சீனாவின் ஆயுதங்கள் மூலம் சிறிலங்கா போரை வென்றுள்ளது: 'த ரைம்ஸ்'

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக முறியடிக்கும் தருணத்தை எட்டியுள்ளதாக சிறிலங்கா படையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அரசின் இந்த வெற்றிக்கான காரணம் சீனா வழங்கிய ஆயுதங்களே என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக முறியடிக்கும் தருணத்தை எட்டியுள்ளதாக சிறிலங்கா படையினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அரசின் இந்த வெற்றிக்கான காரணம் சீனா வழங்கிய ஆயுதங்களே என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சீனா தனது ஆயுதங்களை நட்பு நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கும் தொடர்ச்சியாக வழங்கி வருவது மேற்குலகத்தின் கவனத்தை மட்டும் ஈர்க்கவில்லை. மாறாக பல ஆசிய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உள்நாட்டுப் போரில் கொழும்பு ஈடுபட்டு வருவதால் 1990-களில் இந்தியாவும் மேற்குலகமும் சிறிலங்காவுக்கான ஆயுத விநியோகங்களை மட்டுப்படுத்தியபோது சீனாவே சிறிலங்காவின் பிரதான ஆயுத விநியோகிஸ்தராக செயற்பட்டு வந்தது.

சிறிலங்காவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை அமெரிக்கா இடைநிறுத்தியபோது சீனா சிறிலங்காவுக்கான ஆயுத உதவிகளை 2007-களில் பல மடங்கு அதிகரித்திருந்தது.

உலகின் மொத்த ஆயுத விற்பனையில் சீனா 4 வீதத்தை கொண்டுள்ளது. பிரித்தானியா 8 வீதத்தையும் அமெரிக்கா 40 வீதத்தையும் கொண்டுள்ளன.

சிறிலங்காவில் சிறிய மீன்பிடி கிராமத்தை சீனாவின் நிறுவனங்கள் பாரிய துறைமுகமாக அபிவிருத்தி செய்து வருகின்றன. அம்பாந்தோட்டையில் பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்த துறைமுகம் சீனாவின் கடற்படை கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் மையங்களாக தொழிற்படலாம்.

சீனாவின் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிபொருட்கள் இந்த பாதையினால் தான் கொண்டுவரப்படுவது உண்டு. அதற்கு பாதுகாப்பாக சீனாவின் கடற்படை செயற்பட்டு வருகின்றது. இந்த கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்பும் துறைமுகமாக அம்பாந்தோட்டை வருங்காலத்தில் செயற்படும்.

இதன் பொருள் என்னவெனில் அம்பாந்தோட்டை ஒருநாள் சீனாவின் கடற்படை தளமாக மாற்றமடையலாம். சிலர் அவ்வாறு இருக்காது என எண்ணலாம். ஆனால், அதுதான் உண்மை, சீனாவின் படைத்துறை திட்டமிடல் அதிகாரிகள் தொலைநோக்கு பார்வை உடையவர்கள்.

தாய்வானுடன் மோதல் ஏற்படும் சமயத்தில் அது சீனாவின் கடற்பாதைகளில் தடையை ஏற்படுத்துமா? அவ்வாறான பாதகமான நிலமைகளை தான் சீனாவின் திட்டமிடல் அதிகாரிகள் தமது மனதில் கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சீனாவுக்கு தூரமான இடங்களில் நண்பர்கள் தேவை. எனவேதான் அவ்வாறான உறவுகளை சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் அது ஏற்படுத்தி வருகின்றது. பாகிஸ்தானில் ஹெடார் துறைமுகத்தையும் சீனா நிர்மாணித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments