காங்கிரஸ் தோற்பது உறுதி -அமீர்

மீர். ஈழத் தமிழர்களுக்காக திரையுலகிலிருந்து ஒலிக்கும் குரல்-களில் முக்கியமான குரல். அவரிடம் தற்போதைய இலங்கைச் சூழல் குறித்துப் பேசினோம்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதான சீமான் உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி விடுதலை ஆனதைப் பற்றி?

``இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் ஈவிரக்கமில்லாமல் கொன்று குவிக்கப்படுகிறதைக் கண்டிச்சுப் பேசுறவங் களை எல்லாம் இந்தியாவின் எதிரிகளாக முத்திரை குத்திய காங்கிரஸ்காரர்களுக்கு, இந்தத் தீர்ப்பு சரியான பதிலடி. `எங்கள் இனத்தை அழிக்காதே. அழிக்கிறவனுக்கு உதவாதே'னு ஒருத்தர் பேசுறது எப்படி தேசிய பாதுகாப்புக்கு எதிரானதாக ஆகும்னு எனக்குப் புரியவே இல்லை. வெறும் அடக்குமுறைக்காக சட்டங்களைப் பயன்படுத்துவது மக்களை முட்டாள்களாக நினைக்கிற பலவீனமான ராஜதந்திரம். எல்லாத்தையும் மக்கள் பார்த்துட்டுதான் இருக்காங்க. பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்காரங்க போட்டியிடும் 16 தொகுதிகளிலும் அவங்களுக்கு படுதோல்வி கிடைப்பது உறுதி.''

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதாகக் காரணமான சீமானின் பேச்சை நாகரிகமற்றது என்று முதல்வர் கருணாநிதி சமீபத்துல சொன்னாரே?

``எவ்வளவு உயர்ந்த நோக்கத்துக்காகப் பேசினாலும், மேடையில் வரம்பு மீறிப் பேசுறதுல எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் சீமானின் சில வார்த்தைகளை விமர்சித்த கலைஞர், சீமானுடைய கருத்துக்கள் நியாயம் அற்றவைனு சொல்லவே இல்லையே?''

இப்போ இலங்கையில் தமிழர் நிலைமை பற்றி உங்கள் கருத்து?

``தமிழ்ப்பெண்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு, அரசிடம் தஞ்சம் புகும் தமிழர்களை ஆடு மாடுகளைவிட கேவலமா நடத்துற பாதுகாப்பு முகாம்கள்னு புதுசு புதுசா கொடுமைகளைக் கேள்விப்படும்போது வேதனையா இருக்கு. கூப்பிடுற தூரத்துல ஆறரைக் கோடித் தமிழர்கள் இருந்தும் ஒண்ணும் பண்ண முடியலையேனு வெட்கமா இருக்கு. இலங்கை என்ன வல்லரசு நாடா? உலக அரங்கில் எந்தச் சக்திக்கும் கட்டுப்படாம அப்படி ஒரு நாடு இருக்க முடியுமா? இந்தியா, இலங்கை ராணுவத்துக்கு உதவி செய்யலைன்னே வச்சுக்குவோம். இனவெறியுடன் செயல்படுற இலங்கையுடன் உறவு மட்டும் எதற்கு?''

காங்கிரஸுக்கு தீவிர எதிர்ப்பாளர் ஆகிட்டீங்களே?

``நான் கட்சி சார்பற்றவன். ஈழத் தமிழர்களுக்கு எந்தக் கட்சி நல்லது செஞ்சாலும் அதை நான் ஆதரிப்பேன். `தனி ஈழம் அமைய பாடுபடுவோம்'ங்கிற வாக்குறுதியை அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பார்த்தப்போ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. காங்கிரஸுடன் எனக்கு என்ன வாய்க்கால் தகராறா? ஊரில் எங்க அப்பா காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தவர். சக தமிழர்கள் பக்கத்து நாட்டுல அழிக்கப்படுறதைக் கண்டும் காணாததுபோல் நடிக்கிற காங்கிரஸ்காரர்களின் சுயநலம் எனக்குப் பிடிக்கலை. அவ்வளவுதான்.''

ஈழத் தமிழர் பிரச்னையில் கலைஞரோட அணுகுமுறை எப்படியிருக்கிறது?

``பாராளுமன்றத் தேர்தலுக்காக ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செஞ்சுட்டார்னு நான் கலைஞரை சுலபமா விமர்சனம் செஞ்சுடலாம். ஆனால், கலைஞரின் இடத்துல நான் இருந்து பார்த்தால்தான் அவரோட கஷ்டங்கள் என்னனு தெரியும். கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய நினைப்பவர்தான். அந்த உணர்வு இல்லாமலா ஏற்கெனவே இருமுறை ஆட்சியை இங்கே இழந்தார்? `தமிழினத் தலைவர்'ங்கிற முறையில் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் பொறுப்பில் பெரும்பங்கு கலைஞருக்குத்தான் இருக்கு. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கூட்டணியால்தான் அவர் நினைச்சதை செய்வதில் தாமதம் ஏற்பட்டுருச்சு.''

முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் பற்றி என்ன நினைக்கிறீங்க?

``ஈழத்தமிழர் பிரச்னைக்காக நம் முதல்வர் போராடுறது பாராட்ட வேண்டிய விஷயம். அவரது உண்ணாவிரதத்தால்தான் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதா சொல்றாங்க. அப்படி நடந்திருந்தால் எனக்கு மிகவும் சந்தோஷம்.''

போர் நிறுத்தம் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

``கண்டிப்பா எனக்கு முழு திருப்திதான். இன்னும் சில நாட்களில் இந்தப் போர் நிறுத்தம் சிங்கள ராணுவத்தால் எவ்வளவு உண்மையா செயல்படுத்தப்படுதுனு தெரிஞ்சுடும். `கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துறதை மட்டுமே நிறுத்தியிருக்கோம்'னு இலங்கை அதிபர் ராஜபக்ஷே சொல்றார். இருந்தாலும், இதுவே பெரிய முன்னேற்றம்தானே? போர் நிறுத்தம் முதல் படிதான். தனி ஈழம், அதற்கான அங்கீகாரம்னு பல படிகள் இன்னும் இருக்கு. தனி ஈழத்தைப் பற்றி இப்போ தொடர்ந்து பேசுறவங்க, அதற்குத் தலைவராக யார் வர முடியும், யாருக்கு அந்தத் தகுதி இருக்குங்கிறதையும் யோசிக்கணும். ஒரு நாட்டின் விடுதலைக்காகப் போராடுறவங்களுக்குத்தானே அதன் ஆட்சி அதிகாரத்தில் முதல் உரிமை இருக்கு?'' அர்த்தம் பொதிந்த கேள்வியுடன் முடிக்கிறார் அமீர்.

- ஆனந்த் செல்லையா

படங்கள் : ஆர்.கோபால்

Comments