சிறிலங்காவின் கபடத்தனத்தை எதிர்கொள்ளும் அரசியல் கட்டமைப்பை வென்றெடுக்கும் பாரிய தேசியக்கடமை நம்முன் உள்ளது

தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் முனைந்திருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் கபடத்தனத்தை எதிர்கொள்வதற்கும் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்குமான பாரிய தேசியக் கடமை நம்முன் காத்திருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை செல்வராஜா பத்மநாதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சிறிலங்கா அரசாங்கமும் அதன் சிங்கள இராணுவ இயந்திரமும் தமிழீழ மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள மனிதப் பேரவலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நிர்க்கதியாக்கி இடம்பெயர்த்து அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27.05.09) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு வன்னியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நியாயம் வழக்கத் தவறியமை குறித்து எமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.

இராணுவ மேலாதிக்க நிலையின் ஊடாக தாயகத்து மக்களின் வாழ்வு உரிமையினைப் பறித்த சிறிலங்கா அரசாங்கம் தற்போது இராஜதந்திர வழிமுறைகளைக் கொண்டு உலக அரங்கில் நமது மக்கள்மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது.

தனக்கு துணையாக அனைத்துலக சக்திகளுடன் இணைந்து இராஜதந்திர செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்த்து எறிவதில் முனைப்பு கொண்டுள்ளது.

அதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும் எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களையும் உதவிகளையும் திரட்டுவதில் சிறிலங்கா கொள்கையளவில் வெற்றி பெற்றுள்ளது.

அந்த வளங்களைக்கொண்டு புனர்வாழ்வு, புனரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் நலனில் சிங்கள அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக காட்டி தான் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு பழியில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வழி தேடுகின்றது.

தனது இராணுவ ஆளணியினரால் கட்டுப்படுத்தப்படும் பொது நிர்வாக இயந்திரத்தின் கீழ் மீள்கட்டமைப்பும் அபிவிருத்தியும் என்ற பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தின் இனத்துவ சமநிலையினை சிங்கள மக்களின் பெரும்பான்மைக்கு சார்பாக மாற்ற முனைவதோடு தமிழ் மக்களின் சமூக பொருளாதாரக் கட்டமைப்பினை தற்சார்பு நிலையற்றதும் சிறிலங்காவின் தென்பகுதியினால் கட்டுப்படுத்தக்கூடியதுமான தங்கி வாழும் பொருளாதாரமாக மாற்றுவதற்குரிய திட்டங்களையும் முன்நகர்த்தியுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல், சமூக பொருளாதார இருப்பினையும் தற்சார்பு நிலையினையும் நிர்மூலமாக்குவதில் சிங்கள அரசாங்கம் குறியாகவுள்ளது.

இத்தகைய சவால்களை எதிர்கொண்டு தாயகத்தில் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் கட்டமைப்பினை வென்றெடுப்பதற்கும் தடுப்பு முகாம்களிலும் சிறைகளுக்குள்ளும் சித்திரவதைக் கூடங்களிலும் நிரப்பப்பட்டுள்ள எம்மவர்களை விடுவித்து செழுமையும் சமாதானமும் நிறைந்ததாக அவர்கள் வாழ்வினை கட்டியெழுப்புவதற்கும் செயற்படவேண்டியது நமது தேசியப்பணியாகும்.

கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற்கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட உறுதி பூண்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் ஒற்றுமையினையும் அவர்களின் அளப்பரிய ஆற்றல்களையும் அவர்களால் புலம்பெயர் தேசங்களில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நன்மதிப்பினையுமே தங்கள் ஆயுதங்களாக கையில் எடுத்துள்ளனர்.

இன்று நம் முன்னே பாரிய தேசியக் கடமை காத்துக் கிடக்கின்றது. நாம் மிகவும் உறுதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் செயற்படவேண்டியது மிகவும் அவசியமான தருணம் இது.

இக்கடமையினை முழுமையான பலத்துடனும் சிறப்புடனும் நிறைவேற்றுவதற்கு அவதூற்று பிரச்சாரங்களும் வதந்திகளும் தவறான செய்திகளும் இடையூறானவை.

இவற்றைப் புறம் தள்ளி நமது தாயகத்திற்கும் மக்களுக்குமான நமது கடமைகளை ஆற்றுவதற்கு நாம் அனைவரும் உறுதி கொள்வோம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments