தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்படும் வரை புலிகளின் போராட்டம் ஓயப்போவதில்லை: பினான்சியல் ரைம்ஸ் இதழ்

பழிக்குப்பழி வாங்கும் வகையில் புலிகள் மீண்டும் ஒன்றிணைவார்கள் எனவும், அது அரசாங்கத்தின் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயலுக்கு சமமாக இருக்குமெனவும் பினான்சியல் ரைம்ஸ் இதழ் தனது தலையங்கத்தில் எச்சரித்துள்ளது.

சிங்களப் பெரும்பான்மையானது பெருந்தன்மையைக் காட்டி தமிழ் மக்கள் தமது வாழ்வை தாமே நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்காத வரை எரியும் தணல் போன்ற இந்த யுத்தம் அத்தகைய நிலையைத் தோற்றுவிக்க காரணமாக அமையும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள பினான்சியல் ரைம்ஸின் தலையங்கத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யுத்தம் புத்திசாதுரியமிக்க புலிகளின் சம்பிரதாயமான திறமைகளையே தோற்கடித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை குரல் எழுப்பியுள்ளது. எல்லா வருடங்களிலும் எத்தகைய துயரமான சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை அது புரிந்துகொண்டுள்ளது. இலங்கையின் வடகிழக்கில் தமிழ் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரத்த ஆறு ஓடுகிறது.

உண்மைதான.இந்த நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தின் முடிவும் விளைவும் அறியப்பட முடியாதவாறு மேகங்களால் சூழப்பட்டது போன்று இருதரப்பினரின் அறிக்கைகளும் உள்ளன.

மேலும் ஐ.நா.வின் செய்மதிப்படங்கள் மற்றும் நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் மூலம் பெண்கள், அனேக சிறுவர்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் அரச விமானத்தாக்குதல்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் கொல்லப்படுவது நிச்சயமாகத் தெரிகிறது.

ஒருகாலத்தில் அதிபயங்கரமான சட்டபூர்வமற்ற இராணுவமாகத் திகழ்ந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு குறுகிய நிலப்பரப்பின் காட்டுப்பகுதியில் தள்ளப்பட்டுள்ளதுடன் குண்டுத்தாக்குதல்களால் சிதறடிக்கப்படுகிறது.அவர்களுக்கு மத்தியில் 50 ஆயிரம் பேருக்கு மேலான பொதுமக்கள் சிக்குண்டுள்ளார்கள்.

ஐ.நா.வின் அறிக்கையின் படி 6400 பொதுமக்கள் ஜனவரி இறுதிவரை கொல்லப்பட்டுள்ளார்கள். கடந்த வாரம் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்த நெருக்கடிகள் பேரழிவினை ஏற்படுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார்.

இதேவேளை கடந்த புதன்கிழமை ஐ.நா.பாதுகாப்புச் சபை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு இலங்கை இராணுவத்தையும், ஆயுதங்களை கீழே வைக்குமாறு புலிகளையும் இறுதியாக கோரியுள்ளதுடன் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு கேட்டுள்ளது.

இது வெறும் அறிக்கை. பலவீனமானதும் கூட. சட்டத்திற்கு கட்டுப்பட்டதான தீர்மானம் அதற்குப் பதிலாக மேற்கொள்ளப்பட வேண்டும். யுத்தக் குற்றச் செயல்களுக்காக வழக்குத் தொடுப்பதாக ஐ.நா.அச்சுறுத்த வேண்டும்.

புலிகள் தற்கொலைத் தாக்குதலில் கை தேர்ந்தவர்கள். அவர்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள். வெளிநாட்டில் விரிவு பெறுவார்கள். பழிவாங்கும் எண்ணமுடைய அரசாங்கத்திற்கு இணையாக பழிக்குப் பழிவாங்க அவர்கள் முற்படலாம்.

இவ்வாறு பினான்சியல் ரைம்ஸ் தனது தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

Comments