உணவு விநியோகத்தையும் சிகிச்சை வசதிகளையும் இடைநிறுத்துவதாக ஐ.சி.ஆர்.சி. அறிவிப்பு: மனிதப் பேரவலத்திற்குள் வன்னி மக்கள்

சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் வன்னியில் உள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தையும் படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வெளியேற்றும் மனிதாபிமான நடவடிக்கையையும் இடைநிறுத்திறுத்தியிருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த முடிவையடுத்து வன்னியில் சிக்குண்டுள்ள மக்கள் மேலும் பாரிய மனிதப் பேரவலத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

வன்னியில் உள்ள மக்களுக்கு உரிய உணவுப் பொருட்களுடன் கடந்த புதன்கிழமை சென்ற அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க கப்பல் அங்கு படையினரின் தாக்குதல்கள் கடுமையானதாக இருந்ததால் முள்ளிவாய்க்கால் பகுதியில் பொருட்களை இறக்க முடியாத சூழ்நிலை நிலவியது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கப்பல் அனைத்துலக கடற்பரப்பில் தரித்து நின்றது.

இந்த இரண்டு நாட்களும் மூன்று தடவைகள் பொருட்களை தரையிறக்குவதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர் முயற்சித்தபோதும் சிறிலங்கா படையினரின் இடைவிடாத தாக்குதல்களால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இது குறித்து படைத்தலைமையுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தொடர்புகொண்டபோதும் பொருட்களை இறக்குவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க படையினர் தவறியதையடுத்து, மேற்படி கப்பல் மீண்டும் நேற்று வியாழக்கிழமை இரவு திருகோணமலைக்கு பொருட்களை இறக்காமலேயே திரும்பியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்தே வன்னியில் உள்ள மக்களுக்கான உணவு விநியோகத்தையும், படுகாயமடைந்த மக்களை சிகிச்சைகளுக்காக வெளியேற்றும் நடவடிக்கையையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தற்காலிமாக இடைநிறுத்தும் முடிவை எடுத்திருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் போர்ப் பிரதேசத்தில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக வெளியேற்றப்பட வேண்டிய நூற்றுக்கணக்கானோர் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.

எனினும் அவர்களை வெளியேற்றுவதற்கு அங்கு இடம்பெற்று வரும் தாக்குதல்கள் தடையாக இருக்கின்றன.

மோதல் இடம்பெற்று வரும் பகுதிகளில் கரையோரமாகவுள்ள சிறிய பகுதிக்குள் ஆயிரக்கணக்கான மக்கள் பதுங்குகுழிகளுக்குள் சிக்குண்டுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த முடிவையடுத்து மக்கள் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள மக்கள் பசிக் கொடுமையாலும் சிகிச்சைகள் இன்றியும் உயிர்மடியும் மனிதப் பேரவலம் நிகழவிருப்பதாக அஞ்சப்படுகிறது.

மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களுக்கு உரிய உணவுப் பொருட்களை இறுதியாக கடந்த 9 ஆம் நாள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் மூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments