பட்டினிச்சாவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்கா, பிரித்தானியாவிடம் வைகோ வேண்டுகோள்

பட்டினிச்சாவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறு அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளிடம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இது தொடர்பாக அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலறி கிளின்ரன், பிரித்தானிய பிரதமர் கோடன் பிறவுண், அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் மிலிபான்ட் ஆகியோருக்கு வைகோ இன்று ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றார்.

அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அன்புடையீர்,
வணக்கம்.

இலங்கைத் தீவில் நடைபெற்று வருகின்ற இனப்படுகொலை குறித்து தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விழைகின்றேன். அங்கே 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி உள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உணவு இன்றி மடிந்து வருகின்றனர்.

மகிந்தா ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்குத் திட்டமிட்டு இத்தகைய பட்டினிச் சாவுகளை ஏற்படுத்தி உள்ளது.

இராணுவத்தின் பிடியில் சிக்கி உள்ள தமிழர்களுக்கு உணவு அளிப்பது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி உலக நாடுகளை மிகத் திறமையாக ஏமாற்றி வருகின்றது.

பட்டினியால் சாகின்ற தமிழர்களுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்பி உதவுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

உணவுப் பொருள்களை சிறிலங்கா அரசின் தலையீடு இன்றி செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக நேரடியாக தமிழர்களுக்குக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்திடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

பட்டினியால் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை உடனடியாக பாதுகாத்திடுமாறு வேதனையுடன் வேண்டுகிறேன்.

தங்கள் அன்புள்ள
வைகோ
பொதுச் செயலாளர்
(மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

Comments