"பொதுமக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை": வன்னி நிலை பற்றி ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆழ்ந்த கவலை

வடபகுதியில் இடம்பெறும் போரில் பொதுமக்கள் கொல்லப்படுவதையிட்டு தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கும் ஐ.நா. பாதுகாப்புச் சபை, பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுள்ளது.


15 நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் ஒன்று நேற்று புதன்கிழமை எடுக்கப்பட்டது.

போர் தொடங்கி பல மாதங்கள் சென்றுவிட்ட நிலையில் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் நேற்றுதான் இது தொடர்பாக ஆலோசனைகள் அதிகாரபூர்வமாக முதல்தடவையாக இடம்பெற்றிருக்கின்றது.

ஐ.நா. பாதுகாப்புச் சபை வன்னி நிலை தொடர்பாக அதிகாரபூர்வமற்ற பல கூட்டங்களை ஏற்கனவே நடத்தியிருந்த போதிலும், பல நாடுகளின் எதிர்ப்பினால் இது தொடர்பில் அதிகாரபூர்வமான கூட்டம் எதனையும் நடத்த முடியவில்லை.

இருந்த போதிலும் கடந்த வார இறுதியில் பெரும் தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், அதிகாரபூர்வமான விவாதம் ஒன்றை நடத்துவதற்கு ரஷ்யா, சீனா, வியட்நாம் மற்றும் லிபியா ஆகியன இணங்கின.

இந்த நாடுகள் இது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை எனவும் இதனையிட்டு விவாதிக்கத் தேவையில்லை எனவும் முன்னர் கூறிவந்தன.

இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் ஏகமனதாக முறையில் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டரீதியாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல எனத் தெரிவிக்கும் இராஜதந்திரிகள், இருந்தபோதிலும் சிறிலங்கா மீதான அழுத்தங்களை மேலும் அதிகரிப்பதற்கு இது உதவுவதாக அமையும் எனவும் தெரிவித்தனர்.

"வடபகுதியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக, குறிப்பாக அண்மைக்காலத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்றனர்" என மூடிய கதவுகளுக்குள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பல வருட காலமாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருவதற்காக அதனைப் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள இந்த அறிக்கையில், புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அவர்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதி மக்களை வெளியே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

பிரச்சினைக்குரிய மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகள் மீது சிறிலங்கா அரசாங்கப் படைகள் தொடர்ச்சியாக கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதையிட்டும் பாதுகாப்புச் சபை தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரியப்படுத்தியிருக்கின்றது.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இந்தப் பிரச்சினையைக் தனிப்பட்ட முறையில் கையாள வேண்டும் என்பதற்கும் இந்த அறிக்கையில் ஆதரவு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

"பாதுகாப்புச் சபையால் முன்னெடுக்கப்பட்ட ஒரு முக்கிய தீர்மானம் இது" எனக் குறிப்பிடும் பிரித்தானிய தூதுவர் ஜோன் வாவர், "இலங்கையில் மோசமடைந்து வரும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பில் நாம் முதல் தடவையாக அதிகாரபூர்வமான அறிக்கை ஒன்றை எழுத்து மூலமாக வெளியிட்டிருக்கின்றோம்" எனத் தெரிவித்திருக்கின்றார்.

அமெரிக்காவின் ஆதரவுடன் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளும் இதற்கான தமது இணக்கத்தை ஏகமனதாக வெளியிட்டதாகவும் ஐ.நா. வட்டாரங்களை ஆதாரங்காட்டி செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

Comments