தேர்தல் காலத்துக் கூத்துக்கள்: ஏமாறப்போவது யார்?

இன்று ஈழத்தமிழ் மக்கள் சந்தித்துள்ள அவலங்கள் தமிழக அரசியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இன்று ஈழத்தமிழ் மக்கள் சந்தித்துள்ள அவலங்கள் தமிழக அரசியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. தமது இன மற்றும் மொழி அடையாளங்களை தொலைத்து விடுவோமோ என்ற அச்சம் தமிழ் மக்களை சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் தமிழக தேர்தல்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் அவை தொடர்பாக ஏறுக்கு மாறான கருத்துக்களும், செயற்பாடுகளும் தமிழகத்தில் இடம்பெற்று வருகின்றன.

வவுனியாவுக்கு சென்ற போது அறியப்பட்ட விடயங்கள் தொடர்பாக வாழும் காலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அ.தி.மு.க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவுக்கு தெரிவித்திருந்தார்.

வன்னியில் ஏற்பட்டுள்ள மனித பேரவலம் தொடர்பாக அவருடன் கலந்துரையாடிய பின்னர் " தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு" என்ற கருத்தை ஜெயலலிதா உறுதிபட கூறியதுடன், அதனை மீண்டும் மீண்டும் கூறிவருவது உலகத்தமிழ் மக்களின் உளவுரனை அதிகரிக்க செய்து வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

மாற்றம் என்பது எல்லோரிடமும் வரலாம். அவ்வாறு ஜெயலலிதாவின் மாற்றமும் இருக்குமாக இருந்தால் தமிழ் இனத்திற்கு அது வலிமை சேர்ப்பதாகவே அமையும். எனினும் ஜெயலலிதாவின் இந்த அறிக்கை ஊடகங்களின் வெளிச்சங்களை அவரின் பக்கம் பல மடங்கு செறிவாக்கியதை தொடர்ந்து தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் திடீர் உண்ணாநோம்பு ஒன்றை கடந்த திங்கட்கிழமை (27) மெரீனா கடற்கரையில் ஆரம்பித்து சில மணிநேரத்தில் முடித்து தனது பக்கமும் ஊடகங்களின் வெளிச்சத்தை வரவைத்திருந்தார்.

இதனை உண்ணா நோன்பு என கூறுவதை விட மெரீனா கடற்கரையில் சில மணிநேரம் காற்று வாங்க அமர்ந்திருந்தார் என கூறுவது பொருத்தமானது என எனது நண்பர் ஒருவர் தெரிவித்தார் ஒரு வகையில் அதுவும் சரி தான். கருணாநிதியின் குறுகிய கால நாடகத்தை போலவே அவரின் பிரச்சாரத்தின் வலிமையும் 24 மணிநேரத்தில் மழுங்கிப்போய்விட்டது.

சிறீலங்கா அரசு போர் நிறுத்தம் செய்துள்ளதாக தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்றிய போதும் அவ்வாறு போர் நிறுத்தம் ஒன்று ஏற்படவில்லை என சிறீலங்காவின் இராணுவப்பேச்சாளர் உதயா நாணயக்காரா தெரிவித்த கருத்து தி.மு.க - காங்கிரஸ் கட்சியின் வேசத்தை கலைத்து விட்டது.எனினும் பாதுகாப்பு வலையத்தின் மீது சிறீலங்கா அரசு கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டாது என்ற வாதத்தை அவர்கள் தூக்கி பிடிக்கலாம்.

ஆனால் சிறீலங்கா அரசினால் இந்த உறுதிமொழிகள் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஐ.நாவுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகள். அதனை கூட அவர்கள் அப்பட்டமாக தொடர்ச்சியாக மீறி வருகின்றனர், இந்த உறுதிமொழிகளையாவது காப்பாற்றுவதற்கு தான் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் சிறீலங்கா சென்று மன்றாடி வருகின்றார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் தற்போது தேர்தல் காலம் எனவே அரசியல் சாயங்களும், மனிதாபிமான சாயங்களும் அங்கு அதிகமாகவே பூசப்படலாம். அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, அதிகாரிகள் கூட தற்போதைய ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசினை காப்பாற்ற அரும்பாடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே நாரயணன், வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் போன்ற அதிகாரிகளின் வரிசையில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தாவையும் சேர்ந்துக்கொள்ளலாம்.

சிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் போருக்கு இந்தியா உதவிகளை வழங்கவில்லை என இந்திய கடற்படை தளபதி கடந்த மாதம் 27 ஆம் நாள் உச்சிப்புள்ளியில் கடற்படையினருக்கான வான்படை பிரிவு (INS Parundu) ஒன்றை அமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்திருந்தார்.

முழுப்பூசணிக்காயை சோற்றினுள் மறைப்பது எப்படி என பாடம் கற்க விரும்புபவர்கள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தாவை அணுகலாம். அந்த அளவிற்கு அவர் வெளியிட்ட அறிக்கை அமைந்துள்ளது. தற்போது தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசினால் நடத்தப்படும் போரானது இந்திரா காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய அரசினாலேயே நெறிப்படுத்தப்பட்டு வருவது உலகறிந்த விடயம்.

இந்தியா என்றாலே முகத்தை திரும்பிக் கொள்ளும் சிறீலங்கா அமைச்சர்கள் கூட தற்போது இந்திய மத்திய அரசை விழுந்து விழுந்து போற்றி வருவதற்கான காரணம் இந்திய மத்திய அரசு வழங்கிய ஆதரவுகளும் உதவிகளும் தான். நிதி உதவிகளையும், படைத்துறை உதவிகளையும் மட்டும் இந்தியா வழங்கவில்லை மாறாக விஜய் நம்பியார் போன்றவர்களை ஐ.நாவின் முக்கிய பொறுப்பில் அமர்த்தி இராஜதந்திர உதவிகளையும் இந்தியாவே மேற்கொண்டு வருகின்றது.

தளபதியின் கருத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய போதும் தற்போது இந்தியாவில் தேர்தல் காலம் என்பதனால் அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, அதிகாரிகளும் அதிகார வர்க்கத்தின் கறைகளை மறைக்க சாயங்களை பூசிக்கொள்வது வழமையான ஒன்றே என்பதால் இந்த ஆச்சரியங்கள் அடங்கி போய்விட்டன.

இருந்த போதும் இந்திரா காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய கூட்டணி அரசு சிறிலங்காவில் நடைபெறும் போரை முன்னின்று நடத்துவதற்கு வழங்கிய ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தொடர்பாக மீண்டும் ஒருமுறை மீட்டிப்பார்ப்பது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமானது.

2005 ஆம் ஆண்டு சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு மேற்கொண்ட முதலாவது விஜயத்தின் போது அன்று நடைமுறையில் இருந்த போர் நிறுத்தத்தை குழப்பி தமிழ் மக்கள் மீதான போரை தூண்டும் முகமாக இரண்டு இந்திரா-II (Indra-II radars) ரக ராடார்களை அன்பளிப்பாக வழங்கிய இந்தியா, பின்னர் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜுன் மாதங்களில் மேலும் இரு ராடார்களை வழங்கியிருந்தது.

இந்திய வான்படையினரே அதனை வழங்கியிருந்தனர்.பின்னர் நேர்வேயின் அனுசரணையுடன் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக மீறிய சில மாதங்களில் அதற்கான வெகுமதியை சிறீலங்கா அரசிற்கு இந்தியா வழங்கியிருந்தது.

அதாவது 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1750 மில்லியன் இந்திய ரூபாய்கள் பெறுமதியான வாரகா (Varaha) என்னும் ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை சிறீலங்கா கடற்படையினருக்கு இந்திய கடற்படை வழங்கியிருந்து.

இது இந்தியாவினால் வழங்கப்பட்ட இரண்டாவது பெரிய கப்பலாகும். ஏழு வருடங்களுக்கு முன்னர் சாயுரா(SLNS Sayura) என்னும் கண்காணிப்பு கப்பலையும் இந்தியா வழங்கியிருந்தது.சிறீலங்கா கடற்படையினரின் ஆழ்கடல் நடவடிக்கைகளை அதிகரிக்கும் நோக்கத்துடனே இந்தியா இந்த கப்பல்களை அவசரமாக வழங்கியிருந்தது.

சிறீலங்கா அரசின் கொடுமையான போரினால் தமிழ் மக்கள் அதிகளவில் கொல்லப்படும் போது வாரகா என்னும் கப்பலை வெளிப்படையாக வழங்குவது தமிழகத்தில் உணர்வலைகளை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினால் சென்னையில் தரித்து நின்ற கப்பல் விசாகப்பட்டினத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு வைத்து கையழிக்கப்பட்டது.

ஊடகங்களுக்கும் பொது மக்களுக்கும் தகவல்களை மறைக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இந்திய கடற்படையின் ரோந்து படையணி தமது சுற்றுக்காவல் நடவடிக்கைகளுக்கே போதியளவு கப்பல்களை கொண்டிராத நிலையில் இந்த கப்பல் சிறீலங்காவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஏறத்தாள 200 கோடி இந்திய ரூபாய்கள் பொறுமதியுள்ள இதனை ஒத்த பாரிய கப்பல்களை கட்டி முடிப்பதற்கு 3 தொடக்கம் 5 வருடங்கள் எடுக்கும் என்ற நிலையிலும் பாரிய ரோந்து கப்பலை இந்திய கடற்படை சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படையின் இந்த திட்டமிட்ட உதவிகளுக்கு அப்பால் சிறீலங்கா கடற்படையினருடன் இணைந்து அனைத்துலக கடற்பரப்பு எல்லைகளை கண்காணிப்பது தொடர்பான ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டதுடன்(IMBL-International Maritime Boundary Line)கூட்டு ரோந்துகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும் சிறீலங்கா கடற்படையினருடன் இந்திய கடற்படையினர் கூட்டுரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என இந்திய படை அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் சிறீலங்கா கடற்படையினரும் இந்திய கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் வெற்றியடைந்துள்ளதாக சிறீலங்காவின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணகொட கடந்த வருடம் ஜனவரி மாதம் கொழும்பு போஸ்ட் (The Colombo Post weekly) என்ற வார ஏட்டிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இரு கடற்படையினரும் கூட்டாக சுற்றுக்காவலில் ஈடுபட்டு வந்ததை உறுதிப்படுத்திய கரணகொட இந்திய கடற்படையினாரின் தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் 10,000 தொன் எடை கொண்ட விடுதலைப்புலிகளின் கப்பல் பொருட்களை தாக்கி அழித்துள்ளதாகவும் பெருமை பேசியிருந்தார்.

அதே சமயம் தமிழக மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் பாதுகாப்புக்கான ஆயுதங்களை மட்டுமே சிறீலங்காவுக்கு வழங்குகின்றோம் என்ற போர்வையில் அதிநவீன ஆயுதங்களையும் தொழில்நுட்ப உதவிகளையும், தொழில்நுட்ப சாதனங்களையும் இந்தியா சிறீலங்காவுக்கு தொடர்ந்து வழங்கிவந்தது.

2007 ஆம் ஆண்டு 40 மி.மீ எல்-70 ரக விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் (40mm L-70 anti-aircraft guns) மேலதிகமாக இந்திரா-II (Indra-II low-flying detection radars) ரக ராடார்களையும் வழங்கியிருந்தது.

இந்தியாவினால் வழங்கப்பட்ட இந்த எல்-70 ரக பீரங்கிகள் இரண்டை விடுதலைப்புலிகளின் சிறப்பு கொமோண்டோ அணியினர் 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அனுராதபுரம் வான்படை தளம் மீதான தாக்குதலின் போது அழித்திருந்தனர். தற்போது இந்த வகை கனரக ஆயுதங்களை சிறீலங்கா படையினர் வன்னி களமுனையில் தரை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவதுடன், அதனால் பொதுமக்களும் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவின் உளவியல் ரீதியான ஆதரவுகளும் சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் போருக்கு பெரும் உறுதுணையாக இருப்பதாக சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்திருந்ததுடன், இரகசியமாக மேலதிக ஆயுத உதவி உடன்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து 40,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எல்-70 ரக பீரங்கிகளின் உதிரிப்பாகங்களை இந்தியா வழங்கியிருந்தது. மேலதிக ராடார்கள், களமுனை பீரங்கிகள், நிசாந் வகை உளவுவிமானங்கள், லேசர் மூலம் குண்டுகளை வழிநடத்தும் கருவிகள்(Laser Designators for Precision-guided Munitions) என்பனவும் வழங்கப்பட்டன.

இவை மட்டுமல்லாது போர் உக்கிரமடைந்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்காவின் அன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரா இந்தியாவுக்கு மே மாதம் மேற்கொண்ட விஜயத்தின் போது பின்வரும் ஆயுத தளபாடங்களை தந்துதவுமாறு பட்டியல் ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

வான்படையினருக்கு: மிக்-27 தாக்குதல் விமானங்களுக்கான பராமரிப்பு பணிகள், லேசர் மூலம் வழிநடத்தப்படும் குண்டுகளுக்கான சாதனங்கள்; (Laser-guided bomb upgrade kits), பாரிய குண்டுகள் (dumb bombs), பதுங்குழிகளை ஊடுருவும் குண்டுகள், விமானம் மூலம் ஏவப்படும் உந்துகணைகள்.

கடற்படையினருக்கு: கப்பல்களில் வைத்து இயக்கப்படும் மோட்டார்கள், அதற்கான எறிகணைகள், சிறிய விரைவு தாக்குதல் படகுகள், கடல் கண்ணிவெடிகள்.

இராணுவத்தினருக்கு: பல்குழல் உத்துகணை செலுத்திகள், மோட்டார்கள், வான்பாதுகாப்பு ஆயுதங்கள், 5.56 மி.மீ சிறப்பு தாக்குதல் துப்பாக்கிகள், தரை கண்காணிப்பு ராடார்கள், இரவு பார்வை சாதனங்கள், துருப்புக்காவி கவச வாகனங்கள், ஆளில்லாத உளவுவிமானங்கள், டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை காவிச்செல்லும் மிலான் ரக ஜீப் வண்டிகள்(Milan anti-tank missile jeeps) கண்ணிவெடி பாதுகாப்பு வாகனங்கள்.

இந்த பட்டியலில் உள்ள ஆயுதங்களை வழங்கமுடியாது என இந்தியா வெளிப்படையாக தெரிவித்த போதும் அவற்றில் பெருமளவான ஆயுதங்கள் சிறீலங்கா அரசிற்கு இரகசியமாக வழங்கப்பட்டுவிட்டன என இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

சில ஆயுதங்களுக்கு பாகிஸ்த்தான் மற்றும் செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளை அணுகுமாறு இந்திய மத்திய அரசு பரிந்துரையும் செய்திருந்தது.உதாரணமாக பாகிஸ்த்தானில் இருந்து பக்தர் சிகான்(Baktar Shikan ATGM) என்னும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்யுமாறு பரிந்துரை செய்திருந்த இந்திய அதிகாரிகள் அவற்றை செயற்திறன் மிக்க முறையில் காவிச் செல்வதற்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மிலான் ரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணை காவும் வாகனங்களை சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது.

தற்போது இந்த வாகனங்களில் பொருத்தப்பட்ட ஏவுகணைகளுடன் 55 ஆவது படையணியின் துருப்பினர் அதிகம் காணப்படுவதுடன், கடந்த மாதம் 30 ஆம் நாள் புதுக்குடியிருப்பில் இருந்து வடமராட்சி நோக்கி பயணித்த மக்களின் படகு தொகுதி மீதும் இராணுவம் இந்த ஏவுகணை மூலம் தாக்குதல்களை நிகழ்த்தியிருந்தது. கனரக கவச வாகனங்களை அழித்தல், பதுங்குகுழிகளை அழித்தல், படகுகளை அழித்தல் ஆகிய பல களமுனைகளில் இந்த ஏவுகணைகளை பயன்படுத்த முடியும்

இவை தவிர 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இரண்டு எம்ஐ-17 ரக துருப்புக்காவி உலங்குவானூர்திகளையும் சிறீலங்கா அரசிற்கு இந்தியா கடனாக வழங்கியிருந்தது. இந்த உலங்குவானூர்தியில் ஒன்று அதே வருடம் மார்ச் மாதம் வான்புலிகள் கட்டுநாயக்கா வான்படை தளம் மீது மேற்கொண்ட தாக்குதலில் சேதமடைந்திருந்தது.

உலங்குவானூர்தி சேதமடைந்ததனால் இந்தியாவின் இரகசிய நடவடிக்கை அம்பலத்திற்கு வந்தது. இது மட்டுமல்லாது, சிறீலங்கா அரசின் படை நடவடிக்கைகளுக்கு தேவையான படைத்துறை ஆலோசனைகளையும், தொழில்நுட்ப உதவிகளையும், உளவுத்தகவல்களையும் வழங்கி வந்த இந்தியா வன்னி பகுதி மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கியதுடன் விடுதலைப்புலிகளின் நகர்வுகள் தொடர்பான தகவல்களையும் சிறீலங்காவக்கு வழங்கி வந்திருந்தது.

மேலும் படையினாரின் பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் படைத்துறை தொழில்நுட்பவியலாளர்களை வன்னி களமுனைகளுக்கும் அனுப்பியிருந்தது.அவர்கள் வவுனியா வான்படை தளத்தில் இருந்து சிறீலங்கா வான்படையின் விமான தாக்குதல்களை நெறிப்படுத்தி வந்த தகவல் வான்புலிகள் வவுனியா படைத்தளம் மீது மேற்கொண்ட வான் தாக்குதலில் அம்பலமாகியிருந்தது.

மேலும் வன்னி படை நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த சிறீலங்கா இராணுவ டிவிசன்களின் உப பிரிவுகளான பிரிகேட் தளபதிகளை அடிக்கடி இந்தியாவுக்கு அழைத்து படை நடவடிக்கைக்கு தேவையான பயிற்சிகளையும், வழிகாட்டல்களையும் இந்திய படை அதிகாரிகள் வழங்கி வந்திருந்தனர்.

இந்தியாவின் இந்த செயற்பாடுகள் அனைத்திற்கும் பகிரங்கமாக நன்றி தெரிவிக்கும் தொனியில் இந்தியாவை தலையில் தூக்கி வைத்து போற்றியுள்ளார் சிறீலங்காவின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் ஸ்ரீறீபால டீ சில்வா. கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் இந்தியாவில் இருந்து புல்மோட்டை பகுதிக்கு வந்துள்ள இந்திய படையினாரின் மருத்துவக்குழுவினர் மத்தியில் உரையாற்றும் போது "சிறீலங்கா அரசிற்கு இந்தியா ஆற்றிய உதவிகள் மிகவும் காத்திரமானவை எனவும் ஏனைய நாடுகள் அறிக்கைகளை விடுத்து கொண்டு இருக்கும் போது இந்தியா நேரடியாக களத்தில் இறங்கி செயற்பட்டதுடன், எமக்கு (போருக்கான) உதவிகள் தேவைப்பட்ட சரியா தருணத்தில் நிபந்தனையற்ற உதவிகளை இந்திய வழங்கியிருந்தது போற்றத்தக்க விடயம்" என கூறியிருந்தார்.

அதாவது மகிந்த அரசினால் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்களின் குருதிக்கறைகள் இந்திரா காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கைகளில் தான் அதிகம் படிந்துள்ளது. எனினும் தேர்தல் நேரம் என்பதனால் தமது கைகளை கழுவுவதற்கு அவர்கள் தற்போது முற்பட்டு வருகின்றனர்.சிறீலங்காவுக்கு படைத்துறை உதவிகள் வழங்கப்படவில்லை என கடற்படை தளபதியும், சிறீலங்காவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்திரா காங்கிரசின் தலைவியும் தற்போதைய இந்திய மத்திய அரசை வழிநடத்துபவருமான சோனியா காந்தியும், சிறீலங்காவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பா சிதம்பரமும் கருத்துக்களை கூறி வருவதும் அதனால் தான்.

இன்னும் சிறிய காலத்திற்கு இவர்கள் இவ்வாறு பல சாயங்களை பூசக்கூடும் ஆனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறப்போவதில்லை. தமிழ் மக்களுக்கு என்று ஒரு நாடு இல்லை என்பது எவ்வளவு அவலமானது என்பதை தற்போது உலகத்தின் ஒட்டுமொத்த தமிழினமும் உணர்ந்து கொண்டுள்ளது. மேலும் அரசியலுக்காக தமிழகத்தின் முன்னனி தலைவர்கள் ஆடும் நாடகங்களும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனங்களை வெகுவாக பாதித்துள்ளது.

உலகில் அழிவை சந்தித்து வரும் பண்டா கரடிகளை கூட காப்பாற்ற ஒரு டொலர் தாருங்கள் என தொலைக்காட்சிகளிலும், இணையத்தளங்களிலும் விளம்பரங்களை மேற்கொள்ளும் உலகம் தமிழர் என்றொரு இனம் அழிவை சந்தித்து நிற்கையில் வேடிக்கை பார்ப்பது வேதனையானது.

இருந்த போதும் உலகின் ஒட்டுமொத்த தமிழினமும் ஒன்றுபட்டு ஒரு பெரிய சக்தியாக அணிதிரண்டு வருவது நம்பிக்கையான செய்தி. எனவே காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்தவர்கள் வருங்காலத்திலும் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என கருதினால் அதற்கான பதிலை தமிழ் சமூகம் அவர்களுக்கு புரியும் மொழியில் வழங்கும் என்ற நம்பிக்கைகள் தற்போது மெல்ல மெல்ல வலுப்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் இல் இருந்து

அருஷ்

www.tamilkathir.com

Comments