இலங்கை முகாம்! நெஞ்சை சுட்ட நிஜம்! நேரில் கண்ட பத்திரிகையாளர் ஜெயாமேனன்!



தேன் என்று சொல்வதால் நாக்கு இனிக்காது. நலன்புரி முகாம் என்றும் உலகின் மிகப்பெரிய மறுவாழ்வு மையம் என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டாலும் மனித அவலத்தின் சாட்சியாகவே இருக்கின்றன இலங்கையில் உள்ள அகதி முகாம்கள். சொந்த மண்ணில் அகதிகளாகத் தவிக்கும் ஏறத்தாழ 3 லட்சம் தமிழர்களின் வாழ்நிலை குறித்து அரசுத்தரப்பிலான அதிகார மிக்க பொய்களைத் தொடர்ந்து பரப்பிக்கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளின் நிவாரண உதவியைப் பெறுவதற்காக ராஜபக்சே கட்டவிழ்த்துவிடும் பொய்களை ரத்தினக் கம்பளத்தில் தாங்கிப்பிடித்து, அதனை அப்படியே வெளியிடும் சில ஊடகங்களும் இந்தியாவில் இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் மிக முக்கியமான ஆங்கிலப் பத்திரிகையான "டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் பொலிட்டிக்கல் எடிட்டர் ஜெயாமேனன். புதைக்கப்பட்டுள்ள உண்மைகளைத் தோண்டி எடுக்கும் வகையில் சிங்கள ராணுவத்தின் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்தை மீறி, ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி வவுனியா முகாமுக்குச் சென்று திரும்பியுள்ள அவரை நக்கீரன் சந்தித்தது. இலங்கை அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களின் வலி நிறைந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் ஜெயாமேனன்.

""உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வு முகாம் என ஐ.நா சபையால் சொல்லப்படும் வவுனியா செட்டிகுளம் முகாமுக்குள் என்னை அழைத்துச் சென்ற வேன் நுழைந்தது. முள்வேலியும் துப்பாக்கி ஏந்திய காவலர்களும் மனிதர்களுக்கு அச்சமூட்டும் சூழலை உருவாக்கியிருந்தது. ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்த 600 ஏக்கரை பொட்டல் திடலாக்கி, அதில் வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் டெண்ட்டுகள் அமைத்திருக்கிறார்கள். சுட்டெரிக்கும் வெயிலை எதிர்கொள்ள முடியாமல் மக்கள் தவிப்பதைக் காண முடிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்த மரங்களின் நிழலில் கைக் குழந்தையுடன் பெண்கள் சிலர் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள்.

குறுகலான ஒவ்வொரு டெண்ட் டுக்குள்ளும் இரண்டு குடும்பங்கள் தங்க வேண்டிய நிலைமை. 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 63 ஆயிரம் பேர் இந்த முகாமில் இருக் கிறார்கள். தண்ணீர், உணவு, மருந்து இந்த 3 அடிப்படைத் தேவைகளுக் காகவும் அவர்கள் படும் வேதனையை நேரில் உணர முடிந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்த தமிழ்ப்பெண் ணிடம், "பால் கொடுக்க வேண்டியது தானே' என்று கேட்டேன். அவரோ, "இங்கே தண்ணிக்கே வழியில்லை. பாலுக்கு எங்கே போறது?' என்றார் வேதனையின் உச்சத்தில்.

ஒரு குடும்பத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 100 லிட்டர் தண்ணீர் தரப்படுகிறது. அதாவது, 5 வாளி தண்ணீர். அதுதான் குடிப்பதற்கு. அதுவேதான் குளிப்பதற்கு. அதிலேயே தான் துணியும் துவைத்துக் கொள்ள வேண்டும். அவசரத் தேவைக்கும் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு வாளித் தண்ணீரில் துணிகளை அலசிய ஒரு பெண், அந்தத் தண்ணீரைக் கீழே கொட்டவில்லை. தன் குழந்தையை அழைத்து அந்தத் தண்ணீரிலேயே குளிக்க வைத்து உடம்பு துவட்டிவிட்டார்.

"இரண்டு நாளா வரிசையில் காத்திருக் கன். எப்படியும் இன்றைக்கு மாலை 3 மணி தியாலத்தில் தண்ணீர் கிடைத்துவிடும் என்று நினைக்கிறம்' என்று சோகம் கலந்த நம்பிக்கை யுடன் சொன்னார் சாந்தினி. பிளாஸ்டிக் குடம், வாளி, கேன் அனைத்தும் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. 5 குழந்தைகளுக்குத் தாயான வந்தனா சந்திரசேகர், "3 நாட்களாகத் தண்ணீருக்காகக் காத்திருப்பதாகவும், இன்றாவது கிடைக்குமா என்று தெரியவில்லை' என்றும் கலங்கிய கண்களோடு சொன்னார்.

தண்ணீரே இந்த நிலைமை என்றால் சோற்றுக்கான அவலம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. காலையில் பெரும்பாலும் அரிசிப்புட்டு கொடுக்கிறார்கள். ஒரு சில நாட் களில் இட்லி கிடைத்தால் அபூர்வம். மதியம் கொஞ்சம் சோறு, குழம்பு, கூட்டு. இரவில் மறுபடியும் புட்டு. இது கிடைப்பதற்காக தமிழர்கள் ஒவ்வொருநாளும் படாதபாடுபடு கிறார்கள். எல்லாவற்றையும்விட கொடுமை, கழிப்பிடம் செல்வதற்கும் நீண்ட வரிசையில் தான் நிற்க வேண்டியிருக்கிறது.

போர் முடிந்துவிட்டதாக ராஜபக்சே அரசாங்கம் தம்பட்டமடித்தாலும் மக்களின் அவல நிலை தொடர்கிறது. போரில் காயம்பட்டு முகாம்களுக்கு வந்தவர்கள் மருத்துவ வசதியில்லாமல் தவிப்பதைக் காணச் சகிக்க முடியவில்லை. முகாம்களின் சீர்கெட்ட நிலையினால் காய்ச்சல், தொற்றுநோய்க்கு ஆளானவர்கள் மரணத்தின் வாசலில் படுக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர் தவனேஸ்வரி சின்னையா என்பவர் சொன்னது இன்னமும் காதில் ஒலிக்கிறது. காய்ச்சலைக் குணப்படுத்துவதற்காக ஒரே ஒரு பாரசிடமால் மாத்திரைதான் அவர்களது குடும்பத்தின ருக்குத் தேவை. அதற்காக மருந்துக்கடை வாசலிலேயே போய் இரவில் படுத்துக் கொண்டார்கள். "இங்கட எல்லாவற்றுக்கும் க்யூதான். உடம்பு சரியில்லாதபோதில் க்யூவில் காத்திருக்க ஏலாது. அதனால ஒரு மாத்திரை வாங்குவதற்காக ராத்திரியே வந்து படுத்துவிட்டோம். காலையில் மருந்துக்கடையின் கதவு திறந்ததும் மாத்திரை வாங்கிடுவம்' என்றார்.

முகாமில் உள்ள மருத்துவமனையில் 550 படுக்கை கள் இருக்கின்றன. நோயாளி களாக அனுமதிக்கப்பட்டி ருப்பவர்கள் 1,246 பேர். இவ்வளவு பேருக்கு சிகிச்சை யளிக்கக்கூடிய அளவுக்கு நாங்கள் தயாராக இல்லை' என்கிறார் முகாம் மருத் துவமனையின் தற்காலிக மருத்துவ அதிகாரியான டாக்டர் ரமணி ஜெயக் குமார். தொடை எலும்பு முறிந்து ஆஸ்பத் திரி படுக்கையில் கிடக்கும் 11 வயது விதுர்சனும் அவனது அப்பாவும் டாக்டர் எப்போது வருவார் என பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். பக்கத்து பெட்டில் படுக்கவைக்கப்பட்டிருக்கும் இரண்டு வயது சந்தோஷின் அம்மா-அப்பா யார் என்று தெரியவில்லை. முல்லைத்தீவில் ஒரு பங்கருக்குள்ளி லிருந்து மீட்கப்பட்டிருக்கிறான் சிறுவன். கால் வைக்கக்கூட இடமில்லாத அளவுக்கு நோயாளர் கள் குவிந்திருக்கிறார்கள். குற்றுயிராய் வருபவர் களையும் கொன்றுவிடும் வகையில்தான் இருக்கிறது மருத்துவமனையின் நிலைமை. காயமடைந்தவர்களும் தொற்றுநோயால் பாதிக் கப்பட்டவர்களும், "இங்கே வாழுறதுக்கு நாங்க போர்க்களத்திலேயே செத்துப் போயிருக்கலாம்' என்கிறார்கள் விரக்தியான குரலில்.

வசதிகள் எதுவுமற்ற முகாம்களுக்கு கதிர்காமர், ஆனந்தகுமாரசாமி, ராமநாதன், அருணாசலம் என்று சிங்கள அரசுடன் இணக்க மாக இருந்த தமிழ்த்தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. வைக்கப்பட்டுள்ள பெயர் களால் தமிழர்களின் வயிறு நிறைந்துவிடப் போவதில்லை. நிமிர்ந்து நிற்கவோ, நீட்டிப் படுக்கவோ முடியாத டெண்ட்டுகளிலேயே பள்ளிக்கூடத்தையும் நடத்தச் சொல்லியிருக் கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கைக்கு இந்த டெண்ட் போதாது என்பதால் மரத்தடியைத் தேடிப் பிடித்து பாடம் நடத்துகிறார்கள் ஆசிரியர்கள். சாந்தினி குகநாதன் என்ற ஆசிரியை என்னிடம், "காலை எட்டரை மணிக்கு வகுப்பு தொடங்குது. பல மாணவர்கள் அரைப்பட்டினி யாகத்தான் வருகிறார்கள். காட்டோரப் பகுதியில் முகாம் இருப்பதால் ராத்திரியில் யானைகள் பிளிறுகிறது. பிள்ளைகளால் தூங்க முடிவதில்லை. சாப்பாடும் தூக்கமும் இல்லாமல் அவர்களால் எப்படி படிக்க முடியும்' என்றார்.

"ஷெல் அடிபட்டே செத்துப் போயிருக்க லாம். இங்கே தினம் தினம் சாகிறோம்' என்ற 55 வயது சரோஜினிக்கு ஒரு கால் இல்லை. உதவி செய்யவும் குடும்பத்தினர் யாருமில்லை. புலிகள் இயக்கத்தில் இருந்த அவரது மூத்த மகன் சாந்தரூபன், சிங்கள ராணுவத்துடன் களமாடி மாவீரரானவர். இதனால் சரோஜினியுடன் வந்த மகள் தரணியையும் மருமகன் சந்திரனையும் விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் சிறப்பு முகா முக்கு கொண்டுபோய்விட்டது ராணுவம். திரி கோணமலை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் தன் தம்பியிடம் போக அனுமதிக்குமாறு கெஞ்சிக் கொண்டிருக்கிறார் சரோஜினி. அனுமதிக்க மறுக்கிறது ராணுவம்.

போரில் பெற்றோரை இழந்த புலிகளின் குழந்தைகளுக்காகவே செஞ்சோலையில் முகாம் உருவாக்கி சிறப்பாக பராமரித்து வந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். பிரபாகரனே நேரில் வந்து இந்தக் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்வார். செஞ்சோலை யில் இருந்தவர்களில் 133 பையன்கள் எந்த ஆதரவு மின்றி அகதி முகாமில் தவித்துக்கொண்டிருக்கிறார் கள். செஞ்சோலை சிறுமிகள் 172 பேரை ராணுவத் தினர் பலவந்தமாக இழுத்துச் சென்றார்கள். அந்த சிறுமி களின் கதி என்னவென்று இன்றுவரை தெரியவில்லை.

180 நாட்களில் தமிழர்களை அவர்களின் பகுதியில் குடியேற்றம் செய்வோம் என்று ராஜபக்சே அரசு வெளியுலகை நம்பவைக்க முயற்சித்தாலும், அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என் பதை செட்டிக்குளம் முகாமின் நிலைமை காட்டுகிறது. ஜூன் 25-ந் தேதி இரவில், ஆயுதமேந்திய ராணுவத் தினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தமிழ் இளைஞர்கள் சிலர் ஒரு மரத்தின் மீது ஏறி, அதன் உச்சிக்கிளையில் ஒரு துணியைக் கட்டிவிட்டு இறங் கினர். பொழுது விடிந்தபோது, மரத்தின் உச்சியில் விடுதலைப்புலிகளின் கொடி பறந்து கொண்டிருந்தது. கோபமான ராணுவத்தினர், அந்த முகாமில் இருந்த அத்தனை இளைஞர்களையும் இழுத்துப்போட்டு உதைத்தனர். இளைஞர்கள் மிரளவில்லை.

நலன்புரி முகாம்கள் என்ற பெயரிட்டுவிட்டு, அவற்றை மிக மோசமாக பராமரிக்கும் சிங்கள அரசின் செயல்களால் புலிக்குட்டிகள் பிறக்கக்கூடிய நிலைமையைப் பார்க்க முடிகிறது.''

சந்திப்பு : லெனின்

Comments