வன்னியின் மனிதப்பேரவலமும் சிறீலங்காவை நோக்கி திரும்பும் உலகின் கவனமும்

இந்த மாதத்தின் முதல் வாரத்தின்; இறுதி பகுதியான வெள்ளிக்கிழமை (8) 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள் இணைந்து வன்னி களமுனையில் ஒரு முன்நகர்வை மேற்கொண்டிருந்தன. கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியை கைப்பற்றுவதே அவர்களின் நோக்கம். இந்த அணிகளின் நகர்வினை இலகுவாக்கும் நோக்கத்துடன் 59 ஆவது படையணி தென்முனையில் வட்டுவாகல் ஊடாக ஒரு நகர்வினை மேற்கொண்டிருந்தது.

இந்த படையணியை அதன் புதிய கட்டளை தளபதி பிரிகேடியர் பிரசன்னா டீ சில்லா வழிநடத்தியிருந்தார். ஆனால் நந்திக்கடல் இந்துமா சமுத்திரத்துடன் இணைப்பை ஏற்படுத்தும் புள்ளியில் உள்ள 500 மீ அகலமான பகுதி தகர்க்கப்பட்டுள்ளதனால் 20 அடி ஆழமான பகுதியை கடப்பதும் சுலபமானதல்ல.

கரையோரமாக படகுகள் மூலம் பாலத்தை கடக்கவும் 59 ஆவது படையணி முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது. இந்த பகுதி அதிக பொறிவெடி, மிதிவெடிகள் உள்ள பகுதியாக விளங்குவதுடன், 122 மி.மீ ஆட்டிலெறிகளும் படையினருக்கு சவாலாக விளங்குவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து கடந்த சனிக்கிழமை (9) அதிகாலை கடற்புலிகள் கடற்படையினர் முன்னனி பாதுகாப்பு வலையத்தின் மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள் இரு தற்கொலை படகுகளை பயன்படுத்திய போதும் ஒரு படகு வெடிக்கவில்லை. மறு படகு கடற்படை படகில் மோதிவெடித்துள்ளது. ஆனால் தனது இழப்புக்கள் தொடர்பான தகவல்களை படைத்தரப்பு வெளியிட மறுத்துவிட்டது.

இந்தியவின் நாடாளுமன்ற தேர்தல், அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பான அழுத்தங்கள் அதிகரிப்பதற்கு முன்னர் முழுமையான படை வளங்களை பயன்படுத்தி சிறீலங்கா அரசு தாக்குதல்களை உக்கிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் விடுதலைப்புலிகளின் எதிர்த் தாக்குதல்கள் உக்கிரமாக இருப்பதுடன்;, பாதகமான களமுனையும் படையினருக்கு சாதகமானதாக இல்லை.

இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (9) சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேக்கா வன்னி படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு படை நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்ததுடன், பாரிய ஒரு நடவடிக்கைகான திட்டங்களையும் வகுத்திருந்தார்.

சனிக்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் சிறப்பு படையணிகளின் உச்ச பலத்தை பிரயோகித்து இருமுனை தரை நகர்வுக்கும், கடல் நகர்விற்கும் படைத்தரப்பு திட்டமிட்டிருந்தது. அதற்கேற்ப சிறப்பு படை, கொமோண்டோ படை, வான்நகர்வு படைகளை சேர்ந்த 6,000 படையினர் தயார் படுத்தப்பட்டிருந்தனர். லெப். கேணல் சஞ்சே வணசிங்கா (இவர் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஹமில்டன் வணசிங்காவின் புதல்வராவார்) தலைமையில் குறிபார்த்து சுடும் படையணி ஒன்றும் நகர்த்தப்பட்டது.

ஆனால் நள்ளிரவு விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் நடவடிக்கைக்கு தயாராக இருந்த இராணுவ அணிகள் மீது ஊடறுப்பு தாக்குதலை மேற்கொண்டிருந்தன. இதன் போது பெருமளவான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், அதிக எண்ணிக்கையானோர் படுகாயமடைந்துள்ளதாக களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன. கொழும்பில் அதிக எண்ணிக்கையில் நோயாளர் காவுவண்டிகள் ஓடியதும் அவதானிக்கப்பட்டுள்ளதுடன், இரத்மலானை பகுதியில் இருந்து நகரப்பகுதி வரையிலும் வீதீயோரம் காவல்துறையினரை அரசு கடமையில் ஈடுபடுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் படையினரின் ஒழுங்கமைப்பில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 58 ஆவது மற்றும் 53 ஆவது படையணிகள் வடமுனையில் இருந்தும் 59 ஆவது மற்றும் 55 ஆவது படையணிகள் தென்முனையில் இருந்தும் நகர்வை மேற்கொள்ளும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.

செவ்வாய்கிழமை (12) வட்டுவாகல் பகுதியை 59 ஆவது மற்றும் 55 ஆவது படையணிகள் இணைந்து கைப்பற்றியுள்ளதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் படையினரின் தகவல்களுக்கும் அந்த பகுதியின் பூகேள அமைப்புக்கும் இடையில் பலத்த வேறுபாடு உண்டு.

எனினும் செவ்வாய்கிழமை (12) இரவு 9.30 மணியளவில் விடுதலைப்புலிகள் முல்லைத்தீவின் கரையோரமாக தரையிங்கி பாரிய ஒரு தாக்குதலை நடத்தியுள்ளனர். கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த படையினரின் நிலைகள் மீது அதிஉயர் வேகம் கொண்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்ட தற்கொலை படகுகள் மூலம் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

அதிக வேகம் கொண்ட படகுகள் கடலின் நீர்ப்பகுதியை கடந்து தரைப்பகுதியில் நீண்டதூரம் சென்று பாதுகாப்பு அரண்களில் மோதி வெடித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 250 இற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவ முயன்றதாகவும் படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். புதன்கிழமை அதிகாலை வரையிலும் தொடர்ந்த மோதல்களில் பல படையினர் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் போரின் பெரும்பகுதியை முடித்துவிட அரசு முயன்று வருகின்றது. ஏனெனில் இந்திய தேர்தல் முடிவுகள் சில சமயங்களில் சிறீலங்கா அரசிற்கு பாதகமாக அமையலாம் என அரசு அஞ்சுகின்றது.

இதனிடையே சிறீலங்கா அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலையத்தின் மீது கடந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செறிவான பீரங்கி தாக்குதல்களில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

சனிக்கிழமை (9) நள்ளிரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (10) மதியம் வரை பல ஆயிரம் எறிகணைகள் பொதுமக்களின் தற்காலிக குடியிருப்புக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன. இதனால் 2000 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், பல ஆயிரம் மக்கள் படுகாயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்திருந்தன. எனினும் 1200 இற்கு மேற்பட்ட உடலங்கள் கணக்கிடப்பட்டதாக வன்னி தகவல்கள் தெரிவித்திருந்தன.

378 சடலங்களும், காயமடைந்த 1,100 பேரும் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருந்ததாக அனைத்துலக செய்தி நிறுவனங்களும் தெரிவித்திருந்தன.

பாதுகாப்பு வலையத்தின் மீது மேற்கொண்ட எறிகணை தாக்குதலினால் அங்கு கடந்த வாரத்தின் இறுதிப்பகுதியில் இரத்தக்களரி ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்களும், சிறுவர்களும் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டது கண்டனத்திற்குரியது எனவும் ஐ.நாவின் கொழும்பு அலுவலக பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலையத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்களின் தகவல்களின் படி அங்கு 100 சிறுவர்கள் உட்பட 380 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் எதிர்வரும் நாட்களில் அங்கு மிகப்பெரும் இரத்த ஆறு ஓடும் என நாம் எச்சரித்திருந்தோம் ஆனால் தற்போது அதனை நேரில் பார்க்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தாக்குதல்களில் இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுமாறு உலகின் முன்னனி மனித உரிமை அமைப்புக்களான மனித உரிமை கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை, அனைத்துலக அனர்த்த குழு (வுhந ஐவெநசயெவழையெட ஊசளைளை புசழரி), பாதுகாப்புக்கு பொறுப்பான உலக மையம் (வுhந புடழடியட ஊநவெசந கழச வாந சுநளிழளெiடிடைவைல வழ Pசழவநஉவ) என்பன யப்பான் நாட்டு பிரதமர் ரறா அசோவிடம் (Pசiஅந ஆinளைவநச வுயசழ யுளழ) கடந்த வாரம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தன.

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் யப்பான் உறுப்புரிமை கொண்டிருப்பதனால் சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மனித பேரவலவத்தை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு அந்த விவகாரம் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் உத்தியோகபூர்வமாக விவாதிப்பதை யப்பான் ஆதரிக்க வேண்டும் என அவை கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த அழுத்தங்களை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை (11) பாதுகாப்பு சபை கூட்டம் உத்தியோகபூர்வமற்ற முறையில் நடைபெற்றிருந்தது. எனினும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் அங்கு எட்டப்படவில்லை.

ஆனால் சிறீலங்கா தொடர்பான விவாதம் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் உத்தியோகபூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை தொடர்ந்து வலுயுறுத்தி வந்ததை தொடர்ந்து சிறீலங்கா தொடர்பான விவாதம் கடந்த புதன்கிழமை (13) ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் மூடிய அறைக்குள் முதல் தடவையாக உத்தியோக பூர்வமாக கூட்டப்பட்டதுடன், அதன் முடிவில் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா அரசினால் பாதுகாப்பு பிரதேசம் என பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேசத்தின் மீது கனரக ஆயுதங்களின் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது, அங்கு பெருமளவான மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் சிறீலங்கா விவகாரத்தில் ஒரு காத்திரமான பங்களிப்பை வழங்குவதற்கான ஆதரவுகளும் வழங்கப்பட்டிருந்தன.

சிறீலங்கா தொடர்பான விவாதங்கள் உத்தியோகபூர்வமாக விவாதிக்கப்படுவதை சீனா, ரஷ்யா, வியட்னாம், லிபியா போன்ற நாடுகள் எதிர்த்து வந்தன. எனவே சிம்பாபே மீதான விவாதத்தின் போது கடைப்பிடித்தது போன்று வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது தொடர்பாக ஆலோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த செவ்வாய்கிழமை (12) முன்வைத்திருந்தது.

15 அங்கத்துவ நாடுகளை கொண்ட பாதுகாப்பு சபையில் 9 நாடுகளின் ஆதரவுகள் வாக்கெடுப்பில் வெற்றீட்டுவதற்கு தேவை. உகண்டா விவாதத்திற்கு ஆதரவு தருவதற்கு சம்மதித்த நிலையில் சீனாவும் தனது முடிவில் இருந்து புதன்கிழமை (13) பின்வாங்கியிருந்ததாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

கடந்த 9 மற்றும் 10 ஆம் நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வன்னியில் இறுதியாக இயங்கிவந்த மருத்துவமனையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினால் பெருமளவான அப்பாவி மக்களும் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தகவல்களுக்கு அனைத்துலக ஊடகங்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஐ.நா மீது பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்தது. இதுவே ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் உள்ள 15 நாடுகளையும் ஒரு அணிக்கு கொண்டு வந்ததற்கான காரணி என இரஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதும் ஐ.நா ஒரு ஊடகத்துறை அறிக்கையையே வெளியிட்டுள்ளதாகவும், அதனை எதிர்ப்பதில் இருந்து சீனா பின்வாங்கியுள்ளதாகவும் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமை உள்ள ஐந்து நாடுகளில் ஒன்றின் பிரதிநிதி தெரிவித்திருந்தார். சிறீலங்கா தொடர்பான விவாதங்கள் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்படுவதை எதிர்த்த ஏனைய நாடுகளும் அதில் இருந்து பின்வாங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் இந்த நகர்வுகளுக்கு இடையில் சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மனிதப்பேரவலம் தொடர்பாக அமெரிக்காவின் அரச தலைவர் பாராக் ஒபாமா முதல் தடவையாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவரின் கருத்தின் அழுத்தங்கள் அதிகம்.

போரை நிறுத்தி பொதுமக்களின் பேரவலங்களை முடிவுக்கு கொண்டுவருமாறு அவர் சிறீலங்கா அரசினை கோரியுள்ளார். இந்த மனிதப்பேரவலங்களை தடுப்பதற்கு தவறும் பட்சத்தில் அது ஒரு பேரழிவுக்கு வழிவகுக்கும் எனவும், போர் நடைபெறும் பகுதிக்கு மனிதாபிமான உதவிகளும், பணியாளர்களும் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் வழமை போல அமெரிக்காவும் சரி ஐக்கிய நாடுகள் சபையும் சரி விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற கோசத்தையும் முன்வைத்துள்ளன. ஆனால் அமெரிக்கா அரசு தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்களின் தனிநாட்டு கோரிக்கைக்குமான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமா என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை அமெரிக்கா புறம்தள்ளுவது இலகுவானதல்ல.

சிறீலங்கா மீதான அனைத்துலகத்தின் அழுத்தங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவின் சீற்றம் அனைத்துலக நாணயநிதியத்தின் உதவிகளையும் தடுத்துவிடும் என்பதை யாரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும். எனவே தான் அதற்கு மாற்றீடாக ஆசிய நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள சிறீலங்கா முனைப்புக்காட்டி வருகின்றது.

இருந்த போதும் களமுனை மோதல்களின் உக்கிரம், அனைத்துலகத்தின் அழுத்தம் என்பன தொடர்பான அச்சங்கள் அரசுக்கு உண்டு. எனவே எதிர்வரும் வாரம் பல முக்கிய திருப்பங்களை உடையாதாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

- வேல்ஸ் இல் இருந்து அருஷ்

Comments