வடக்கு மக்கள் வாழ்வில் வசந்தம் வீசுமா?

வாழ்விழந்து நிர்க்கதியõகிப்போயுள்ள வன்னி மக்களின், அடிப்படை மனித உரிமைகள் மீண்டும் நிலை நிறுத்தப்படாமல், நிவாரண பூச்சுக்களாலோ அல்லது வார்த்தை ஜால ஆற்றுப்படுத்துகைகளாலோ வசந்தங்களைத் திணிக்க முடியாது.

முகாமிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை இனங்காண, விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புதைந்துள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்ற கால அவகாசம் தேவையெனக் கூறும்

அரசாங்கம், புத்தர் சிலைகளையும், உள்ளூராட்சி சபைத் தேர்தல்களையும் இம்மண்ணில் நிறுவிட நடத்த முயற்சிப்பதன் காரணம் புரியப்படுகிறது.

ஆனாலும், வன்னி மக்களை, மனிதக் கேடயங்களாக விடுதலைப் புலிகள் வைத்திருந்தார்களென்று, யுத்தத்திற்கு வியாக்கியானம் வழங்கிய மேற்குலத்தார், வவுனியா முகாம்களில் இன்றுவரை அடைக்கப்பட்டு துன்பப்படும் மக்கள் பற்றி கூற முடியாமல் தவிக்கின்றனர்.

உணவுக்காகவும் மருந்துக்காகவும் கையேந்தி, உலகை நோக்கி அபயக் குரல் கொடுத்த அதே மக்கள், யுத்தம் முடிவடைந்த பின்னரும், தமது மாறாத நிலை மாற, கோரிக்கை விடுத்த வண்ணமுள்ளனர்.

இந்தச் சர்வதேசம் போதிக்கும் நீதி நியாயங்களில், அரசியல் நலன்களின் முக்கியத்துவம் துருத்திக் கொண்டு நிற்பதனை இம்மக்கள் புரிந்து கொண்டாலும், எதையுமே செய்யமுடியாததொரு கையறு நிலையில் அவர்கள் முடக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளால் கையகப் படுத்தப்பட்ட நிலங்களும், கட்டடங்களும் சுவீகரிக்கப்படுமென்ற பிரகடனம் செய்த ஆட்சியாளர்கள், இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளவும் குடியேற்றி வாழ்வளிப்பார்களென்ற கற்பிதம் கொள்ள முடியாது.

http://epaper.virakesari.lk/Web/Photographs/2009/06/28/025/28_06_2009_025_002_025.jpg

அரசின் கஜானாக்கள் வெறுமையடையும் போது, மக்களின் மீள்குடியேற்றம், நிர்மாணம் என்கிற போர்வையில், வெளிநாட்டு நிதியுதவிகளை உள்ளே வரவழைக்கும் நகர்வுகள் மேற்கொள்ளப்படும். நிதி கொடுப்பவர்கள், புதிய நிபந்தனை களை விதிப்பார்கள், நிதி உதவி என்பது, வருங்கால நிகழ்ச்சி நிரல்களிற்கான முதலீடு என்பதனை நாணய மதிப்பிறக்க நிபந்தனைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

"சும்மா' நிதி வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியமென்பது ஒரு தர்ம ஸ்தாபனமல்ல. அதை இயக்கும் முதன்மைப் பங்காளிகளான மேற்குலகத்தாருக்கு, இலங்கை குறித்த எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் உண்டு.

அதன் அடிப்படையில், மனிதாபிமானம், இடர் நீக்கும் நிவாரணம் அரசியல் தீர்வு போன்ற உலகளாவிய தர்ம போதனைகளை முன்வைத்து, தமது பிராந்திய நலனை நிலைநிறுத்த, பல நிபந்தனைகளை திணிக்க முற்படுவார்கள்.

இந்த நிபந்தனைகளை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம், எமது நிகழ்ச்சி நிரலின் படியே நாம் பயணிப்போமென்று அரசாங்கம் உறுதியாக நின்றால், அந்த இறுக்கத்தை புரிந்து கொண்டு தாமாகவே முன்வந்து இந்தியா உதவிபுரியும்.
அதற்கான வசந்த அழைப்பு வடக்கிலிருந்து (இந்தியா) வந்துள்ளது. அதாவது சீனாவுக்கும் இந்தியாவுக்கு மிடையே நடைபெறும் பனிப்போரில் இலங்கை அரசுக்கு கொண்டாட்டந்தான்.

யுத்தக் குற்றங்களிலிருந்து, இனப்படுகொலைகளிலிருந்து, நிதி நெருக்கடிகளிலிருந்து அரசைக் காப்பாற்ற, இந்திய சீன ஒட்டாத கூட்டுகளின் ஆதரவு இருக்கும்வரை மேற்குலகின் வெறுட்டல்களை உதாசீனம் செய்ய இலங்கை தயங்காது.

அரச இயந்திரத்தை மறுபடியும் தூக்கி நிமிர் த்தி இயக்க, வெறும் நான்கு பில்லியன் டொலர்களே போதும், மேற்குலகு, சீனாவைப் பொறுத்தவரை இதுவொரு சுண்டைக்காய் சமாச்சாரம்.

ஆனாலும், இவர்களைப் பொறுத்த வரை கடுகளவு காசாக இது இருந்தாலும், காரம் பெரிதாக விருக்கும். ஸ்ரீலங்கா என்ற உணர்திறன் கூடிய மையத்தில், நிதி விவகாரத்தை மீறிய கேந்திர நலனொன்று இருப்பதை உணர்வார்கள்.
இத்தகைய புவிசார் அரசியலைப் புரிந்து கொள்ளாமல், நாடு கடந்த தேசிய அரசுருவாக்கத்தை, இனிவரும் காலங்களில், அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டணி ஆதரிக்குமென்று நம்புபவர்கள். சரியான
பாதையில் நகர்வது போல் தெரியவில்லை.

எல்லை கடந்த தேசிய அரசு செயற்படும் நாடுகள் குறித்தும், அவர்களுக்கு ஐ.நா. சபையின் சரத்துக்கள் வழங்கிய அங்கீகாரங்கள் பற்றியும் அதிகம் விவாதிக்கலாம். இந்த ஐ.நா. சபையின் ஏட்டுச் சுரக்காய் கொள்கைகள் யாவும் முள்ளிவாய்க்காலில் மரணி த்த சோக நிகழ்வுகளை அண்மையில் தரிசித்தோம்.இவற்றையெல்லாம் மீறிய, பிராந்திய வல்லாதிக்கப்போட்டியின் அரசியல் பரிமாணங்களே, இலங்கை விவகாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் உயிர்ப்புள்ள காரணிகளாகத் திகழ்வதை புரிதல் வேண்டும்.

2002 ஆம் ஆண்டு க்கு முன்பாக, பேரினவாதத்தால் கட்டவிழ் த்து விடப்பட்ட பயங்கரவாதத்தை, மேற்குலக நாடுகள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை யாம். தற்போது இதனைப் புரிந்து கொள்வதால், நாடு கடந்த அரசிற்கு மேற்குலகின் ஆசீர்வாதம் கிட்டுமென்கிற வகையில் விளக்கங்கள்
அளிக்கப்படுகின்றன.

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய்லாமாவை இந்தியாவிற்குள் வரவேற்றாலும், திபெத்தின் நாடு கடந்த தேசிய அரசினை இந்திய அரசு இன்னமும் அங்கீகரிக்கவில்லை. அவ்விவகாரத்தை, ஒரு பேரம்பேசும் சக்தியாகவே இந்திய அரசு பயன்படுத்துவதை உணர்தல் வேண்டும்.

வல்லரசு மோதல்களுக்கிடையே, சிக்குண்டு கிடக்கும் நாடு கடந்த தேசிய அரசுகளின் இன்றைய நிலை குறித்து தெளிவான பார்வையொன்று அவசியம். ஜோர்ஜியாவின் அப்காசியா, சேர்பியாவின் கொசோவோ போன்ற நாடுகள், வல்லரசுகளின் போட்டா போட்டியில் தம்மை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

ஈழத்தமிழர் விவகாரத்தில், அதற்கான ஆதரவுத் தளம் இன்னமும் உருவாகவி ல்லை. கள நிலைமைகளும், ஆரம்பகால பாலஸ்தீன நிலை நோக்கியே நகர்கின்றது. 1948 ஆம் ஆண்டு யுத்தத்தால், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீன மக்கள், தமது வீடுகளில், நிலங்களில் மறுபடியும் குடியேற முடியாதவாறு இஸ்ரேலிய அரசு தடுக்கிறது.

இஸ்ரேலினை ஒரு யூத நாடாக அங்கீகரிக்க வேண்டும், அதேவேளை இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள், அங்கு குடியேற முடியாதெனவும் நிபந்தனைவிதிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த இரண்டரை வருடங் களில் மட்டும், பாலஸ்தீனர்களுக்கு சொந்தமான 285 வீடுகள், இஸ்ரேல் அரசினால், தமது குடிமக்களுக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது அதாவது வெளியேற் றப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு அந்நிலம் சொந்தமல்ல என்கிற விவகாரமே இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம்.

இந்நிலை வடக்குகிழக்கிலும் உருவாகலாம். அதைத் தடுத்து நிறுத்த எந்தச் சர்வதேச சட்டங்கள் முயன்றாலும் இன்றைய இஸ்ரேலின் பிடிவாத நிலைப்பாடு ஒருவிதமான தவறான முன்னுதாரணமாக முன்வைக்கப்படலாம்.
இவை தவிர, மக்களின் மீள்குடியேற்ற விவகாரமானது பேச்சுவார்த்தைத் தளத்திற்கு வெளியே தீர்க்கப்பட வேண்டுமென்கிற கருத்தினை இஸ்ரேலிய பிரதமர் வலியுறுத்துவதையும் கவனிக்க வேண்டும்.

ஆகவே, புலம்பெயர்ந்த தாயக தமிழ் மக்களின் அடுத்த கட்ட செயற்பாடானது. இத்தகைய புதிய உலக ஒழுங்கு அரசியலை உள்வாங்கி, முற்போக்குச் சக்திகளின் காத்திரமான உள் இணைவோடு கலந்து இயங்க வேண்டும்.
இதனை விடுத்து, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து பட்டிமன்றங்கள் நடத்துவதால், அவலப்படும் மக்களின் வாழ்
வõதாரப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

அதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பானது முற்றாக அழித்öதாழிக்கப்பட்டு விட்டதா? இல்லையா? என்கிற சந்தேகங்களுக்கு காலமே பதில்கூறும். இந்நிலையில், தென்னிலங்கையிலுள்ள முற்போக்குச் சக்திகளோடு இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட வேண்டிய காலத்தின் தேவையும் உணரப்படுகிறது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையோடு கூடிய அரசியல் அபிலாஷைகளை ஏற்றுக் கொண்ட பல இடதுசாரிச் சக்திகள், இன்னமும் தமது உறுதியான நிலைப்பாட்டினை தெரிவித்த வண்ணம் இயங்கிக் கொண்டிருக்
கின்றன.

தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டமானது மேற்குலகினால் வழிநடத்தப்படும் அல்லது அதற்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டது என்கிற கருத்தினை மாற்றிட வேண்டிய காலமிது.

- சி. இதயச்சந்திரன்

நன்றி - வீரகேசரிவாரவெளியீடு

Comments