உலகம் முழுவதும் போராட்டக் களத்தில் நிற்கும் எல்லோரும் புலிகள்தான்- சீமான்

''தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட இயக்குநர் சீமான், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்யப் போகிறார்'' என்கிற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்க, வடபழனி ஸ்டூடியோ ஒன்றில், `மாயாண்டி குடும்பத்தார்' படத்துக் காக இரண்டாவது நாளாகத் தொடர்ந்து `டப்பிங்' கொடுத்துக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசினோம்.

சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?

``குற்றவாளிகளைத் திருத்தி அனுப்பும் இடமாகவே சிறைச்சாலை பார்க்கப்படுகிறது. அது உண்மையாக இருக்க வேண்டுமென்றால், காக்கிச் சீருடையில் அன்னை தெரசாவே சிறைத்துறைப் பணிக்கு வரவேண்டும். அங்குள்ள நிர்வாக முறை குற்றவாளிகளைத் திருத்துவதற்குப் பதில் முன்பைவிட மூர்க்கமாகவே வெளியே அனுப்புகிறது.

நன்னடத்தையைக் காரணம் காட்டி காந்தி, அண்ணா பிறந்த நாட்களில் வாழ்நாள் சிறை தண்டனைக் கைதிகள் விடுதலையாக தமிழகச் சிறைகளில் வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பும் புதுச்சேரியில் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் நாளிதழ்கள் மூலமாக செய்திகளைத் தெரிந்துகொண்டேன். புதுச்சேரி சிறையில் கைதிகளுக்கென்று காயின் பாக்ஸ் தொலைபேசி உள்ளதால், தினமும் பாரதிராஜா அப்பாவிடமும் மணிவண்ணன் அப்பாவிடமும் பேசி ஈழச் செய்திகளைக் கேட்டறிந்தேன். அந்தத் துயரச் செய்திகளைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் தனிமைச் சிறையில் தவித்தேன்.''

முதல்வர் கலைஞரின் உண்ணாநிலை அறப் போரினால், இலங்கை அரசு தமிழர்கள் மீதான போரை நிறுத்திவிட்டதாக, தகவல்கள் வருகிறதே?

``அப்படி அறிவித்த அரைமணி நேரத்தில் இலங்கை விமானங்கள் குண்டுகளை வீசி, தமிழர்களைக் கொன்றிருக்கிறது. உண்மையில், `கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்' என்றுதான் ராஜபக்ஷே அறிவித்தார். அப்படியென்றால் துப்பாக்கிகள், குண்டுகள் தமிழனைக் கொல்லாமல் முத்தமிடுமா? தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அயலுறவுத்துறை செயலர் சிவசங்கர மேனன் ஆகியோர் ராஜபக்ஷேவைச் சந்தித்து, `பிரபாகரனைத் தொட்டுவிட்டாலோ, பெரிதாக ஏதாவது நடந்து விட்டாலோ இந்தியாவில் தேர்தல் முடியும் வரை அந்தத் தகவலை வெளியிட வேண்டாம்' என்றுதான் கோரிக்கை வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள். `தமிழக முதல்வரின் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கருத்தில் கொண்டுதான் கனரக ஆயுதத் தாக்குதலை நிறுத்திவிட்டோம்' என்று ராஜபக்ஷே சொல்லியிருந்தால் அதை வரவேற்றிருப்பேன்.''

இந்தத் தேர்தலில் உங்கள் பிரசாரம் காங்கிரஸுக்கு எதிராக இருக்குமா? காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக இருக்குமா?

``நிச்சயம் காங்கிரஸுக்கு எதிரானதாக மட்டுமே இருக்கும். கடலுக்கு அந்தப் பக்கம் ஈழத்தமிழன் கொல்லப்படுகிறான் என்றால், இந்தப் பக்கம் இந்திய மீனவன் சாகடிக்கப்படுகிறான். என்றைக்காவது காங்கிரஸ் அரசு இலங்கை ராணுவத்தின் இந்தப் போக்கைக் கண்டித்திருக்கிறதா? பாகிஸ்தான் சிறையில் இருந்த சீக்கியர் ஒருவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யப் போராடிய காங்கிரஸ் அரசு, செத்து மடியும் மீனவத்தமிழனுக்குக் குரல் கொடுக்காதது ஏன்? இந்தியாவிடம் இருந்து ரேடார்கள், ராணுவ நிபுணர்கள், வட்டியில்லா கடன் பெற்றுக் கொண்டே இந்திய மீனவனைக் கொன்றொழிக்கிறது, இலங்கை அரசு. சொந்த இனத்தின் உரிமைக்காக சிந்திக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தாதா?

ஈழத்தமிழனுக்கு எதிரான போரை நிறுத்து என்று ஹிலாரி கிளிண்டன், அருந்ததி ராய், மேதாபட்கர் ஆகியோர் கேட்கிறார்கள். சோனியா காந்தி மட்டும் `போரை நிறுத்து' என்று சொல்லவில்லையே? மத்தியிலும் கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் காவிரி பிரச்னையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது ஏன்? கர்நாடகத்தில் கன்னடர்களின் நலனுக்கு விரோதமான எந்த முடிவையும் அங்குள்ள கட்சிகள் எடுக்க முடியாது. தமிழ்நாட்டிலும் தமிழனின் நலன் காக்காத காங்கிரஸ் மட்டுமல்ல; எந்தக் கட்சியும் வீதிக்கே வரமுடியாது என்கிற நிலை வரும்வரை போராடுவேன். இது என் வரலாற்றுக் கடமை.''

இத்தனை நாட்கள் நடந்த போராட்டத்திற்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லையே?

``பதினான்கு பேர் உயிராயுதம் ஏந்தினார்கள். இருபது பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதமிருந்தார்கள். மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டங்கள், தொடர் முழக்கப் போராட்டங்கள் என ஆறரைக் கோடி தமிழன் முன் வைத்த போர் நிறுத்த கோரிக்கையை ஏற்காத காங்கிரஸ் அரசு, `யாரந்த முத்துக்குமார்?' என்றுதானே கேட்டது. ஆனால், ஷூ வீசிய சீக்கியனுக்கு மட்டும் சிம்மாசன மரியாதை. இத்தனை நாட்களாக கட்சிகளுக்கும், சாதி சனத்துக்கும் வாக்களித்த தமிழன், இந்த முறை தன்னினத்துக்காக வாக்களிக்கப் போகிறான். ஆக, தமிழினத்துக்கு எதிரான நிலைப்பாட்டுடன் எவனும் இந்த மண்ணை எட்டிப் பார்க்க முடியாது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும்.''

விடுதலைப் புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டால்தான் போர் முடிவுக்கு வரும் என்கிறார்களே?

``புலிகள் என்று யாரையும் தனித்துப் பார்க்காதீர்கள். உலகம் முழுவதும் போராட்டக் களத்தில் நிற்கும் எல்லோரும் புலிகள்தான். தன் இனத்துக்காக இன்னுயிர் நீத்த முத்துக்குமார் உள்ளிட்ட 14 பேரும் புலிகளே. தன் சகோதரியை கற்பழித்தவனை பழிக்குப் பழி வாங்கும் எல்லோரும் புலிகள்தான். ஓரினம், நாற்பது ஆண்டுகள் அறப் போராட்டம் நடத்தியும் இருபத்தைந்து ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் நடத்தியும் விடுதலைக்காகப் போராடி வருகிறது. விடுதலைப்புலிகள் வன்னி மண்ணில் ஓர் அரசாங்கத்தையே நடத்தி வந்தார்கள். வைப்பகம், நீதிமன்றம், காவல்துறை என அனைத்தையும் அழித்து விட்டது இலங்கை ராணுவம்.. மீண்டும் அவற்றைக் கட்டமைக்க பத்தாண்டுகள் கூட ஆகலாம். மரபுவழிப் போரில் இருந்து கொரில்லாப் போர் முறைக்கு அவர்கள் மாற வேண்டியிருக்கும்.''

திரைப்பட இயக்குநர்கள் நடத்திய தொடர் முழக்கப் போராட்டத்தில் பெரும்பாலான கலைஞர்கள் கலந்து கொள்ளவில்லையே?

``அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்வதில் சிலருக்கு அச்சம் இருக்கலாம். என்னைக் கைது செய்ததால் `மாயாண்டி' பட வேலைகள் பாதிக்கப்பட்டன. தொழிலை விட்டுவிட்டு சிறைக்குச் சென்றதால் பொருளாதாரரீதியான பிரச்னைகள் எவ்வளவோ எனக்குண்டு. எனவே, ஒதுங்கியிருக்கும் கலைஞர்கள் உணர்வு ரீதியாக எங்களது போராட்டத் திற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டுதானிருக்கிறார்கள். மே இரண்டாம் தேதியில் இருந்து திரைப்பட தமிழீழ ஆதரவு இயக்கத்தின் காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் தொடங்கும்'' என்று கூறி, மீண்டும் பின்னணிக் `குரல்' கொடுக்கப் புறப்பட்டார், இயக்குநர் சீமான்.

படம் : ம.செந்தில்நாதன்

- வே. வெற்றிவேல்

Comments