பிரிக்க முடியாதது தேசியத் தலைமையும், சுயநிர்ணய உரிமையும்

இந்த வாரம், 34 வது அகவையில் காலடி பதிக்கிறது எமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் தலைமை.


தமிழீழ விடுதலைப்புலிகளே, ஈழத் தமிழினத்தின் ஏக பிரதிநிதிகளென்று, தமது 2004 ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்திய விடயத்திற்கு தாயக மக்கள் ஜனநாயகத் தேர்தல் ஊடாக அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள்.

அதாவது விடுதலைப்புலிகளே தமது அரசியல் தலைமையென்பதை மிகத் தெளிவாகவே இவ்வுலகத்திற்கு தெரியப்படுத்திய ஈழத் தமிழினம், இற்றைவரை அந்த முடிவிலிருந்து விலகிச் செல்லாமல் உறுதியாக இருக்கின்றார்கள்.

இந்த உறுதிதான், சிங்களத்தையும், சில வல்லரசாளர்களையும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு செயல்வடிவம் கொடுக்க, ஆயுதப் போராட்ட வடிவத்தை கையிலெடுத்த விடுதலைப் புலிகளின் ஏக தலைமையையும், மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆகவே முதலாளித்துவ ஜனநாயக தேர்தல் முறைமையூடாக, தமிழ் மக்கள் வழங்கிய இரண்டு அங்கீகாரங்களையும் இணைத்து. எமது தெளிவான நிலைப்பாட்டினை சர்வதேசத்தின் முன் வைக்கவேண்டும்.

இதில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்தை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்கிற விடயத்தை மிக அழுத்தமாக தெரிவிக்காவிட்டால், இந்த சர்வதேசத்தின் பிரித்தாளும் தந்திரப் பொறிக்குள் விழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்படுவோம்.

விடுதலைப்புலிகள், ஓரிரு தினங்களுக்குள், முற்றாக அழிக்கப்படுவார்களென்கிற சிங்களப் பேரினவாதத்தின் உளவியல் பரப்புரையும், அதற்கு ஒத்து ஊதும் சமாதானக் காவலர் எரிக்சொல்ஹெய்மின் கருத்துக்களும் இச்சதி நகர்வுகளை உறுதிப்படுத்துகின்றன.

விடுதலைப் புலிகளுக்கு பின்னான காலத்தில் ஏற்படும் அரசியல் வெற்றிடத்தினை எவ்வாறு நிரப்புவது என்பது குறித்து, இப்பொழுதே இவர்கள் பேச ஆரம்பித்துள்ளார்கள்.புலம்பெயர் மக்களின் எழுச்சிகரமான போராட்டங்களை சிதைப்பதற்குரிய நகர்வுகளை முன்னெடுக்கும் அதேவேளை, மாற்றுத் தலைமைக் கூட்டமொன்றை உருவாக்கும் பணியிலும் இந்திய - மேற்குலக கூட்டுக்கள் முன்னிற்கின்றன.

சிங்களம் முன்னெடுக்கும் இராணுவத் தீர்விற்கு எதிராக, விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் ஆயுதப்போராட்ட எதிர்வினையை, பிராந்திய நலன் பேணும் வல்லரசாளர்கள் விரும்பவில்லை. ஆயுதங்களைப் புலிகள் கீழே போடவேண்டுமென்று அழுத்திக் கூறும் இவர்களின் உறுதியான நிலைப்பாட்டிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

ஆகவே மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக ஒரு விடயத்தை முன்வைக்கும்பொழுது, இந்த சர்வதேசத்திற்கு பிடிக்காத விடயத்தை தவிர்ப்பது, ஆரோக்கியமான வெளிப்பாடல்ல. சர்வதேச அநுசரணையோடு உருவாக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை, மகிந்தர் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறிந்த பொழுதே, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு, மேற்குலகிற்கு பாரிய அழுத்தமொன்றை புலம்பெயர் மக்கள் கொடுத்திருக்கலாம்.

ஆனாலும் இந்தியாவின் முழு ஆதரவோடும், சீனா - பாகிஸ்தானின் ஆயுத தளபாட உதவிகளோடும், விடுதலைப் போராட்டத்தை அழிக்க சிங்களம் மேற்கொண்ட திட்டத்தை நாம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.

சுற்றிச் சுற்றி ஆறு தடவைகள், உலகமெல்லாம் சென்று சிங்களத்துடன் பேசும்போது, நோர்வே தலைமையிலான மேற்குலக கூட்டிற்கு, பிறிதொரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்க வேண்டும்.

அதாவது பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாவிட்டால், இந்தியத் துணையுடன் விடுதலைப்புலிகளை அழிக்கும் சிங்களத்திற்கு, மறைமுகமாக உதவிகள் புரிய வேண்டுமென்பதே, நோர்வே அணியினரின், பேச்சுவார்த்தைக்குப் பின்னான கால நிகழ்ச்சி நிரலாகும்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டுமென்று எரிக்சொல்ஹெய்ம் அவர்கள் தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திய போதுதான் இவர்களின் நோக்கம் அம்பலமானது.

நடைபெறும் சமாதான முயற்சிகள், எத்திசை நோக்கிப் பயணிக்கும் என்பதை, தராகி சிவராம் அவர்கள் ஏற்கனவே தனது கட்டுரையன்றில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் மேற்குலகின் இராஜதந்திர நகர்வுகள் யாவும், இந்திய பொதுத் தேர்தலில் ஏற்படப்போகும் அதிகார மாற்றங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படலாம்.

அதாவது அணுசக்தி ஒப்பந்தம் செய்த காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டால், சிறீலங்கா குறித்த மேற்குலகின் பார்வை மாற்றமடையும் வாய்ப்புண்டு.அதேவேளை சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னி மக்களுக்கான, உணவுத் தேவை பற்றி, அமெரிக்கா கரிசனை கொள்ள வேண்டுமென வன்னி மக்களின் நலன்பேணும் அமைப்பின் தலைவர் கனகலிங்கம் அவர்கள் விடுத்த நட்புறவுச் செய்தியை இங்கு கவனிக்க வேண்டும்.

வவுனியா, யாழ் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இடம்பெயர வைக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவை குறித்து கரிசனை கொள்ளும் ஐ.நா சபையும், மேற்குலகமும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலுள்ள 165,000 மக்களின் பட்டினிச் சாவு குறித்து வாய்திறக்க மறுக்கிறார்கள்.

இவர்களின் தற்போதைய பிராந்திய நிகழ்ச்சிநிரலின் முக்கிய பகுதியான புலி அழிப்புக் காட்சியினை, மகிந்தர் அரங்கேற்றி விடுவாரென கற்பனையில் ஆழ்ந்திருக்கும் இவ்வேளையில், வன்னிமக்களுக்கு உணவு வழங்கி, போராட்ட உயிர்ப்பினை தக்கவைக்கும் தவற்றைச் செய்யக் கூடாதென்பதில் சில சர்வதேச நாடுகள் உறுதியாக இருப்பது போலுள்ளது.

உணவு செல்வதைத் தடுத்து, எறிகணைகளை ஏவி, மக்களை வெளியேற்றலாமென சிங்களம் போடும் தப்புக் கணக்கிற்கு, தப்புத்தாளம் போடும் சர்வதேசத்தை புரிந்துகொள்ள வேண்டும்.போராயுதமாக உணவைப் பாவிப்பது, சர்வதேச போர்க்குற்றமென இந்த ஜனநாயக ஜாம்பவான்களுக்கு தெரியாதென்று நினைப்பது தவறு.

எல்லாம் தெரிந்தவர்கள்தான், தமிழின அழிப்பை வேடிக்கை பார்க்கிறார்களென்பதையும் உணர்தல் வேண்டும். மக்களின் மன உறுதியைச் சகித்துக்கொள்ள முடியாதவர்களே, மனிதக் கேடயமாக மக்களை பாவிக்கின்றார்களென கரித்துக்கொட்டுகிறார்கள்.

இது விடுதலைக்காக ஏங்கும் மக்களிற்கும், ஆக்கிரமிப்பாளனிற்கும் இடையே நிகழும் போராட்டம்.தமது தலைமை எதுவென்று நிர்ணயம் செய்யும், பிரிக்கமுடியாத பிறப்புரிமை, அந்த மக்களிற்கே உண்டு.பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையையும், அதனை முன்னெடுப்பதற்குரிய தலைமையை தெரிவு செய்யும் உரிமையையும் அந்த பூர்வீக தேசிய தமிழினமே தீர்மானிக்கும்.

1977, 2004 இல் தமிழினத்தால் வழங்கப்பட்ட, தமது அரசியல் கோட்பாடு மற்றும் தலைமை எதுவென்பது குறித்து வெளிப்படுத்திய ஜனநாயக அங்கீகாரத்தினை, உலகிற்கு உரத்துச் சொல்ல வேண்டிய வேளை இது. பிரிக்க முடியாதது தேசியத் தலைமையும், சுயநிர்ணய உரிமை முழக்கமும்.பிரிந்தே இருப்பது பூர்வீகத் தமிழினமும், சிங்களமும். புரியப்படவேண்டிய விவகாரமிது.

- இதயச்சந்திரன்-

நன்றி: ஈழமுரசு (09.05.2009)

www.tamilkathir.com

Comments