முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 47 பேர் படுகொலை

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 56 பேர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வலய'மான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் பேச்சாளர் புலித்தேவன் கூறுகையில், முள்ளிவாய்க்காலில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் சிறிலங்காப் படையினர் இன்று காலை நடத்திய தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

அத்துடன் அப்பகுதி சுகாதாரத்துறை அதிகாரியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட போது, இன்றைய தாக்குதலில் 56 பேர் காயமடைந்ததாக கூறினார்.

தாக்குதலில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பினர். எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தவில்லை என சிறிலங்க அரசு மறுத்துள்ளது.

கடந்த மே மாதம் 2 ஆம் நாளில் இந்த மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்தி:

Ø முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 64 பேர் பலி; 87 பேர் காயம்

Comments