தமிழ்நாட்டில் சிறிலங்கா படையினருக்கு ஆயுதங்களை கொண்டுசென்ற ஊர்திகள் மீது தாக்குதல்

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் கோவை வழியாக கொச்சி துறைமுகம் மூலம் சிறிலங்காவுக்கு 80 பாரஊர்திகளில் ஆயுதங்கள் அனுப்பப்படுவதாகப் பரவிய செய்திகளையடுத்து கோவை அருகே நீலம்பூர் என்ற இடத்தில் இந்தியப் படையினருக்குச் சொந்தமான 5 பார ஊர்திகளை பொதுமக்களும், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் முற்றுகையிட்டுத் தாக்கினார்கள். ஆனால், ஆயுதங்கள் எதுவும் கடத்தப்படவில்லை என படை விளக்கமளித்துள்ளது.

கோவையை அடுத்த நீலம்பூர் புறவழிச் சாலை வழியாகக் கடந்த சில நாட்களாகவே படையினரின் பாரஊர்திகள் அதிக எண்ணிக்கையில் வந்து சென்றிருக்கின்றன. அந்த ஊர்திகள் மூலம் வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம், சேலம், கோவை வழியாகக் கொச்சி துறைமுகத்திற்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சிறிலங்காவுக்கு கடல் வழியாக அனுப்பப்படுவதாக செய்திகள் பரவின.

இதனை அறிந்ததும் பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டினண் தலைமையில் நீலம்பூர் புறவழிச்சாலையில் இன்று சனிக்கிழமை பிற்பகலில் கூடினர்.







பிற்பகல் 3:40 நிமிடத்துக்கு அந்த வழியே 5 படையினரின் பாரஊர்திகள் ஒன்றாக வந்தன. அவற்றை பெரியார் தி.க.வினரும், பொதுமக்களும் மறித்தனர்.

முதல் பாரஊர்தியின் ஓட்டுநரை சிலர் தாக்கினர். இதனால் அச்சமடைந்த 5 பாரஊர்திகளின் ஓட்டுநர்களும் அவர்களின் உதவியாளர்களும் அங்கிருந்து தப்பியோடி, மதுக்கரையில் உள்ள படை முகாமுக்கு செய்தி தெரிவித்தனர்.

அதற்குள் 5 ஊர்திகளின் சக்கரங்களை பொதுமக்கள் சேதப்படுத்தினர். பாரஊர்திகளை ஆய்வு செய்தபோது அதில் பெருமளவில் ஆயுதங்கள் இருப்பதைக் கண்டுபிடித்த பொதுமக்கள் அவற்றை அருகில் உள்ள நீர் நிலைகளில் தூக்கி வீசினர். ஊர்திகளில் இருந்த படையினரின் கூடாரத் துணி, தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றைத் தீயிட்டுக் கொளுத்தினர். அதற்குள் மதுக்கரை முகாமில் இருந்து வந்த படையினர் அங்கிருந்த பொதுமக்களையும் செய்தியாளர்களையும் அடித்து நொறுக்கினர்.

இவர்களின் தாக்குதலில் சண் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அவினாசிலிங்கம், மூன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் இராசன் உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.





செய்தியறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் கோவை இராமகிருட்டினண் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்து வேலூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். தாக்கப்பட்ட 5 பாரஊர்திகள் தவிர மீதமுள்ள 75 பாரஊர்திகள் மாற்று வழியில் அனுப்பப்பட்டன.

இந்நிகழ்வு பற்றி படையினரிடம் கேட்டபோது, "சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் எதுவும் கடத்தப்படவில்லை. மதுக்கரை முகாமைச் சேர்ந்த 200 வீரர்கள் ஐதராபாத்தில் பயிற்சி எடுத்து வந்தனர். பயிற்சி முடிந்தபிறகு அவர்கள் மதுக்கரைக்குத் திரும்பியதை பொதுமக்கள் தவறாகப் புரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

ஆனால், "இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. ஏனெனில் ஆயுதங்களை ஏற்றிவந்த பாரஊர்திகளில் அவை ஜெபல்பூரில் உள்ள பாரஊர்தித் தொழிற்சாலைக்குச் சொந்தமானவை என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இந்த பாரஊர்திகளில் படையினர் எவரும் வரவில்லை. ஓட்டுநரும், உதவியாளரும் மட்டுமே இருந்தனர். படையினர் பயிற்சிக்குச் சென்று வருவதாக இருந்தால் அவர்களுடன் 80 பாரஊர்திகளில் ஆயுதங்களைக் கொண்டு சென்று திரும்ப எடுத்துவர வேண்டிய தேவையில்லை'' என்று படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வால் கோவையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதேபோல் சேலத்திலும் சில பாரஊர்திகளை பெரியார் தி.க.வினர் மறித்து போராட்டம் நடத்தினர்.

Comments