மனிதப் பேரவலத்தை தடுப்பதற்கு அனைத்துலக சமூகத்துக்கு கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவே: த.தே.கூ. எச்சரிக்கை

வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகத்துக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவே எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் மேலும் பாரிய இரத்தக்களரியைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் அது தவிர்க்க முடியாது போகலாம் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு ஜானகி ஹோட்டலில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா உட்பட கூட்டமைப்பிள் 13 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

வன்னியில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம், நூறு சிறுவர்கள் உட்பட்ட 580 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றது என இங்கு தெரிவித்த இரா.சம்பந்தன், அரசாங்கத்திற்கு பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது. அதேபோல தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ளது எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், வன்னியில் பசியாலும் பொதுமக்கள் ஒரு புறம் பலியாகிக்கொண்டிருக்க, படையினர் கனரக ஆயுதங்களின் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துவதாலும் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்த சம்பந்தன், இந்நிலையில் அரசாங்கம், பாதுகாப்பு வலயத்திற்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள் எனக்கூறி, தமிழ் மக்களை இன அழிப்புக்கு உள்ளாக்கி வருவதாக குற்றம் சாட்டினார்.

குறிப்பாக வன்னியில் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் மக்கள் சிறிலங்காப் படையினரின் கனரக ஆயுதங்களின் தாக்குதல்களால் பலியாகியுள்ளனர். சுமார் 20 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இங்கு தெரிவித்தனர்.

கடந்த 27 ஆம் திகதி முதல் பாதுகாப்பு வலயங்களின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என அரசாங்கம் உறுதியளித்தபோதும், தொடர்ந்தும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொலை செய்து வருகின்றது என இங்கு உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டினார்.

இந்தக் கொலைகளுக்கு ஐ.நா.வின் சிறிலங்காவுக்கான பிரதிநிதிகளின் தகவல்களும் வன்னியில் தற்போதுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் தகவல்களும் சாட்சியாக உள்ளது என சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இந்தியா உட்பட்ட அனைத்துலக சமூகம் வெறுமனே கவலையை வெளியிட்டுக்கொண்டிருக்காமல் போரை நிறுத்த முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்னியில் உருவாகக் கூடிய மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகத்துக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவே எனத் தெரிவித்திருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் மேலும் பாரிய இரத்தக்களரியைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

Comments