மருத்துவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதையிட்டு ஐ.நா.வின் மெளனம்: 'இன்னர் சிட்டி பிறஸ்' கடும் கண்டனம்

வடபகுதியில் கடும் போர் இடம்பெற்ற வேளையிலும் இறுதிவரையில் அங்கிருந்து பணியாற்றிய மருத்துவர்கள் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு எந்தவிதமான வெளித்தொடர்புகளும் இல்லாத வகையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும் அதனையிட்டு ஐ.நா. மௌனமாக இருப்பதையிட்டு 'இன்னர் சிட்டி பிறஸ்' கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் கடந்த பல மாதகாலமாக இரவு பகலாக படுகாயமடைந்த நோயாளர்களைப் பாதுகாப்பதற்காக கடுமையாக உழைத்த இந்த மருத்துவர்கள், அங்கிருந்து வெளியேறி வவுனியா வந்தபோது ஓமந்தையில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மருத்துவர்களான வரதராஜா, சண்முகராஜா, த.சத்தியமூர்த்தி உட்பட ஆறு மருத்துவர்கள் இவ்வாறு படையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தனிமையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் இவர்களைப் பார்வையிடுவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுவினருக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக 'இன்னர் சிட்டி பிறஸ்' இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

வன்னிப் பகுதியில் படையினரால் மேற்கொள்ளப்படும் எறிகணைத் தாக்குதல்களின்போது கொல்லப்படும், காயமடையும் மக்கள் பற்றிய தகவல்களை இவர்கள்தான் வெளிஉலகத்துக்குத் தெரியப்படுத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிறிலங்கா அரசாங்கம் இவர்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்தியிருந்ததுடன், இவ்வாறான தகவல்களை தொடர்ந்தும் வழங்கினால் அதற்குரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்திருந்தது.

இது தொடர்பாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோம்சிடம் தெரியப்படுத்திய 'இன்னர் சிட்டி பிறஸ்' இது தொடர்பாக அவருக்கு தகவல் தெரியுமா எனவும் கடந்த வாரம் கேட்டிருந்தது. இருந்த போதிலும் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருந்தார்.

நேரம் வரும்போது சிறிலங்காவில் மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உத்தரவாதத்தை தான் வழங்குவதாக ஐ.நா. தெரிவித்திருந்தது எனச் சுட்டிக்காட்டும் 'இன்னர் சிட்டி பிறஸ்', இருந்தபோதிலும் - தற்போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் நிலையில் கூட, இந்த மருத்துவர்களின் விடயத்தில் எதுவுமே செய்யப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.விடம் கேள்வி எழுப்பப்பட்டபோதிலும் அதற்கான பதில் இல்லை எனவும் இதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Comments