தமிழர்களே கட்சி, சாதி, மதங்களை கடந்து ஒன்றுபடுங்கள்

தமிழ்மக்களே மிகவும் விழிப்பாக இருங்கள். இப்பொழுது எதிரி, தமிழன் என்ற போர்வையில் தமிழனுக்காக எழுதுவது போன்ற கட்டுரையின் ஊடாக விஷக் கருத்துக்களை விதைப்பதாக செய்திகளும், அதற்கேற்றாற் போல் கட்டுரைகளும் கூட வருகிறது. இப்படிப்பட்ட கருத்துக்களை பரப்புபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து விரட்ட வேண்டும்.

உறவுகளே, இன்று நமக்குள் ஒரு கருத்துப் பரிமாற்றங்களும், ஆய்வுகளும், ஏன் விவாதங்களும் கூட அவசியம் தான். இது நமக்கு சில தெளிவுகளைப் பெறவும் அடுத்த கட்ட செயல்பாட்டுக்கும் உதவும். அதனால் அது ஆக்கபூர்வமாகவும் உளவுரன் உந்துதலுக்குமாகவே இருக்க வேண்டும். மாறாக, நம்மை குழப்பமடையச் செய்வதாகவோ சோர்வடையச் செய்வதாகவோ இருக்க கூடாது.

சமீபத்தில் "முன்னாலே சென்றோரின் பின்னால் ...." என்ற கட்டுரையைப் படித்து கோபமும் மனவேதனையும் தான் அடைந்தேன்(தோம்). "தலைவர் இனித் திரும்பி வரப் போவதில்லை" என்று உறுதி கூறுவதற்கு இவர் யார்?. களத்தில் உடன் இருந்தாரா?. ஈழபோர் 1,2,3 என வேறு பார்வை, பெருமைகளை வகை பிரித்து கொடுத்தல், கடைசி சிந்தனை கதை வேறு. இது இப்பொழுது தேவையா?.

இவர் யாரென்று எனக்கு தெரியாது. கோத்தபாய போல் களநிலை சம்பவங்களை சொல்லுகிறார். நமது தலைவரையும், போராட்டத்தையும் வஞ்சகப்புகழ்ச்சியாகவே வர்ணிக்கும் இவர் யார்?. இவர் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகளும், வசனங்களும் தமிழின உணர்வாளர்களுக்கு ஏற்றதாக இல்லை என்பது உறுதி.

இக்கட்டுரை மூலம் அவருக்கு தெளிவு ஏற்படும் என்று நம்புகிறேன். தமிழர் போராட்டம் அழிந்து போய் விட்டது என்றும், உலக ஒழுங்கிற்கு ஏற்ப தலைவர் அவர்கள் மாறவில்லை என்றும், தமிழ்செல்வன் அவர்கள் தலைவரை தவறாக வழி நடத்தி விட்டார் என்றும், தலைவர் அவர்கள் அரசியல் அடித்தளம் போடாமல் இராணுவ பலத்தை மட்டுமே கட்டி வளர்த்ததாகவும் அந்த இராணுவ கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது தமிழ் இனத்தின் எதிர்காலமே நொருங்குவதாகவும், தலைவர் சில விடயங்களை செய்யத் தவறி விட்டார் என்றும் கற்பனைப் புழுதி கிளப்புகிறார்.

மேலே இவர் கூறிய எல்லா கருத்துக்களுமே தவறு. அவரது கற்பனை ஓட்டத்தில் எழுதப்பட்டது. தமிழர் தலைமை அழிந்து போகவும் இல்லை அதனை நாம் அழிந்து போக விடப்போவதுமில்லை. மாசுமருவற்ற அண்ணன் தமிழ்செல்வன் அவர்களின் விடுதலைப்பற்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பலவீனமான இனத்தின் பலமே தலைவர் பிரபாகரன் தான். அவரே தமிழினத்தின் வீரத்திற்கும், பண்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், இராஜதந்திரத்திற்கும், நேர்மைக்கும், நம்பிக்கைக்கும் உதாரணமாக இருக்கிறார்.

அவ்வழியே தமிழர் படையை உருவாக்கி தமிழர்களுக்கென்று தமிழீழத் தனியரசை அமைத்து இராணுவ பலத்தை மட்டுமன்று தமிழர்களின் நிர்வாகத்திறனையும் உலகுக்கு காட்டினார். சுனாமி அழிவின் போது புலிகளின் நிவாரணப்பணிகளை உலகநாடுகளே பாராட்டின. அன்று தமிழினம் சாதி, கட்சி, மதங்களை விடுத்து ஒன்றுதிரண்டு போராடியிருந்தால் தனியரசு சுதந்திர அரசாக மாறியிருக்கும்.

இன்று சிங்கள ஆதரவு நாடுகள் கூட தமிழர்களுக்கு அரசியல் சமஉரிமை கொடு என்று அழுத்தம் செய்வதற்கும் தலைவர் ஈட்ட பலமான அரசியல் அடித்தளமே காரணம். சிங்கள இனவெறியையும், தமிழின அழிப்பையும் உலகுக்கு காட்டி தமிழீழத்திற்கு ஆதரவாக சில நாடுகளையும் திருப்பியிருக்கிறார். நாலாம் கட்ட ஈழப்போரின் முடிவும், இன்றைய ஈழமக்களின் நிலையும் நமக்கு மீண்டும் உணர்த்தியிருக்கும் பாடம், இதுவரை காலமும் தமிழின அழிப்பு புலிகளின் இராணுவ பலத்தால் மட்டுமே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்பதுவே.

நமது தலைவர் எடுக்கும் முடிவு நிகழ்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்படுவதல்ல. அவர் பல நூறு ஆண்டு முன்னோக்கி யோசிக்கக் கூடியவர். எதிர்கால தமிழினத்தின் நன்மையையும், பாதுகாப்பையும் கருதி எடுக்கும் இன்றைய முடிவு நமக்கு பிழையாக தோன்றலாம். இதை சரி என காலம் தான் உணர்த்தும். ஈழ வரலாற்றிலேயே பல உதாரணங்கள் உண்டு.

எல்லா விடுதலை இயக்கங்களுமே பல்லாயிரக்கணக்கான உயிர்களை அர்பணித்தே விடுதலையை வென்றுள்ளது. அஹிம்சை வழியிலும் இதுதான் உண்மை. இன்று விடுதலை அடைந்த நாடுகளும் கூட தமது பொருளாதாரத்தை இழந்தே, மக்களின் உயிர்களை அர்பணித்தே தமது இருப்பை, இறையாண்மையை காத்து வருகிறது. இதில் தமிழீழம் மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன?.

இதற்காகவே தமிழீழத்திற்கு உயிர் கொடுத்தவர்களை புனித இடத்தில் வைத்து வணங்க வேண்டும். இந்நிலையில் நாம் சோர்வடைவதோ, விரக்தி அடைந்து நிற்பதோ மேலும் இழப்புகளையே தரும். ஹிட்லரின் நாஜி படையால் லட்சக்கணக்கான உயிரை இழந்த யூத இனம் மீண்டெழுந்து தனக்கென ஒரு நாட்டை எழுப்பவில்லையா?.

மறைந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் கொடுக்கும் சரியான மரியாதை தமிழீழம் அமைப்பது மட்டுமே. அவர்களுக்கான இறுதி வணக்க அஞ்சலி மிக சிறப்பாக சுதந்திர தமிழீழத்தில் செய்வோம் என்று உறுதியுடன் மனம் தளராது போராட்டத்தை தொடர்வோம்.

இனி மக்களின் இழப்பை தவிர்க்க விரைந்து தமிழீழத்தை அமைப்பதே தீர்வு என்ற கொள்கையின் கீழ் அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். நமது கருத்து வேறுபாடுகளை சுதந்திர தமிழீழத்தில் பேசித் தீர்க்கலாம் என்பதை அனைவரும் உணர்ந்து இணைவோம்.

கட்சி, சாதி, மதங்களை கடந்து செயல்படுவோம். தமிழர்களே கட்சி, சாதி, மதங்களை கடந்து ஒன்றுபடுங்கள்

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

உறவுகளுக்காக,

தமிழகத்திலிருந்து - வெற்றிவேந்தன்.

Comments