புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றிணைந்து....

இந்த பேரனர்த்தமானது, இந்திய மத்திய அரசால் திட்டமிடப்பட்டும்,
மு.கருணாநிதியால் ஊக்குவிக்கப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டும்,
வெள்ளை மாளிகையின் நிர்வாகத்தால் தான் சொன்னதை சரியான தருணத்தில் நடைமுறைப்படுத்தத் தவறிய தவறினாலுமே நிகழ்த்தி முடிக்கப்பட்டது என்பதே தமிழர்களின் கருத்தாகும்.

கொழும்பும், இந்திய அரசும் சேர்ந்து நிகழ்த்திய இந்த பேரவலத்தை அவசரமாக மூடிமறைக்க முற்பட்டு, மணிக்கூட்டின் கம்பிகளை பின்னோக்கி நகர்த்தித் தங்கள் பேச்சுக்களை பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை ஒரு தீர்வாக அமுல்ப்படுத்துவது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். தனது தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்திலும் கூட கொங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திலிருந்து ஒரு இஞ்சி கூடத் தாண்டவில்லை.

ஒரு பத்தாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு இந்தியா இந்த அரைவேக்காட்டுத் தீர்வை கொண்டு வந்தது. மேலும் இருபது ஆண்டுகால ஈழத்தமிழர்களின் இரத்தக் குளியலுக்குப் பின்னர் தான் இந்தியா தான் கொண்டு வந்த அந்தத் தீர்வை நடைமுறைப் படுத்துவது பற்றி பேசத்தொடங்கியுள்ளது. இது தமிழர்கள் தங்கள் போராட்டத்திற்குத் தந்த உயிர் விலைகளைக் கேலிக்குள்ளாக்குவதாக உள்ளது.

இந்திய உள்துறை அமைச்சர் பா. சிதம்பரம் தனது அறிக்கையில் ஈழத்தமிழ் அகதிகளை சிறீலங்காவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டுமென கூறியிருப்பது ஏற்கனவே முகாம்களில் சிறைவைக்கப்பட்ட மக்களோடும், திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் உள்ள மக்களோடும் இவர்களை சேர்ப்பதற்கே வழிவகுக்கும். ஈழத்தமிழர்களின் உயிர் அழிவுகளையும், வலிகளையும் கேவலப்படுத்துவதாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளது.

இதே வேளை வேறுபட்ட அரசியல் வடிவமைக்கப்பட்ட நிழல் தீர்மானங்களைப் பலதரப்பட்ட மட்டங்களில் இருந்து வழங்கி ஈழத்தமிழர்களின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் மறுதலித்து, இந்த தலைமுறையில் தற்போதைய உலகமானது ஒரு புதிய தேசத்தின் பிரசவத்திற்கு தங்கள் மறுப்பை வழங்கியுள்ளன.இந்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் தனது தலைவியின் பிரச்சாரத்திலிருந்து சிறிது வேறுபட்டு, தனது பிரச்சாரத்தில் ஒரு சமக்ஷ்டித்தீர்வை வழங்குவதாகப் பிரச்சாரம் செய்தார்.

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரான எரிக்சொல்ஹெய் சிறிய அளவு அதிகாரம் கொண்ட ஒரு கூட்டாட்சிமுறையைப் பரிந்துரைத்திருந்தார். தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சிகள் தமிழீழம் மட்டுமே தீர்வு எனக் கூறினர். ஆனால் இதை அவர்கள் தமது நிகழ்ச்சி நிரலில் நடைமுறைப்படுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். இப்போது இந்தியாவில் உள்ள சில நலன்விரும்பிகள் ஒரு கூட்டாட்சிமுறையை பிரஸ்தாபிக்கின்றன.

இந்த நல்லெண்ண முயற்சிகளுக்கெல்லாம் நன்றி சொல்லும் வேளையில், கொழும்பிலுள்ள அடைக்கப்பட்ட இரும்புக் கோட்டைக்குள் இந்த முடிவுகளைப் பிரேரிக்கும் திறமை யாருக்குள்ளதென்பது கேள்விக்குறியாகவேயுள்ளது.இன்று ஈழத்தமிழர்கள் உண்மையில் முகம்கொடுப்பது கொழும்பில் பன்முகம் கொண்ட இனப்படுகொலைக்கே. தமிழர்கள் மக்கள்தொகை ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் இனப்படுகொலையில் அழிக்கப்படும்வரை எந்தத் தீர்வுமே வைக்கப்படமாட்டாதென கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்பு ‘தீர்வு' என்ற பெயரில் ஏமாற்றி வழங்கப்படப்போகும் தீர்வானது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கும். ஆனால் எந்தப் பயன்களுமே அற்ற இந்தத் தீர்வுகளை ஏற்றுக்கொள்ளவேண்டிய எந்தக் கடப்பாடும் தமிழர்களுக்கோ அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுக்கோ இல்லை. ஆனால் உலகத்திற்கு தாங்கள் காட்டும் எதிர்ப்பு அவர்களால் கூறப்படும் ‘பயங்கரவாதத்திற்கு' எதிரானதா? அல்லது "தமிழ்த்தேசியத்திற்கே எதிரானதா"? என்பதை விளக்கவேண்டிய கட்டாயம் உள்ளது.

சர்வதேச சமூகம் இன்றைய ஆபத்தான நிச்சயமற்ற தன்மையை தன் பொய்களால் உருவாக்கிவிட்டிருப்பதன் மூலம் தமிழர்கள் என்றுமே காணாத அளவிற்கு மீண்டும் ஒரு ஆயுதப்போரை பாரிய அளவில் மேற்கொள்ளவேண்டிய தேவையைத் தமிழர்கள் மீது திணிக்கப்போகிறார்களா, இல்லையா என்பதையும் தீர்மானிக்கவேண்டும். சிறீலங்காவின் இன்றைய போரில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை வெளிப்படுத்துவதன் மூலமும், வெறும் வார்த்தைகள் பேசாது செயற்பாட்டில் இறங்கி ஒரு அர்த்தமுள்ள நீண்ட அரசியல் தீர்வுகளை வழங்குவதும் சர்வதேசத்தின் கடமையாகும்.

சிறீலங்காவின் யாப்புக்களை மாற்றியமைக்காமலும், அதன் ‘சிங்களம் மட்டும்' இறையாண்மையை மாற்றாமலும், எந்தவொரு அரசியல் தீர்வும் எட்டப்படமாட்டாது என்பது எல்லோருக்கும் தெரியும். சிறீலங்காவின் இறையாண்மையைக் கருத்தில்கொள்ளாது, சர்வதேசம் தமிழர்களின் பூர்வீக மாகாணங்களை அளித்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பூர்த்திசெய்யும் தமிழீழத் தேசியத்தை நிலைநிறுத்தச் செய்வதன்றி, ‘வெற்றிப் போதையில்' மிதக்கும் சிறீலங்காவிற்கு வெற்றறிக்கைகளையும், இராஜதந்திரக் குழுக்களை அனுப்புவதன் மூலமும் எதையும் சாதிக்க முடியாது என்பதை தமிழர்கள் உணர்ந்துள்ளனர்.

இந்த நம்பிக்கைத் துரோகத்தையும், இலகுவில் ஏமாற்றக்கூடிய சர்வதேச நகர்வுகளையும் புறம்தள்ளிவிட்டு, ஈழத்தமிழர் இனமானது காலத்தை வீணடிக்காது உடனடிச் செயலில் இறங்கவேண்டிய வரலாற்றுக் கடமையைத் தன் தோள்மீது கொண்டுள்ளது.எமது முதன்மைப் பணியானது, எமது அரசியல் போராட்டத்தின் திறனை மீள் கட்டமைத்து, எங்களது கோபங்களையும், விரக்திகளையும், நிறைவேற்றப்படாத கோரிக்கைகளையும் எமக்குச் சாதகமாக மாற்றி இந்த உலகத்தை வெற்றிகொள்ளும் வகையான ஒரு அரசியல் வெளிப்பாட்டை ஏற்படுத்தி, எமது விடுதலையைச் சாத்தியமாக்க வேண்டும்.

சீனர்களையும், யூதர்களையும், அரேபியர்களையும் போன்று ஈழத்தமிழர்களும் அழிவுக்குள்ளாகும் மனித இனங்களின் வரிசைக்குள் உட்தள்ளப்பட்டுள்ளது. உலகம் அவர்களைக் காக்கவுமில்லை, அவர்களாகத் தங்களைக் காப்பாற்றவும் விடவில்லை. தமிழர்களின் நியாயபூர்வமான போராட்டத்தை எதிர்த்தும், அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாமலும் இவ் உலகம் இருக்கும்போது நாம் அவர்கள் பார்வையை எம் பக்கம் திருப்பவேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இதன் மூலம் எமது தேசிய அடையாளத்தை நோக்கி இந்த உலகத்தின் பார்வை திருப்பப்படக்கூடும். தமிழ்த்தேசியத்தின் எதிர்ப்பானது எல்லைகள் தாண்டிய பல்தேசியமாக இருந்தாலும் தமிழர்கள் பல நாடுகளில் ஆதரவுகொண்ட ஒரு அரசை அமைப்பதன்மூலம் இந்த உலகோடு பேசும் தகுதியை உண்டாக்குவதுடன், எமது தேவைகளையும், உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். ஜனநாயக முறைப்படி நாம் தெரிவுசெய்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வலியுறுத்துவதன் மூலமும், அதை மீள்நிறுத்துவதன் மூலமும், பல நாடுகளிலிருந்து பிரதிநிதிகளைத் தெரிவதன் மூலமும் பல்தேசிய அரசியல் அமைப்பையும், அரசையும் உருவாக்க முடியும்.

ஈழத் தமிழர்கள் சிறீலங்காவிற்கு உரியவர்கள் என்ற அடையாளத்தை இந்த ஜனநாயக முறைப்படி மறுப்பது முக்கியபடியாகும். புதிய ஆக்கபூர்வமான அரசியல் மாதிரிகளை தமிழீழத் தேசிய வரையறைக்குள் உருவாக்க வேண்டும். எந்தவிதமான சுதந்திரமுமின்றி முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களாலும், திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் சிக்குண்ட மக்களாலும், கால்நூற்றாண்டிற்கு மேலாக இந்திய முகாம்களில் வாடும் மக்களாலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது சாத்தியமற்றது.

ஆனால் இந்த வரலாற்றுக் கடமையைச் சுதந்திரமாகச் செய்யக்கூடிய நிலையில் புலம்பெயர் தமிழர்கள் உள்ளோம். நோர்வேயில் ஜனநாயகத் தேர்தல் மூலம் புலம்பெயர் தமிழர்கள் ஒரு முன்மாதிரியை வைத்துள்ளார்கள். இந்தப் பரிசோதனை முயற்சி பற்றி ஒரு வெளியீடும் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இந்த இணைப்புப் புள்ளியில் இந்த நாகரீக உலகம் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளையும், ஜனநாயகக் குரல்களையும் முன்மாதிரியான செயற்பாடுகளையும் கேட்டு உணரக் கடமைப்பட்டுள்ளது.

www.tamilkathir.com

Comments