தமிழர்களின் உரிமைப்போரும், விடுதலையும் கருணாநிதியின் அறிக்கையும்

தமிழினக் காவலர் என்று வேடம் போட்ட கருணாநிதி வெளியிட்ட அறிக்கையானது அனைத்து ஈழத் தமிழர்களாலும் உற்று நோக்கப்படவேண்டியது. தமிழர்களின் உரிமைப்போரும், விடுதலையும், தனித் தமிழீழமும், சுயநிர்ணயமும் இனிச் சாத்தியமற்றதென்றும், அத்தீவில் தமிழர்கள் அடிப்படை வாழ்வுரிமையோடும், மொழிபேசும் உரிமையோடும், மதம் பின்பற்றும் உரிமையோடும் சிங்களவர்களின் கீழ் அவர்களைக் கோபப்படுத்தாது, சேர்ந்து வாழ்ந்து அவர்கள் தருவதை மட்டுமே பெற்று வாழ மட்டுமே இனிமுடியும் எனக் கூறியுள்ளார்.

இவரின் இந்தக் கூற்று, இவரின் உண்மை முகத்தையும், சிறீலங்கா அரசின் மீது இவரின் உண்மை விசுவாசத்தையும் காட்டியுள்ளது. தமிழர்களின் உயிர் வாழ்வும், புனர்வாழ்வும் சிங்கள மக்களையும், சிறீலங்கா அரசையும், பெளத்த துறவிகளையும் கோபமடைய வைக்காது, அவர்களோடு பணிந்து சென்றே பெறப்படல் வேண்டும் என்று உலகத் தமிழர்களுக்கே அடிமைசாசனம் படித்துள்ளார்.

சிங்களவர்களால் தமிழினமே தடைக்குள்ளாக்கப்படாது இருக்க, விடுதலை, தனியாட்சி என்ற கொள்கைகள் விட்டொழிக்கப்படவேண்டுமென்று கூறுகின்றார். இதனையே தன் கட்சிக்கொள்கையாகவும் அறிவிக்கின்றார். இதே கருணாநிதியே இந்திய மாநில சுயாட்சி அமைப்பை விமர்சித்து தாம் எந்த உரிமைகளுமற்று ஆட்சி புரிவதாகவும், "'ஒரு அடிமையால் இன்னொரு அடிமைக்கு உதவமுடியாது"' என்றும் சில மாதங்கள் முன் கூறியிருந்தார்.

இன்று அவரே ஒன்றிணைந்த சிறீலங்காவிற்குள் தமிழர்களுக்கு அடிமை சாசனம் வாசிக்கின்றார். இந்த அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு சொல்லும் தமிழர்களால் அவதானமாக நோக்கப்பட வேண்டியவை. தேர்தல் சமயத்தில் வாக்குகளிற்காக தமிழ்த் தேசியம் பற்றியும், தமிழர் விடுதலை பற்றியும் கூறி உண்ணாவிரத நாடகமிட்ட கருணாநிதி இன்று, வெற்றி பெற்றபின் அவர் தான் முழுமையாகச் சார்ந்திருக்கும் கொங்கிரஸ் கட்சியினதும், இந்திய ஆதிக்க வல்லரசினதும் குரலாகவே ஒலிக்கின்றார்.

இவர்களின் புவிசார் அரசியல் மோதல்களில் தங்கள் தங்கள் இடங்களைத் தக்கவைக்க, சிறீலங்கா எந்தவித போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் செய்துகொண்டிருந்தபோதும் சிறீலங்காவைக் காப்பதற்கும், முட்டுக்கொடுப்பதற்கும் பிராந்திய வல்லரசுகள் முண்டியடித்துக்கொள்கின்றன. இவர்கள் சொல்லும் "'பயங்கரவாதம்"'என்ற சொல் இவர்கள் தங்கள் நலன்களைக் காப்பதற்காகவே தங்கள் செயல்களை மறைக்க போட்டுக்கொண்ட புகைத்திரை. இவர்களிற்கு விடுதலைப்புலிகள் ஒரு முக்கிய பிரச்சினையில்லை.

ஆனால் தமிழர்களின் சுதந்திரப்போராட்டமானது, இவர்களின் பிராந்திய நலன்களையும், ஆதிக்கத்தையும் ஆட்டம்கொள்ளவைத்துவிடும் என்பதே இவர்களின் கவலை. இதன் காரணமாகவே இந்திய சீன அரசுகள் தமிழருக்கு எதிரான நிலையை எடுத்து சிங்கள அரசை தாங்கி வைத்துள்ளன. இவர்களின் பிராந்திய ஆதிக்கப்போர் தமிழர்களின் சுதந்திரப்போரைக் காவுகொள்ளத் துடிக்கின்றது.

சிறீலங்கா அரசின் அதிகார மட்டத்தில் புதிய மீள் கட்டமைப்புக்கள் வராது இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்றும் காணப்படமாட்டாது. ஆனால் இன்றிருக்கும் இந்தக் கட்டமைப்பை தம் நலன்களிற்காக கட்டிக்காக்க பிராந்திய வல்லரசுகள் எந்த எல்லைக்கும் போகத் தயாராகவேயுள்ளனர். இவர்கள் இங்கு கடை விரிக்கவேண்டுமென்றால், நாட்டை விற்கும் ஒரு அரசு அவர்களிற்கு அவசியம். அவர்களைப் பொறுத்தவரை மகிந்த ராஜபக் ஷ ஒரு நல்ல வியாபாரி.

இந்தப் பிராந்திய வல்லரசுகளின் பலவீனங்களைப் புரிந்துகொண்டு சிறீலங்கா அரசு அவர்களிற்குரிய வளங்களையும், நிலங்களையும் இரையாகக் கொடுத்து தனது இனப் படுகொலை அட்டவணையைப் பலப்படுத்துகின்றது. சீனர்களிற்கு அம்பாந்தோட்டை வழங்கப்பட்டால், இந்தியர்களிற்கு காங்கேசன்துறையை வழங்குவேன் என்று தன் ஏலத்தை மகிந்த ராஜபக்­ ஷ ஆரம்பித்துள்ளார். இங்கு தமிழர்களை அழிப்பதற்கு தமிழர்களின் நிலங்களே முதலீடுகள் ஆகின்றன.

ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போரிற்கு எதிரான உச்சப்போர் இப்பொழுதே உச்சம் கொண்டுள்ளது. எல்லோருமாக தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தாங்களாகவே கைவிடவேண்டுமென்று எல்லோரும் நினைக்கின்றார்கள். தமிழர்களிற்கு இலங்கைத் தீவில் எவ்வளவுதான் உரிமைகள் இருப்பினும், சிங்களவர்களாக நினைத்துக் கொடுப்பதையே அவர்கள் ஏற்கவேண்டுமென்று நினைக்கிறார்கள்.

இந்திய நிர்வாகத்திற்கு இந்தப் போரில் முனைப்புடன் செயல்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானது தனது கொல்லைப் புறத்தில் நிகழ்ந்த இன அழிப்புப் போரில் சிறீலங்காவிற்கு ஆதரவு கொடுப்பதில் நிகழ்ந்த இந்திய சீனப் போட்டியில் சீனா வெற்றிகொண்டதை ஏற்றுக்கொள்ள இயலாமையே. அதை நிவர்த்தி செய்ய பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்படைய வைப்பது முனைப்புக்காட்டி சிறீலங்காவில் தன் ஆதிக்கத்தை மீள நிலைநிறுத்தப் போராடும் செயற்பாடே இது.

அங்கு எந்தவிதமான சமூக அடிப்படையில் நிர்வாகம் இயங்கினாலும் நேரு கிருஷ்ணமேனன் வழித்தோன்றல்கள் தங்கள் பிடிவாதமான ஆதிக்கக் கொள்கையினால் தெற்காசியாவின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தியா தன் கொள்கைகளை சிறீலங்காவின் மீது திணிப்பதற்கு முயலும்போதெல்லாம் தமிழர்களே பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்கள். தங்கள் கொள்கைகளைத் தமிழர் மீது திணிப்பதிலே என்றும் இந்தியா ஆர்வம்காட்டியுள்ளது.

இன்று சீன ஊடுருவலால் இந்தியாவின் பாதுகாப்பு இலங்கைத் தீவின் கடற்கரைப் பற்றைகளிற்குள் தொலைக்கப்பட்டபின், மீண்டும் தன் ஆதிக்க நிலையை நிலைநிறுத்துவதற்காக தமிழர்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் பறித்தெடுத்து அவர்களிற்கு ஒரு அரைகுறைத் தீர்வைத் திணிப்பதற்கு முயல்கின்றது. கருணாநிதி சிறீலங்காவின் போர்க் குற்றங்களை மறைத்து கவசமிடுவதில் பல காரணங்கள் உள்ளன.

கொழும்பு கோபமடைந்து வாய்திறக்குமானால் கொழும்பிற்கும், டெல்லிக்கும் மாறி மாறிப் பயணம் செய்து திட்டமிட்டு இனப்படுகொலை செய்த கனவான்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டு அரசிலும் பல உயர் புள்ளிகள் போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. இதில் கருணாநிதிக்குப் பெரும் ஆபத்தும், பங்கும் உள்ளது. இதனாலேயே கொழும்பைச் சாந்தப்படுத்த அவர் முயல்கிறார்.

இந்தக் கூட்டணி ஒரே நாளில் கொல்லப்பட்ட இருபதினாயிரத்திற்கும் மேலான மக்களிற்கும், சிறைப்பிடிக்கப்பட்ட மூன்று இலட்சம் மக்களிற்கும் இழைத்த போர்க் குற்றத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. புலிகளை எல்லோரும் சேர்ந்த நசுக்கியதால் போர் ஓய்ந்துவிட்டதாக நினைக்கிறார்கள். அதுமட்டுமின்றி புலிகளை நசுக்க உதவியதன் மூலம் தமிழர் போராட்டத்தையும் முற்றுமுழுதாக அழித்துவிட்டதாக நினைக்கிறார்கள்.

எல்லா வல்லரசுகளும் கண்மூடித்தனமாக தமது புவிசார் அரசியலையும், அதன் இலாப நட்டங்களில் மட்டுமே அக்கறைகொண்டிருக்கும்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்க்கமான முடிவுடனும், தனித்தே நின்றும் எந்த சக்தியோடும் சேராமலும், எந்த சக்திகளின் கையில் வீழாமலும் வல்லரசுகளின் கூட்டான அபார பலத்தை எதிர்த்து விடுதலைக்காகப் போராடி நாகரீகமடைந்த மனித உள்ளத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்கள்.

மனவலிமைக்கும், சுதந்திர வேட்கைக்கும் முன்னால் ஒருங்கிணைந்து சர்வதேச பலம்கூட அவர்கள் உறுதியைக் குலைக்கவில்லை. வெட்கப்படும்படியாக உலகமே இன்று சுயநலத்திற்கான போரிற்கே ஆதரவு கொடுக்கின்றது. உலகின் ஜாம்பவான்களான அமெரிக்காவை அதன் கீழ்ப்படிவாளனான ஐக்கிய அரசாங்கங்கள் சபைக்கும் (ஆம் அவை நாட்டுமக்களிற்குரிய ஐக்கிய நாடுகள் சபையல்ல, அரசாங்கங்களைத் தாங்கிப்பிடிக்கும் சபையாகவே உள்ளது) சர்வதேச உலக ஒழுங்கு முறைமைக்கும் இந்தப் போர் ஒரு சவால் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் சபை ஆணையாளர்கள் அவர்கள் முன்னோர்கள் விட்ட பிழைகளை இவர்களும் பின்தொடருகின்றனர். இந்த நாடுகளின் கூட்டமைப்பு மஞ்சூரியாவிலும், அபிசீனியாவிலும் தோற்றதைத் தொடர்ந்து மனித உரிமைகள் விடயத்தில்கூட ஐ.நா. சக்தியற்ற, ஆன்மையற்றவர்களென ஈழத் தமிழர்கள் விடயத்திலும் தம்மை நிரூபித்துள்ளன. இந்தக் கொடுமையான போர் நாகரீக உலகில் பலரது கண்களைத் திறந்துள்ளது.

விடுதலைப்புலிகள் எம்மிடம் கொண்டுவந்து தந்திருக்கும் இந்த இடத்திலிருந்து இந்தப் போரை, போராட்டத்தைத் தோள்மீது தாங்கவேண்டிய பாரிய கடமை புலம்பெயர் தமிழர்கள் எம்மீது உள்ளது. புலிகள் இன்னும் போராட்ட வலுவுடன் உள்ளார்களா, இல்லையா என்பதை விட்டுவிட்டு, அந்த ஆராய்ச்சியில் எம் சக்தியைத் தொலைப்பதை விட்டுவிட்டு எம்மீது விழுந்திருக்கும் இந்த வரலாற்றுப் பொறுப்பைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு நாம் உறுதியோடு செயற்படவேண்டுமென்பதே இன்றைய நிஜம்.

இன்றைய இக்கட்டான நிலைமைக்கு நாம் ஒற்றுமையாக, வலுவாக ஒன்று சேர்வதே மாற்றீடாக அமையும். வன்னிக் கட்டளைப்பீடத்திலிருந்து புலம்பெயர் மக்களின் கரங்களிற்கு போராட்டம் கைமாற்றித் தரப்பட்டுள்ளது. மக்கள் போராட்டமாக உருமாற்றம் பெற்றுள்ளது. இது காலத்தினதும், சர்வதேச இராஜதந்திரத்தினதும் தேவையாகும். இந்த மாற்றம் ஆரம்பத்தில் குழப்பங்களும், மாயைகளும் நிரம்பியதாகவே இருக்கும்.

இந்தக் குழப்பங்களில் எம்மை ஒளித்துள்கொண்டு, நம் பொறுப்புகளிலிருந்து நழுவிவிட முடியாது. இராணுவ வழியிலிருந்து மக்கள் போராட்டமாக மாறியுள்ள இந்த நிலையை தமக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு ""நாம் அன்றே சொன்னோமல்லவா'' என்று ஒரு கூட்டம் எதிரிக்கூடாரங்களை நோக்கி நடைகட்டத் தொடங்கியுள்ளது. இது ஒன்றும் ஈழத் தமிழர்களிற்குப் புதிதல்ல.

1931ல் இருந்து இனரீதியாகப் பாகுபடுத்தப்பட்ட காலத்திலிருந்தே தமிழர்களின் வலிகளோடும், போராட்டங்களோடும் கூடவே இத்தகைய கூட்டங்களும் கூடவே வந்துள்ளன. தமிழரின் போராட்டம் காலத்தால் அழிக்கப்படாது முனைப்புப்பெற்று வரும் காலங்களில் ""நாம் அப்போதே சொன்னோமல்லவா'' கூட்டங்களும் சாகாவரம்பெற்றுக் கூடவே வந்துள்ளன. ""இன்று போராளிகள் எதனையும் சாதிக்கவில்லை. வெற்றிடங்களை உருவாக்கிவிட்டார்கள்'' என்று கூறும் இந்தக் கூட்டம் தங்கள் "அறிவு ஜீவித்தனத்தால்' தமிழர்களிற்கு என்ன சாதித்தார்கள் என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை.

நடைமுறைக்கு ஒவ்வாமலும் மதில்மேல் பூனைகளாகவும் இருக்கும் இக் கூட்டம் இன்று மக்களைக் குழப்பி போராட்டத்தை மழுங்கடிக்கவே முனைப்புக்காட்டி நிற்கிறது. இந்தப் புகை மூட்டங்களை ஊதித் தள்ளிவிட்டு புலம்பெயர் தமிழர்கள் உறுதியோடு தலைவர் வழி நடக்கவேண்டிய தருணம் இது. இன்று பல அரசுகளும், கொள்கைவகுப்பாளர்களும் இப்படியான கூட்டங்களும் முற்றுமுழுதாக தமிழர்களைப் போராட்ட வழியில் இருந்து அகற்றி மெளனிக்க வைக்க விடாமுயற்சி எடுக்கின்றனர். இது இனப்படுகொலையின் இன்னுமொரு வடிவக் கட்டமைப்பாகும்.

தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் "அறிவுஜீவிகள்' கொழும்பின் இனப்படுகொலை அரசோடு கூட்டுச் சேர்ந்து தங்கள் அதீத ஈடுபாட்டைச் செலுத்தி ஈழத் தமிழர்கள் போராட்டத்தை திசைதிருப்பி, மழுங்கடித்து தமிழர்களின் அடையாளத்தை இழக்கவைத்து அவர்களை சிறீலங்காவின் நிரந்தர இரண்டாந்தரப் பிரஜைகளாகவும், அடிமைகளாகவும் மாற்றுவதற்குச் செயற்படுகின்றனர். இந்தப் பிரிவினருக்கு ஈழத் தமிழர்கள் என்றுமே எதுவுமே தீங்கு செய்ததில்லை. ஆனால் ராஜபக்­க்களை விட இவர்களே தமிழரை அழிப்பதில் முழுமூச்சாய் வெறியுடன் இயங்குகின்றனர்.

இப் பிரிவினர் மீது தன் வலுவான ஆதிக்கத்தை வைத்திருக்கும் கருணாநிதி நினைத்தால் இவர்களோடு பேசி, இவர்களை வழிக்குக் கொண்டுவர முடியும். இந்த சக்தி அவரிடம் உள்ளது. இவர்களோடு பேசி இவர்களை வழிக்கொணர்வது ராஜபக்­வோடு பேசுவதை விடப் பயனுள்ளது. உலகத் தமிழர்களின் தலைவர், முத்தமிழ் காவலர், ஈழத் தமிழர்களின் ஆதரவாளர் என்ற நிலையில் தன்னைக் காட்டிக்கொண்ட கருணாநிதி இன்று தன் நாற்காலிக்கும், வாரிசு அரசியலுக்குமாய் அதே தமிழினத்தை சிங்களவர் காலடியில் மண்டியிட்டு சரணடைந்து அடிமைகளாக தமிழன் என்ற அடையாளத்தையே இழக்கும்படியாகக் கூறுகின்றார்.

இவர் காட்டிய தமிழினப் பற்றை விட இவர் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசு மேலான பற்று பாரியது. இதே கருணாநிதியே இது அரசுகளிற்கு எதிரான போரல்ல, இரு இனத்திற்கு இடையான போர் என்று கூறியிருந்தார். அப்படிக் கூறியவர் எதற்காக தமிழினத்தை ஒன்று சேர்த்து, தமிழினத்தின் சக்தியை உலகிற்குக் காட்டி இந்த இனப்படுகொலையைத் தடுத்திருக்கவில்லை. காரணம் இவர் தமிழினத்தை விட தம் பதவியில் வைத்திருக்கும் பற்று அதிகம். கருணாநிதியின் இந்த நிலைப்பாடானது கொழும்பிற்கு தமிழர் மீதான அனைத்துத் தடைகளையும், போர்க் குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் தொடர்வதற்கான நியாயங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.

இதைவிட மோசமாக சர்வதேசத்தில் நிலவும் தமிழின ஆதரவுத் தன்மையையும், தமிழர்கள் மீதான அனுதாபங்களையும் இது முற்றுமுழுதாகத் தகர்த்தெறியும். இந்த அனைத்து நிலைமைக்கும் முகம்கொடுத்துப் போராடவேண்டிய கடப்பாடு புலம்பெயர் தமிழர்களிடையே உள்ளது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும், தனித் தமிழீழத்தையும் மீள வலியுறுத்துவதன் மூலமே கருணாநிதிக்குரிய பதிலடியை நாம் கொடுக்கமுடியும். இன்று பலரும் இந்தப் போராட்டத்தை விமர்சனம் செய்து, களத்தில் நடந்த போரிலேயே வெல்ல முடியாத இந்தப் போரை புலத்தில் எப்படி வெல்லப்போகின்றோம் என்று விமர்சிக்கின்றார்கள்.

ஆனால் ஒன்றுபட்ட பாரிய சக்தி தமிழர்களின் குரல்வளையை நசித்து தமிழர்களின் சுதந்திர வேட்கையை தமிழீழத்தில் சிதைக்கும்போது எமது குரல்கள் மட்டுமே இங்கு சுதந்திரமாக ஓங்கி ஒலிக்க முடியும். சுதந்திர தாகம் அணையாது காக்கவேண்டிய கடமை எம்மிடமே உண்டு. புவிசார் அரசியல் சக்திகள் கொடூரமாகவும், மனிதத் தன்மையற்றும் எமது விடுதலைப்போரின்மீது பாயும்போது சொந்த இரத்தத்திற்காக நாங்கள் நீதி கிடைக்கும்வரை நம் தேசம் மீட்கப்படும்வரை போராடவேண்டும்.

கருணாநிதியும் அவர் முன்னோரும் சேர்ந்து திராவிட நாடு கோரிக்கையை தி.மு.க. கைவிட்டதுபோல் நாம் தமிழீழத்தை மீட்காமல் விடமுடியாது. நாம் விட்டுவிடுவோம் என நினைப்பது கருணாநிதியின் முட்டாள்தனம். நாம் எம் மனதில் எம் மக்களையும், எம் தேசத்தையும் மட்டுமே நிலைநிறுத்தி எம் சொந்தக் கொண்டாட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு பல்லாயிரமாய் ஒன்றிணைந்து தமிழீழத் தேசமும், தேசியத் தலைவரும் தந்திருக்கும் தலையாய கடமையைத் தோளிலும், நெஞ்சிலும் ஏற்றி தமிழீழ தேசம் விடியும்வரை போராடுவோம். ""ஒன்றே தலைமை என்றே முழங்குஅன்றே உடையும் எம் கை விலங்கு''

- சோழ கரிகாலன்.

(தகவல் ஆதாரம் - தமிழ்நெற்)

நன்றி: ஈழமுரசு (11.17.2009)

Comments