சீனாவின் எழுச்சியும் அணிசேரா நாடுகளும்

தமக்குள் அணி சேராமல், முரண்பட்டு நிற்கும் நாடுகளின் மாநாடொன்று எகிப்தில் நடை பெற்றுள்ளது. அதற்கு அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு என்கிற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. பொதுவாக இம் மாநாடுகளில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்கள் நிதியுதவி, முதலீடு, உலக விவகாரங்களில் அணி சேர்வது குறித்து பேசுவார்கள். உத்தியோகபூர்வமற்ற முறையில் நடைபெறும் சந்திப்புக்களுக்கு உத்தியோகபூர்வமான அங்கீகாரம் வழங்கும் ஒன்றுகூடல் தளமிது.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னான பனிப்போர் காலத்தில் மூன்றாம் உலக நாடுகளால் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் உறுப்பினராகவுள்ள பல நாடுகள், பிராந்திய அணு ஆயுத வல்லரசுகளாகவும், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடுகளாகவும் திகழ்கின்றன. தற்போதைய அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியின் அதிர்வினால் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள் இம் மாநாட்டில் எதிரொலித்துள்ளது.

இங்கு நிதியுதவி கேட்டு கையேந்திய சிறிய நாடுகளின் தலைவர்களையும் காணக்கூடியதாகவிருந்தன. யுத்த முதலீட்டில் பொருளாதாரத்தை இழந்தவர்களும், அமெரிக்காவில் தங்கி நின்று ஆட்சி புரிந்தவர்களும், நாட்டு வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து, அந் நிறுவனங்கள் மூடப்பட்ட போது நடுத் தெருவில் நின்றவர்களும் இம்மாநாட்டில் நிரம்பி வழிந்தனர்.

புதிய உலக கோட்பாட்டின் ஓருலக நாயகன், அமெரிக்காவின் ஒரு துருவ நிலை ஆட்டம் கண்டவேளையில், ஆசியாவில் நிமிர்ந்து வரும் சீனாவின் அனுசரணை வேண்டி நேசக்கரம் நீட்டும் பல நாடுகளும் இவ்வணிசேரா அணியில் அடங்கும். இம்மாநாட்டில் கலந்து சிறப்பித்த சில அணிகள், சீனாவோடு நெருங்கிய உறவினை வெளிப்படையாக வளர்த்துக்கொள்ள ஆர்வம் கொண்டுள்ள விவகாரத்தை நோக்க வேண்டும்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும், சீனாவின் மொத்த தேசிய வருமானம், 8 வீதத்தினால் அதிகரித்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அத்தோடு வெளிநாட்டு நாணயக் கையிருப்பு இரண்டு பில்லியன் டொலர்களைத் தாண்டி விட்டன. சீனச் சுவர் போன்று உலக அதிசயமாகப் பார்க்கப்படும் இப் புள்ளி விபரங்கள் அமெரிக்க நாயகனின் ஏகபோக டொலர் நாணய ஆளுமையைச் சிதைக்கும் வாய்ப்புக்களை உருவாக்கலாமென்றும் கருதப்படுகிறது.

புதிய உலகப் பொது நாணயம் குறித்து அண்மைக் காலமாக சீன மத்திய வங்கி தெரிவித்து வரும் கருத்துக்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இந்நிலையில் ஐ.நா. சபையின் அரைவாசிக்கும் மேற்பட்ட நாடுகளின் ஒன்றியமான அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு எகிப்தில் ஒன்று கூடியமை முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகக் கருதப்படுகிறது. பல அணிசேரா நாடுகளின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மிகவும் அடிமட்ட நிலையில் வற்றிக்கிடக்கிறது.

அதேவேளை மூல வளங்கள் இல்லாத நாடுகளில் சீன முதலீட்டினை எதிர்பார்க்க முடியாது. உதாரணமாக அரசியல் நெருக்கடி மிகுந்த உட்கட்டுமானம் இல்லாத ஆனாலும் கனிவளம் நிரம்பிய கொங்கோ ஜனநாயகக் குடியரசில் 9 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. ஆகவே அமெரிக்கா ஏற்படுத்திய உலகப் பொருளாதாரச் சீரழிவுச் சுனாமியில் சிக்குண்டு போகாமல், வெளிநாட்டு முதலீடுகளை மட்டுப்படுத்தி, சொந்த நாட்டின் உள் கட்டுமானங்களை விரிவாகக் கட்டியெழுப்புவதற்கு தனது வளங்களை சீனா செலவிடுகிறது.

சீனப் புரட்சியின் போது கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி புரட்சியாளன் மாவோ முன்னெடுத்த மக்கள் புரட்சி என்கிற நகர்வு போன்று நகரத்திலிருந்து கிராமங்களை நோக்கிய மூலதன நகர்வினை தற்போதைய ஆட்சியாளர் மேற்கொள்கின்றார்கள். பொருளாதார அழிவிலிருந்து மேற்குலகம் மீண்டு எழுவதற்கு முன்பாக இரண்டு விடயங்களைச் சாதிக்க சீனா முயற்சிக்கிறது.

நாடு தழுவிய ரீதியில் உட்கட்டமைப்பை சீராக்குவதும் மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் சமூக பொருளாதாரக் கட்டமைப்புகளை வடிவமைப்பதும் சீனாவின் முதன்மையான இலக்குகளாக அமையும். அடுத்ததாக மேற்குலக தலைமைத்துவ நிர்மாணிப்பினூடாக உலக வல்லரசாக அமெரிக்கா மாறியது போன்று ஆசியாவில் தனது தனித்துவமான தலைமையை ஏற்படுத்துவதன் மூலம் உலகின் ஏக தலைமைத்துவத்தை தனதாக்கிக் கொள்ளும் நகர்வுகளை உருவாக்குதல் என்பதாகும்.

இதில் வளம்மிக்க அணிசேரா நாடுகளின் ஆதரவும், அணிசேரலும் சீனாவிற்கு மிகவும் அவசியமானது. அதேவேளை சீனாவிற்கு உலோக தாதுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மேற்குலகின் நண்பன் அவுஸ்திரேலியாவின் அச்சுறுத்தல்களைக் கூட சீனா பொருட்படுத்தவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். தாதுப் பொருள் ஏற்றுமதியில் ஜாம்பவானாக விளங்கும் "ரியோ ரின்ரோ' என்கிற பன்னாட்டு கொம்பனியுடனும் சீனா முரண்படுகிறது.

வியாபாரம் செய்ய வந்த இடத்தில் உளவு பார்க்கக்கூடாதென அச்சுறுத்துகிறது. ஆகவே இறுக்கமான அரசியல் கட்டமைப்புடைய ஒரு நாட்டில் சதி வேலைகளில் ஈடுபடுவது கடினமான காரியமென்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 20 மில்லியன் மக்களைக் கொண்ட சின்ஜியாங் மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்ற மதக் கலவரங்களை இனக்கலவரமாகப் பிரசாரம் செய்தன மேற்குலக ஊடகங்கள். அல்கைதாவின் ஊடுருவல், அக் கலவரங்களில் இடம்பெற்றிருப்பதாக சீன அரசு தெரிவித்ததும் மேற்குலகு அடங்கிவிட்டது.

மதக் கலவரங்களை இனக் கலவரமாக்கி அதற்கு பயங்கரவாதமென்கிற முலாம் பூசப்படுவதனூடாக தேசிய இனங்கள் மீதான அரச ஒடுக்கு முறைகள் மூடி மறைக்கப்படுவதனை உறும்கி விவகாரத்தில் தெளிவாகக் காணலாம். சீனாவின் நண்பர்களும் அதனை ஓர் உள்விவகாரமாகக் கருத வேண்டுமென அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்கள். தமக்குப் பொருந்தக்கூடிய விடயங்களில் ஒத்துப் போதல் என்பதும் சர்வதேச இராஜதந்திர உறவுகளில் எழுதப்படாத முதன்மை விதியாக அமைகிறது.

மே மாதம் வன்னியில் நிகழ்ந்தேறிய சம்பவங்களை இவ்வாறுதான் இந்த அணி சேராப் பொம்மைகள் பார்த்துத் தலையாட்டின. வவுனியா முகாம்களில் முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட தமிழ் மக்கள் படும் தின அவலங்களையிட்டு சில எதிர்க்கட்சிகளும் மேற்குலக ஊடகங்களும் அக்கறை கொள்ளும் அளவிற்கு இந்த அணிசேரா நாடுகள் கரிசனை கொள்ளவில்லை. இந்தியாவையும் சீனாவையும் மீறி மனிதாபிமான விவகாரங்களையோ அல்லது அறஞ்சார்ந்த பண்புகள் குறித்தோ தாம் பேசக் கூடாதென்பதில் இந்நாடுகள் மிகவும் உறுதியாகவிருக்கின்றன.

குறிப்பாக ஊடக சுதந்திரம் போன்ற ஜனநாயகப் பண்புகள் பேணப்பட வேண்டிய முதலாளித்துவ கட்டமைப்பு, இராணுவ மயப்பட்ட நிறுவனமாக மாற்றமடைந்தாலும் இவர்கள் கவலைப்படப் போவதில்லை. தேசிய இனங்களின் உரிமைப் போராட்டங்களெல்லாம் தாராண்மைவாத சந்தைப் பொருளாதாரம், பிராந்தியப் பாதுகாப்பு என்கிற பச்சைக் கண்ணாடியூடாக பார்க்கப்படுவதால் ஜோர்ஜ் புஷ் விட்டுச் சென்ற பயங்கரவாதப் பிரம்பால் அடித்து அதனை அழித்து விடலாமென இந்த அணிசேரா நாடுகள் விரும்பலாம்.

தமக்குள் மோதிக் கொள்பவர்கள் பேரினவாத ஜோதியில் கலந்து வன்னியில் நடந்தேறிய இன அழிவின் பங்காளிகளாக மாறிய முரண் நகை அண்மைக்கால வரலாற்றுப் பதிவுகளில் இருப்பதாகத் தெரியவில்லை. நாடு கடந்த தலைமைத்துவத்தை உருவாக்கி, போராட்டத் தேரினை இழுத்துச் செல்ல முயல்பவர்கள், இலங்கைத் தேசமானது ஏகாதிபத்தியங்களின் நவீன மோதல் களமாக மாற்றமடைந்துள்ளதென்பதை புரிந்து கொண்டார்களாவென்று தெரியவில்லை.

மறுபடியும் இந்தியாவை நோக்கி நீட்டப்படும் நட்புக் கரங்கள் இந்திய நலனிற்காக பயன்படுத்தப்படுமே தவிர ஈழத் தமிழ் மக்களின் விடிவிற்கானதாய் அமையப் போவதில்லை. இலங்கையில் சீன ஆதிக்கத்தை முறியடிக்க சகல விதமான வழிமுறைகளையும் மேற்கொள்ள இந்தியா எத்தனிக்கும்.

ஆனாலும் ஈழத் தமிழினத்தின் உரிமைக்காக இலங்கையைப் பகைத்து சீனாவை அனுமதிக்க இந்தியா முயற்சிக்காது. இந்திய நலன் நிறைவேற ஈழத்தமிழினம் ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்படுமே தவிர பங்காளிகளாக மாற முடியாது.

- இதயச்சந்திரன்

நன்றி: வீரகேசரி (19.07.2009)

Comments