லை என்று இந்தியாவும் இது வரை மறுக்க வில்லை.

சென்னையில் வைத்துப் பேசிய ஜெயந்தி நடராஜன் ''நாங்கள் சார்க் விதிகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு தொழில் நுட்ப உதவிகள் செய்கிறோம்'' என்றார்.

இதற்கெல்லாம் உச்சபட்சமாக போர் நிறுத்தம் கேட்டு சொக்கத் தங்கம் சோனியாவை சந்திக்க டாக்டர் ராமதாஸ் டில்லிக்கு சென்றிருந்த போது பாராளுமன்றத்தில் பட்டவர்த்தனமாகவே சொன்னான் ப்ரணாப்முகர்ஜி

''போரை நிறுத்தச் சொல்ல முடியாது புலிகள் சரணடைய வேண்டும்'' என்றான்.

''புலிகளை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்'' என்று சிதம்பரமும் சொல்ல, ஒட்டு மொத்தமாக இந்த ஆறரை கோடி தமிழ் மக்களையும் இழிவு படுத்தி விட்டனர் காங்கிரஸ்காரர்கள்.

நம்மை எல்லாம் கங்கிரஸ்காரன் என்னவாக நினைக்கிறான் என்பதை முன் எல்லாக் காலத்தையும் விட இப்போதே அதிகமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழக மக்கள் ஈழப்போராளிகளை தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக நினைத்த காலம் ஒன்று உண்டு.

எண்பதுகளில் தமிழகம் ஈழப்போராட்டத்திற்கு பின்தளமாக இருந்தது. எம்.ஜீ.ஆர் அன்றைக்கு புலிகளுக்கு பேருதவிகள் செய்து கொண்டிருந்தார்.

ஆனால் அன்றைக்கு கருணாநிதியோ ஜெகன், குட்டிமணி, தங்கத்துறையை பிடித்து இலங்கை அரசிடம் ஒப்படைத்தார். அன்றைக்கு போராளிகளுக்கு பின்தளமாக இருந்த தமிழகம் இன்று சிங்கள பாசிச ராணுவத்துக்கு பின்தளமாக இருக்கிறது.

கருணாநிதியோ ''இலங்கையில் இந்தியா போரை நடத்தவில்லை'' என்று காங்கிரஸ் காரனுக்கு சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தமிழக கடலோரங்களில் பாதுகாப்பை மிக மோசமான முறையில் பலப்படுத்தி ஈழத் தமிழர்கள் அங்கிருந்து தப்பி வர முடியாதபடி கண்காணிக்கிறார்.

இது மட்டுமல்ல இங்கு யாரும் ஈழத் தமிழன் குறித்து பேசக் கூடாது, அப்படி பேசுவதாக இருந்தால் தன்னை வைத்தோ, தன்னை ஆதரிக்கும் ரப்பர் ஸ்டாம்புகள், அல்லக்கைகளை வைத்தோ ஈழத் தமிழர் பிரச்சனையை அணுக வேண்டும்.

இல்லை என்றால் யாராக இருந்தாலும் தேசீயப் பாதுகாப்புச் சட்டம்தான் என்று கிட்டத் தட்ட முப்பதுக்கும் மேற்பட்டோரை சிறையிலடைத்திருக்கிறார் கருணாநிதி.

சட்டக் கல்லுரிகளுக்கு விடுமுறை, வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் என காட்டுமிராண்டித்தனமான இந்த ஆட்சியை பலர் இன்னும் இது ஜனநாயகத்தின் ஆட்சி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் இருந்தாலும் அய்யா அம்மாவை விட பெட்டர் இல்லையா? என்று போயஸ்கார்டனுக்கும் கோபாலபுரத்துக்கும் மாறி மாறி கயம்பட்ட உள்ளங்கள் இன்று விழுந்த விட்டையில் எது முன் விட்டை பின் விட்டை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கருணாநிதி நினைத்திருந்தால் நிச்சயம் இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும்.

தென்னாசியாவில் அமெரிக்காவின் அடியாளாக இருக்கும் இந்தியாவின் விருப்பத்தின் பேரில்தான் இந்தப் போர் நடக்கிறது. இந்தியா இதில் நேரடியாக தலையிட்டுருப்பதாலேயே மேற்குலகம் தன் காலனித்துவ ஏஜெண்டை மீறி இலங்கையில் தலையிடத் தயங்குகிறது.

நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜிநாமா செய்து ஒரு அச்சத்தையாவது கருணாநிதியும், ராமதாசும் ஏற்படுத்தியிருந்தால் இந்தப் போர் பலவீனமடைந்திருக்கும்.

காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருந்தால், தமிழகத்திலிருந்து கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தால் இலங்கையில் இருந்து படைகள் வாபஸ் வாங்கப்பட்டிருக்கும்.

தொண்ணூறுகளில் வி,பி.சிங்கின் ஆட்சியின் போது படைகளை வாபஸ் பெற்ற அதே அணுகுமுறைகளை இன்று செய்திருக்க முடியும்.

குடும்பம், சொத்து, பதவி, அதிகாரம் என்பதை மட்டுமே மனதில் வைத்த கருணாநிதி ஒரு பக்கம் போர் நிறுத்தம் கோரி எந்த முயற்சியும் எடுக்காமல்

கடிதம், கவிதை, தாழாது தாழாது தமிழினம் தாழ்த்தாது, என்கிற மாதிரியான யாருக்கு எதிராக கோஷம் இடுகிறோம் என்பது கூடத் தெரியாமல் பெரும் நாடகமாக டம்மி வசங்களை பேசி காலம் கடத்தியதோடு கொலைகார காங்கிரஸ் கூடத்தை சொக்கத்தங்கம் சோனியா என்றும், காங்கிரஸ் போர் நிறுத்தம் கேட்டு விட்டது என்றும் மிக மிக வஞ்சகமான முறையிலும் துரோகமான முறையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் கருணாநிதி.

அதற்காக தான் உருவாக்கி வைத்திருக்கும் ரப்பர் ஸ்டாம்புகளை பயன்படுத்திக் கொள்கிறார். இந்த நாடகத்தின் உட்சபட்ச க்ளைமாக்ஸ் நாடகம்தான் போர் நிறுத்தம் கோரி நடந்த திமுக. அதன் தோழமைக் கட்சிகளின் சென்னை ஊர்வலம்.

கருணாநிதி சொக்கத் தங்கம் சோனியாவுக்கு கடிதம் எழுதுகிறார். சொக்கத் தங்கமோ கருணாநிதிக்கு கடிதம் எழுதுகிறார்.

இது வரை சொக்கத்தங்கமோ அல்லது டர்பன் தங்கமோ இலங்கை அரசுக்கோ, ராஜப்க்ஷேவுக்கோ ஒரு வார்த்தை கூட போர் நிறுத்தம் கோரி சொன்னதே இல்லை.

பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் சிறிபால டி சில்வா பேசும் போது ''இந்தியா மட்டும் இல்லாது போயிருந்தால் இந்தப் போரில் எங்களால் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்க முடியாது.'' என்கிறார்.

அத்துடன் ''இந்தியா முன்னர் இந்தியா இலங்கை ஒப்பந்தக் காலத்தில் அதிகாரப்பகிர்வு குறித்து எங்களுக்கு நெருக்கடி கொடுத்தது ஆனால் இன்று இந்தியா அப்படி எந்தத் தீர்வையும் தமிழ் மக்களுக்கு வைக்கச் சொல்லி எங்களிடம் கோரவே இல்லை'' என்றும் அந்த இலங்கை அமைச்சரே சொல்லிவிட்டார்.

அப்படியானால் கருப்புத் தங்கம் சொக்கத் தங்கத்துக்கு கடிதம் எழுதுவதும், சொக்கத் தங்கம் கருப்புத்தங்கத்துக்கு கடிதம் எழுதுவதும் நாடகமல்லாமல் வேறு என்ன?

சரி எல்லாம் கிடக்கட்டும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்த மூத்த திராவிடத் தலைவர் இவ்விதமாய் ஒரு முடிவை எடுத்தார் என நாம் இன்று ஒரு முடிவுக்கு வந்து விட்டோம்.

ஆனால் பேரணியில் பேசிய கருணாநிதி ''இந்தப் போரில் பிரபாகரனைக் கைது செய்தால் சம மரியாதையோடு ராஜபக்ஷே பிரபாகரனை நடத்த வேண்டும் இல்லை என்றால் வரலாறு ராஜப்க்ஷேயை மன்னிக்காது'' என்றார்.

அடத் தூ...

இவளவு அற்ப மனிதனா நீ...

பிரபாகரன் உன்னிடம் வந்து என்னை மரியாதையாக நடத்தச் சொல்லுங்கள் என்றா கேட்டார்?

ராஜிநாமா நாடகங்கள், கவிதைகள், கண்ணிர்த்துளிகள், நிவாரத் திரட்டல்கள் என்று தமிழ் மக்களை கொன்றொழிக்கும் பாசிச சிங்கள ராணுவத்துக்கு உந்து சக்தியாக இருந்த கருணாநிதியே! உனது கேடு கெட்ட வாரிசு அரசியலில் நீ இப்போது தமிழ் மக்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாய்.

உனது சொத்துக்காகவும் வாரிசுகளுக்காவும் என்பதை மறந்து விடாதே!

உனது காட்டிக் கொடுப்பு அரசியலின் கடைந்தெடுத்த கடைசி சந்தர்ப்ப வாதத்திற்கு நீ வந்து சேர்ந்திருக்கிறாய்.

நீ நினைப்பது போல வரலாற்றில் மாவீரர்கள் எப்போதும் மண்டியிடுவதில்லை.

மரணத்தைக் கண்டு அஞ்சுவதும் இல்லை.

தூக்குக் கயிற்றின் கொட்டடியில் வெள்ளையனை அம்மணமாக்கி வீரமரணம் அடைந்தானே கட்டப்பொம்மன் அவன் வரலாற்றில் வாழ்கிறான்.

அவர்கள் மகோன்னத மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஜெகன்,குட்டிமணி, தங்கதுறை, திலீபன் என எத்தனையோ வீரர்கள் வரலாற்றில் வாழ்கிறார்கள்.

வரலாற்றில் வாழ வழியில்லாதவர்களும் வீரமில்லாதவர்களும்தான் இடைவிடாது தங்களின் உடன் உபாதைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள்.

பெரியாரும், அண்ணாவும், எம்.ஜீ.ஆரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிசைச்சைகள் பற்றி ஓயாது புலம்பிக் கொண்டிருந்த்தில்லை.

மரணத்தைக் கண்டு அஞ்சியதும் இல்லை.

காலமெல்லாம் எனக்காகவும் இந்த தமிழ் மக்களுக்காகவும் மூத்திரச் சட்டியை சுமந்து கொண்டு அலைந்தானே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.

அந்தக் கிழவனின் கால் தூசுக்கு நீ சமமாக மாட்டாய்.

பதவி என்னும் அற்ப அரசியலுக்காக மதியிழந்து மண்டியிட்டுக் கிடக்கும் மடையனே! உனக்கு போராளிகளின் வீராரலாறு தெரிய நியாயமில்லை.

அவர்கள் உன்னைப் போல கோமாளிகள் அல்ல, மரணத்துக்கஞ்சா மாவீரர்கள்.

அடுக்குத் தமிழில் வசனம் பேசி வருடங்கள் பலவாய் மக்களை ஏமாற்றியது போதுமடா!

வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு நீ வந்து சேரும் போது. அங்கே உனக்காக பலர் ஏற்கனவே காத்திருப்பார்கள், அதில் உன் போலவே பெயர் கொண்ட கருணா போன்றோர் அங்கு இருபபர்கள்.

வரலாறு ராஜபக்ஷேவை மன்னிக்குமா? மன்னிக்காதா என்பது இருக்கட்டும் உன்னை வரலாறு மன்னிக்குமா? என்பதை முதலில் யோசித்துப் பார்.

பொன்னிலா

Comments