முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்: 64 பேர் பலி; 87 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயமான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன்று சனிக்கிழமை காலை 7:00 மணி தொடக்கம் 9:20 மணிவரை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை அகோரமாக நடத்தியதாக வன்னித்தகவல்கள் தெரிவிகின்றன.

முதலாவது எறிகணைத் தாக்குதலில் 22 பேரும் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் அதிகமானோரும் கொல்லப்பட்டதோடு, ஆறுக்கும் அதிகமான எறிகணைகள் மருத்துவமனை மீதும் சூழவுள்ள பகுதிகளிலும் வீழ்ந்து வெடித்தன.

ஏற்கனவே காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் உட்பட 64 பேர் இத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டனர். 87 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் நோயாளர்களும், நோயாளர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் வெளியிடங்களில் இருந்து சிகிச்சை பெறவந்த வெளிநோயாளர்களும் ஆவர்.

இத்தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டதனை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

Comments