தமிழ் இனம் தங்களால் காப்பாற்றப்படும் என்று நம்புகிறோம்: ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

சிறிலங்கா அரசாலும் அதன் படைகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழ் இனம் தங்களால் காப்பாற்றப்படும் என்கிற நம்பிக்கையையும் தந்திருக்கிறது. இவ்வாறு தமிழ்நாடு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து குழு வெளியிட்டுள்ள அறிக்கை:-

பெருமதிப்பிற்கும் பேரன்பிற்குமுரிய அம்மா அவர்களுக்கு,

தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தென்னாபிரிக்கா தமிழர் சார்பில் உலகத் தொழிலாளரை நினைவுகூரும் இந்த நன்நாளில் அன்பான வணக்கம்.

ஈழத் தமிழரின் கொடுந் துயர் கண்டு கொதித் தெழுந்த தங்கள் உணர்வு மற்றும் குரல் - ஈழம், தாய்த் தமிழ் நாடு மட்டுமல்லாது கண்டங்களைத் தாண்டி ஒலித்துக் கொண்டிருப்பது எமக்கெல்லாம் மிகுந்த மகிழ்வையும,; சிறிலங்கா அரசாலும் அதன் படைகளாலும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழ் இனம் தங்களால் காப்பாற்றப்படும் என்கிற நம்பிக்கையையும் தந்திருக்கிறது.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எம்மின மக்கள் சிங்கள ஆட்சியாளர்களாலும் அதன் கூலிப் படைகளாலும் கணக்கின்றி கொன்றொழிக்கப்படடிருந்தாலும் கடந்த எட்டு மாதங்களாக எவ்விதமான சாட்சிங்களுமின்றி, அனைத்துலக சட்டதிட்டங்களை, அனைத்துலக வேண்டுகோளைப் பொருட்படுத்தாமல் தடை செய்யப்பட்ட ஆயுதங்களால் தமிழரை மட்டுமல்லாது அவர்கள் வாழ்ந்த இடங்களின் அடையாளமே இல்லாத வகையில் சிறிலங்காவின் பேயாட்சியால் அழிந்து கொண்டிருக்கிறது என்கிற செய்திகளைக் கேட்டு நொந்து பொயிருந்த வேளையில் காரிருளில் ஒளியைப்போல் அந்த மக்களுக்காக, அவர்களின் நிம்மதியான வாழ்வின் விடிவுக்காக உங்கள் குரல் ஒலித்திருக்கிறது.

வேறு வழியே இல்லாத போதுதான் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட, வரலாற்று அடிப்படையில் வாழ்ந்து ஆட்சி புரிந்த மண்ணில் மீண்டும் ஆட்சியமைக்க சிறிலங்கா அரசிக்கெதிராக தமிழர்கள் போராடத் தொடங்கினார்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதனடிப்படையில்தான் “தமிழர்களின் அன்னை பூமியில் அவர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுப்பேன்” என உணர்வு பொங்க, உலகத் தமிழரின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் முழங்கி வருகிறீர்கள்.

தமிழர்களைக் காக்க நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வும் குரலும் புரட்சித் தலைவர் உங்கள் வடிவில் மீண்டும் வந்துவிட்டார் என எண்ணிப் பெருமைப்படுகிறோம். சுpறிலங்காவில் தமிழின அழிப்பைத் தடுக்கத் தாங்கள் தற்போது எடுத்துள்ள நிலைப்பாடும் அதற்காக எடுக்கப் போகும் நடவடிக்கைகளும் வெற்றிகண்டு, உலகத்தில் வாழும் தமிழர்களுக்கெதிராக யார் செயல்பட நினைக்கிறார்களோ அவர்களுக்கும் படிப்பினையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.

ஈழத் தமிழ் மக்களின்பால் அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைநாட்டக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதற்காகவும் அதற்காக எடுக்கப் போகும் நடவடிக்கைகளுக்காகவும் தமிழுலகம் என்றென்றும் நன்றியுணர்வோடு இருக்கும் என்பதைத் தெரிவித்து, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறோம். நன்றி.

என்றும்
அன்புடன்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
தென்னாபிரிக்கா

Comments